Monday, December 26, 2005

முன்னிறுத்தல் (Presentation)

அன்பு நண்பர்களே நம்மில் பலர் பல நிறுவனங்களில் பணிப்புரிந்து வருகிறோம். அதில் சிலர் பல இடங்களில் உரையாற்றவும், உரையளிக்கவும், முன்னிறுத்தல் அளிக்கவும் வேண்டும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறு கட்டுரை:

சிக்கலானக் கருத்தையும் எளிமையாகவும் தெளிவாகவும் வெற்றிகரமாக சொல்லுங்கள்

பலர் கூடியிருக்கும் அவையில் பேசும்போது விறுவிறுப்பாகவும், அவையோருக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் முன்னிறுத்தல் அமைதல் வேண்டும். சரியான முறையில் தயார் செய்யப்படாத அல்லது நமது குறிக்கோளைப்பற்றிய தெளிவற்ற நிலையில் பேசும் போது மிகச் சிறந்த, நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் முன்னிறுத்தம் (Presentation) அல்லது நமது உரையளிப்பு முற்றிலும் வீணாகப் போய்விடும்.

தயார் படுத்துதல்: வெற்றிகரமாக உரையளிப்பிற்கு முக்கியமானக் காரணி.
உங்களது உரையளிப்பு ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் குறிக்கோளில் தெளிவான முடிவுடன் இருங்கள். உங்கள் முன்னிருக்கும் கேள்விகள்:

  • நான் ஏன் இந்த உரையளிப்பைக் கொடுக்கிறேன்?
    இந்த உரையளிப்பின் மூலம் அவையோருக்கு நான் சொல்ல விரும்புவது என்ன?
  • எப்படிப்பட்ட பார்வையாளர்களுக்கான உரையளிப்பை நீங்கள் அளிக்கப்போகிறீர்கள், அவர்களுக்கு இந்த உரையளிப்பின் தலைப்பு மற்றும் சாரத்தைப் பற்றி எந்த அளவுக்கு விவரம் தெரியும் என்பதைப் பொருத்து உங்களின் உரையளிப்பு அமையவேண்டும்

முன்னிருத்தலின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்?

உங்களது முன்னிருத்தலின் குறிக்கோளையும், நோக்கத்தையும், அதற்கானப் பார்வையாளர்களையும் நீங்கள் முடிவு செய்தப்பிறகு இப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான வேலை முன்னிருத்தலின் அமைப்பு.

முதலாவதாக இந்த முன்னிருத்தலுக்கு எவ்வளவு நேரம் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை பல சிறிய பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகமும் உங்களது முன்னிருத்தலில் ஒரு குறிப்பிட்டப் பகுதியை விளக்கும் வகையில் இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும், அதே சமயத்தில் உங்களது முக்கியமானக் குறிக்கோளிலிருந்து வெளியில் செல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக முதல் பகுதி அறிமுகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதியில் நீங்கள் உங்களது முன்னிருத்தலைப் பற்றிய சுருக்கமான நோக்கம், அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பிற்கானக் காரணம், அதன் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீகள்.போன்றவற்றை சுருக்கமாக விளக்கவேண்டும்.

அடுத்தப் பகுதியில் உங்கள் நிகழ்வுப் பட்டியலின் (Agenda) முதலில் உள்ள தலைப்பு இடம்பெற வேண்டும். அதைத் தொடர்ந்து நிகழ்வுப் பட்டியலின்படி மற்றத் தலைப்புகள் வரிசைப் பிரகாரம் அமையவேண்டும்.

உங்களின் அறிமுகம் மற்றும் மற்றப்பகுதிகளைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு ஏற்ப்பட்டப் பிறகு நீங்கள் சிறிது நேரம் செலவழித்து உங்களது முன்னிறுத்தலின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கவேண்டும். பொதுவாக ஒரு முன்னிறுத்தலில் அறிமுகம் மற்றும் முடிவுரைப் பகுதிகள் தான் மிக முக்கியமானப் பகுதிகளாகக் கருதப்படுகிறது. அவைதான் உறுதியான, அழுத்தமானத் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உங்கள் முன்னிறுத்தல் தெளிவாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இருக்க நீங்கள் செய்யவேண்டியது:

உங்களின் முன்னிறுத்தல் சிறியதாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும்.
பொதுவாக பார்வையாளர்கள் நீங்கள் சொல்லும் எல்லாக் கருத்துக்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால் மிக முக்கியமானக் கருத்துக்களை சிறப்பான வகையில் உயர்த்திக் கூறவேண்டும்.
உங்கள் முன்னிறுத்தல் மிகநீளமாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பார்வையாளர்களுக்கு சலிப்படையும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.

சில சமயம் பார்வையாளர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும். அப்போது நீங்கள் செய்யவேண்டியது:

  • நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று விளக்கவேண்டும் (உதாரணமாக, " இந்த முன்னிறுத்தலின்மூலம் நான் உங்களுக்கு சொல்லப்போவது என்னவென்றால்…" )
    முக்கியமான கருத்துக்களை தெளிவாகவும், விவரமாகவும், நிதானமாகவும் சொல்லவேண்டும்
  • நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறுபடியும் சொல்லவேண்டும் (அதாவது இறுதியாக அல்லது சுருக்கமாக… .) என்று முடிக்கவேண்டும்.
  • காட்சி சார்ந்த உபகரணங்களின் (visual aids) மூலம் உங்களின் முன்னிறுத்தலை பலப்படுத்தவேண்டும்:
  • காட்சி சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தும்பொழுது, காட்சிவில்லை (slide), ஒளிப்படக்காட்டி (projector) ஒளிக்காட்சி (video) மற்றும் கணினி உபயோகப்படுத்தும் பொழுது முதலில் அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதை சோதித்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக அவற்றை உங்களுக்கு சரியாக உபயோகிக்கிவும் தெரிந்திருக்கவேண்டும்.
  • ஒரே காட்சிவில்லையில் (slide) அதிகமான தகவல்களை இடுவதைத் தவிறுங்கள். பொதுவாக ஒரு வில்லையில் அதிக பட்சமாக ஐந்து அல்லது ஆறு வரிகள் இருக்கவேண்டும்.
  • சித்திரங்கள், அல்லது வரைப்படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும், அரங்கிலுளள அனைத்துப் பார்வையாளர்களாலும் சரியாகப் பார்க்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக படங்களில் உபயோகிக்கப் பட்டிருக்கும் வண்ணங்கள் கண்ணை உறுத்தாத வகையில் இருக்குமாறுப் பார்த்த்க்கொள்ளவேண்டும்.
  • பொதுவாக உங்கள் முன்னிருத்தல் காட்சிவில்லைகளின் தரத்தைப் பொருத்தே நிர்ணயிக்கப் படுகின்றன. அதனால் வில்லைகளின் வடிவமைப்பு (slide design) மற்றும் நடை (style) நீங்கள் சொல்லவிருக்கும் கருத்துடன் இணைந்து இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • உபரிப்பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். விளக்கப் படங்கள், அட்டவணை ஆகியவற்றை முடிந்தவரை முதலிலேயே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். முன்னிருத்தலில் குறிப்புகள் எழுதும் பொழுது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரியும் வகையில் பெரிய அளவில் அவற்றைத் தயாரிக்க வேண்டும்.

அரங்கத்தைத் தயார் செய்தல்

  • பொதுவாக முன்னிறுத்தல் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னதாகவே அரங்கைச் சென்று பார்க்கவேண்டும். இருக்கைகள் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் (நீள் வட்ட அல்லது அரை வட்ட வடிவில் இருக்கைகள் அமைந்திருப்பது கருத்தாடலுக்கு நல்லது. இருக்கைகள் வரிசைகளில் அமைந்திருந்தால் கருத்தாடலுக்கு இடைஞ்சலாக இருக்கும்).
  • உங்களதுக் காட்சி சார்ந்த உபகரணங்கள் எவ்விதம் பய்ன்படுத்தப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். வெளிச்சம், இடவசதி மட்டுமல்லாது அரங்கின் தட்பவெட்ப நிலையையும் ஆரம்பத்திலேயே சரிப்பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • ஒவ்வொரு இருக்கையாளரும் பயன்படுத்தும் வகையில் கையேடு, எழுதுக்கோல் முதலியவற்றை எல்லா இருக்கைகளுக்கு அருகிலும் வைக்கவேண்டும். குடித்தண்ணீர் மற்றும் டம்ளர்களை மேஜையில் சரியானப்படி வைக்கவேண்டும்.
  • நிகழ்ச்சி அரைமணி நேரத்திற்கும் அதிகமாக ஆகும்பட்சத்தில் சிறிய இடைவேளைகள் இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும். கழிவறை வசதிகள் அருகிலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.

தயாராதல்

உங்களது முன்னிறுத்தல் முழுவதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால் அதைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும் விதத்தில் பலமுறை ஒத்திகை ஓட்டம் செய்துப்பார்த்துக்கொளவது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை முழு முன்னிறுத்தலையும் வெள்ளோட்டம் பார்ப்பது மிகவும் பயன் தரும். எவ்வளவுகெவ்வளவு அதிகமாக நீங்கள் ஒத்திகை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு மிக நம்பிக்கையுடன் உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் அளிக்க இயலும், உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் கையாளும் விதத்தைப் பார்த்து அவையோருக்கும் ஒரு நல்ல ஈடுபாடு வரும். உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் சரியானப் படியும் முறையாகவும் தெரிந்திருக்கும்பட்சத்தில் உங்களால் மிகவும் நம்பிக்கையுடனும், உரக்கவும், தெள்ளத் தெளிவாகவும் விளக்கமுடியும்.

அவையோருக்கு சந்தேகங்களோ அல்லது மன ஈடுபாடோ ஆர்வக்குறைவோ உண்டாகாமல் பார்த்த்க்கொள்ளவேண்டியது மிக முக்கியம். உங்கள் குறிக்கோளில் நீங்கள் உறுதியாக இருங்கள். அவையோருக்கு நீங்கள் சொல்வதை நன்றாகப் புரியும்படி விளக்குங்கள். நீங்கள் சொல்லவிரும்புவதை ஆணித்தரமாக எடுத்துசொல்லுங்கள் அதன் மூலம் அவையோருக்கு அதிக ஈடுபாடு ஏற்படும், உங்கள் முன்னிறுத்தலும் வெற்றியடையும்.

சில முதன்மையானப் பயன் தரும் குறிப்புகளும், தொழில் நுணுக்கங்களும்:

உங்கள் முன்னிறுத்தல் வெற்றிகரமாக அமைய:

  • முடிந்தவரை அதிகமானப் புள்ளிவிவரங்களையும், குழம்ப வைக்கக்கூடியத் தகவல்களையும் தவிர்த்துவிடுங்கள். அப்படிப்பட்ட விவரங்களை தனியாக அச்சடித்து பிறகு படித்து பார்க்கும் விதத்தில் கையில் கொடுத்துவிடுங்கள்.
  • உங்கள் விளக்கத்தின்போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மறந்துவிட்டால் ஒரு கணம் நிறுத்தி உங்களின் குறிக்கோளை மனதில் கொண்டு வாருங்கள். இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையை மறந்திருந்தாலும், உங்களின் நோக்கம் மாறாமலும் புதிய பல கருத்துக்களும், எண்ணங்களும் தோன்றக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.
  • உங்களுக்கு வெற்றிகிட்டும் என்பதில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.
  • நிதானமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஆரம்பியுங்கள்
  • ஆரம்பிப்பதற்குமுன் அவையோருக்கு ஏதாவதுத் தேவவப்படுகிறதா என்றுக் கேட்டுக் கொள்ளுங்கள்.
  • பலவிதமானக் காட்சி சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தும்பொழுது பார்வையாளர்களை நேராகப் பார்த்து விளக்கக்கூடிய வகையில் உங்களுடைய இடத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
  • எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் முதுகைப் பார்வையாளர்கள் பார்க்கக் கூடிய விதத்தில் திரும்பிக்கொண்டு நிற்காதீர்கள்.
  • ஏற்கனவே விளக்கியப்படி ஒரே வில்லையில் அதிகமான விவரங்களை எழுதுவதைத் தவிறுங்கள். சிலர் முன்னிறுத்தல் அளிக்கவேண்டுமென்றால் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் விவரங்களை அப்படியே வெட்டி ஒட்டி விடுகிறார்கள். இது மிகவும் தவறான செயல். ஒரு கருத்து இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்துகளுக்கு வரிசைப் புள்ளிகளோ அல்லது வரிசை எண்களோ கொடுப்பது நல்லது. (bullets or serial number)

காட்சி வில்லைகளை (slides) உபயோகிக்கும் முறை:

  • எல்லா வில்லைகளும் ஒரே அமைப்பில் இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • முதல் வில்லையைப் போலவே எல்லா வில்லைகளும் ஒரே வண்ணத்திலும் எழுத்துருவிலும் இருப்பது நலம்.
  • பின்திரை வண்ணம் (background color) எழுத்துக்களை மறைக்காதவாறு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பொதுவாக வெண்மை, அல்லது வெளிர் நீலம் நன்றாக இருக்கும்.
  • வில்லைகளில் ஒரே எழுத்துருவை உபயோகியுங்கள், தலைப்பு, உபத்தலைப்புகளுக்கு எழுத்தின் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவும்.
  • வரைப்படங்களில் அதிக வண்ணங்களைத் தவிறுங்கள்.
    தேவையில்லாத வில்லைகளை நீக்கி விடுங்கள். (மறதியினால் நீக்காமல் பலக் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன)
  • இந்த முன்னிறுத்தலை மட்டும் தனியாக பெயரிட்டு சேமித்து வையுங்கள். ஒரு நகலும் எடுத்து வையுங்கள் (சில சமயம் உங்கள் கணி வேலை செய்யாமல் போய் விடும் பொழுது வேறு கணியை உபயோகிக்கக் கூடிய நிலைம உருவாகும் போது நகல் உங்களுக்கு உதவும்)
  • உங்களின் முன்னிறுத்தலை அச்செடுத்து வைத்துக்கொளவது மிகவும் முக்கியம்.
  • வரைப்படங்களை தவறுதலாகச் சொடுக்கும்பொழுது சில சமயம் அது அதன் மூல மென்பொருளுக்குப் போய்விடும். அதனால் வரைப்படம் முடிந்தவுடன், மூல மென்பொருளின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
  • எழுத்துக்களும், படங்களும் குதிப்பதும் நடனமாடுவதும் போனற இயக்கமூட்டல்களை (animation) முடிந்தவரைத் தவிறுங்கள். இவை பல சமயங்களில் முன்னிறுத்தலின் குறிக்கோளிலிருந்து தடம் மாற்றிவிடும் சக்திக்கொண்டவை. முடிந்த வரை மிகவும் எளிமையாக சொல்லவந்த விஷயத்தைச் சார்ந்ததாக இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியவை:

  • பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கவேண்டும்
  • ஒரே பார்வையாளரைப் பார்த்துப் பேசாமல் அனைவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பேசவேண்டும்.
  • உங்களது முன்னிறுத்தல் விறுவிறுப்பாக இருக்குமாறுப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறிது விறுவிறுப்புக் குறைந்தாலும், பார்வையாளர்களின் ஈடுபாடுக் குறைந்து விடும். சிலர் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.
  • நடு நடுவே புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் நகைச்சுவையைக் கலந்துப் பேசுவது மிகவும் பயன் தரும்.
  • உங்கள் முன்னிறுத்தலை ஒளிப்படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்காக நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சரியான இடத்தில் உங்கள் ஒளிப்படக்கருவியை பொருத்திவைத்துவிட்டால் போதும்.

இந்தியாவில் வெளியூர்களில் முன்னிறுத்தல் அளிக்கப் போகும்போது மறக்காமல் கீழ்க்கண்டப் பொருட்களையும் எடுத்துசெல்ல வேண்டும்.

  • பொருத்துக்குழி, தாங்கு குழி (Socket)
  • செருகி (Plugs)
  • ஊசி, பொருதிக்கம்பி, செருகாணி (செருகி ஆணி), ஆணி (Pin)
  • மின்வடம், மின்கம்பி (cable, wire)
  • வெண்திரை (white screen)
  • ஒளிப்படக் காட்டி: (Projector)

முடிவுரை:முன்னிறுத்தல் பற்றி ஏற்கனவே நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். நான் ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறேன். ஏதாவது குறைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். உங்கள் சந்தேகங்களையும் எழுதவும். எனக்குத் தெரிந்தவரை விளக்க முயற்சிக்கிறேன்.

Wednesday, December 14, 2005

இறுதிச்சடங்கு

எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள்
தொலைபேசியைத் துண்டியுங்கள்
எலும்புத்துண்டுடன் கத்தும் நாயை அடக்குங்கள்
பியானோவையும், தப்லாவையும் அமைதியாக்குங்கள்
சவப்பெட்டியைக் கொண்டுவாருங்கள்
அஞ்சலி செலுத்துபவர்கள் வரட்டும்.

விமானம் தலைக்குமேல்
ஆகாயத்தில் சுற்றியப்படி
அவரின் மரணச் செய்தியைப் பரப்பட்டும்
அன்புள்ளம் கொண்டோரின் வெண்கழுத்தில்
மென் துணியை அணிவியுங்கள்
போக்குவரத்துக் காவலரை
கருப்பு கையுறை அணியச் செய்யுங்கள்

அவன் தான் எனக்கு
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
என்னும் எல்லா திசைகளும்
என் வேலையின் வாரமும்,
எனது ஓய்வின் ஞாயிறும்.
என் பகல், என் நடு இரவு,
என் பேச்சு, என் பாடல்…
அனைத்தும் அவன் தான்
நான் நினைத்தேன்
இந்த அன்பு காலத்தையும் கடந்து நிற்கும் என்று.
அது தவறு.

நட்சத்திரங்கள் இப்போது தேவையில்லை.
எல்லாவற்றையும் வெளியேற்றிவிடு
நிலவை மூடி, சூரியனைப் பிரித்துப் போடு
கடலை தூரத்தில் கொட்டி,
காட்டை துடைத்து ஒதுக்கி விடு
இனி எப்பொழுதும் எதுவும்
எந்த நல்லதையும் செய்துவிட முடியாது

Translation from W. H. Aude's Funeral Blues (Thanks to Jagan)

என் பெயர் படும் பாடு!!!

எனது முழுப்பெயர் கலைவாணி,
ஆனா நா என்னை எல்லோருக்கும் கலை அப்படீன்னு அறிமுகப்படுத்துவேன். சும்மா ஒரு படம் காண்பிப்பதற்காக அல்ல. உதாரணமா அன்பே சிவம் படத்திலெ மாதவன் செய்யற மாதிரி (அன்பரசு – அர்ஸ்)… இது ஒரு நீண்ட வேதனைக் கலந்தக் கதை.
நான் இங்கு வந்தப் பிறகு பல விதங்களில் என் பெயர் உச்சரிப்பதை கேட்கத் தொடங்கினேன், இதில் வேதனைக்கலந்த உண்மை என்னான்னா எப்படி மாத்திப் போட்டாலும் என் பெயர் அருமையான அர்த்தங்கள் கொண்ட பல தமிழ் வார்த்தைகளை உருவாக்கிக் கொடுப்பதுதான்.
நான் முதன் முறையா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தப்ப எனது பேராசிரியர் எழுதியது:
அன்பு களவாணி (திருடன் - களவாணிப் பயலெ!)
சரி இது தட்டச்சு தவறா இருக்கும்னு விட்டுடலாம்…
அப்புறம் ஒரு வருசம் கழிச்சி, நான் ஒரு அலுவலகத்தில் பயிற்சிப் பெறுவதற்காக சேர்ந்தப் பொழுது அங்கிருந்தவர்கள் சேருவதற்கு முன்னாலெ ஒரு தேர்வு இருக்கு என்றனர்.
"ஹலோ கிழவாணியா பேசறது?"
"இல்லை நான் கலைவாணி!"
"ஓ , மன்னிக்கவும் களவாணி" (மறுபடியும்)
அதுக்கப்புறம் நா ஒரு முடிவு செஞ்சேன், நம்ம பேரு பெரிசா இருக்கறதனாலெ தான் இந்த மாதிரி பிரச்சனை, நாமளெ கலை அப்படின்னு வச்சிட்டா
… ஆனா கதை இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியலெ.
அதுக்கப்புறம் சமீபத்திலெ நா ஒரு புதிய அலுவலகத்தில் முழு நேர வேலையில் சேர்ந்தேன். முதல் நாள் அனைவருடனும் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
மேலாளர்..."முதலில் அனைவரும் நம்முடன் இணைந்துள்ள புதிய நண்பரை வரவேற்போம்", "மிஸ் குலை" (வாழைக்குலை) குலைக்குலையாய் முந்திரிக்காய்) (கைத்தட்டல் தொடர்ந்து சிரிப்பு) (டேய் என்னங்கடா..எல்லாரும் சேர்ந்து விளையாட்றீங்களா?)
அன்னிக்கு ஆரம்பிச்சது…
ஒருமுறை எனது மேலாளருடன் ஒரு புதியப்பணியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டு கிளம்பும்போது…
"சரி.. கலி… நீங்க இங்கெ எங்களுடன் வேலை செய்வது
சந்தோசமாக இருக்கிறது.(கலி முத்திப்போச்சு!..)
அது கலை (எனக்கு இதுத்தேவையா?)
ஓ.. காளி! (பத்ரகாளி)
ஹீ… ஹீ…. ரொம்ப நெருங்கிட்டீங்க (ப்போடாங்க்…)
அதுக்கப்புறம் நா எப்படியோப் போறங்கன்னு என் பெயரை சரியா உச்சரிக்க சொல்லிக்கொடுக்கறதெ முழுசா விட்டுட்டேன்."

பிறகு ஒரு நாள் காலை நேரத்தில் பணியிலிருக்கும் போது
"ஹேய், கிளை எப்படி போய்கிட்டிருக்கு? (மரக்கிளை)
நல்லா இருக்கு (சொல்லிட்டு திரும்பிட்டேன்..நமக்கு எதுக்கு இந்தப் பேர் திருத்தற வேலன்னுட்டு)
"இப்படித்தானே நீங்க உங்கப் பேரெ சொல்லுவீங்க?"
(ஆ..ஹா ஆரம்பிச்சுடாங்கய்யா…!!!)
"ஊ.. .. அது கலை"
"கொளாய்: (குழாய், குழாயடி சண்டை)(வேணாம்... சொல்லிட்டேன்….)
"கொலை?"
மறுபடியும் சொல்றேன், வேணாம்..... (அவனை கொலை செய்து விடலாமா என்று ஒரு கணம் நினைத்தேன்.....)
"களை?" (களைப் பிடுங்குதல்)
(ஐயோ...தாங்கமுடியலெயே, வலிக்குது, இன்னும் கொஞ்ச நேரம் போனா அழுதுடுவேன்..)
"பழகினா, கொஞ்ச நாளிலெ உங்கப் பேர் எனக்கு வந்திரும்னு நெனைக்கிறேன் ஹா, ஹா",
டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா, தமிழ்லெப் பாத்தா இரண்டே இரண்டு எழுத்துத்தாண்டா!!)
என்னடா…சந்திரமுகியிலெ தலைவர் "துர்கா" பேரெ தர்கான்னு நக்கலடிக்கிற மாதிரி…நம்ம பேர் ஆயிடுச்சுன்னு நெனைக்கும்போது …. எனது தோழி ஒரு புத்திசாலித்தனமான உபாயம் சொன்னாள்
அதாவது… எனது பேர் வர்ற மாதிரி வேறு வார்த்தையை சொல்லிச் சொல்ல சொன்னாள்.
அப்புறம் நான் கலைடாஸ்கோப் என்னும் வார்த்தையைச் சொல்லி (கலை வருது) என் பெயரெ எல்லோருக்கும் சொல்ல ஆரம்பிச்சேன்..
கலைடாஸ்கோப்பில் வரும் கலை... கலைடாஸ்கோப்பில் வரும் கலை...
இப்பவும் எல்லோரும் ஒழுங்கா சொல்றதில்லெ. அவங்க சொல்றாங்க கலாய்(கலாய்க்கிறது, கலாய் பூசறது)
"ஹேய் கலாய்!!?
"யா?"
ச்சும்மா உன் பேரெ சொல்லிப் பார்க்கலாமென்னுட்டு…
ஹா..ஹா…ஹா..
ஓஹோ.. ரொம்ப நல்லா இருக்கு (தூத்தெறி…)

ஏதோ வாந்தி எடுக்கிற மாதிரி இருந்தாலும் வாழ்க்கை அமைதியா ஓடிட்டிருந்தது, ஆனா ரொம்ப நாளுக்கப்புறம் திடீர்னு ஒரு நாள்… என்னுடைய கணினியில் இணைய தொடர்பு செயலிழந்துவிட்டது…அதனாலெ நான், வாடிக்கையாளர் உதவியை அணுகினேன் (என் போறாத காலம், அது சென்னையிலிருக்கும் ஒரு அழைப்பு நிலையத்திற்கு (Call Center!) போயிறிச்சி)
எனக்கு இந்த விசயம் தெரியலெ அதனாலெ நா அமெரிக்க உச்சரிப்பிலெ பேச ஆரம்பிச்சேன்..
"உங்கள் பெயர் மேடம்
"கலை"
"என்ன, திரும்பவும் சொல்லுங்கள் மேடம்
"கலை… கலைடாஸ்கோப்பில் இருப்பதுப்போல"
"எனக்கு சரியாகப் புரியவில்லை மேடம், உங்க தொடர்பு எண்ணைக் கொடுத்தால் நான் கோப்பில் பார்க்கிறேன்..."
(ஸ்… எண்ணைக் கொடுத்தேன்)
"ஹோ… கலைவாணி, சரியா" (ஒரு மாதிரி நக்கலானக் குரலில்… )
(அட பாவி மக்கா… நீ நம்மூரா??!! அமெரிக்கா உச்சரிப்பை நிறுத்திவிட்டு
நம்மூர் உச்சரிப்பில்..)
அந்தப்பக்கம் என்ன நினைக்கிறாங்கன்றது எனக்கு நல்லா தெரிஞ்சது…. பேரெ பாத்தா
"உர்ஸ் பாம்மிங்லி" ன்னு போட்ற மாதிரி இருக்கு
… ஸீனெப் போட்றது மட்டும் பிரின்ஸஸ் டயானா ரேஞ்சு க்கா!!!
"அண்ணா… சத்தியமா நா அந்த மாதிரி இல்லீங்கண்ணா!!!"

கலைவாணியின் ஆங்கில வலைப்பூவிலிருந்து (நன்றி)

பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான 13 வித்தியாசங்கள்:

பெயர்கள்:
சேது, காந்தி, ஹைமா, ஜரினா ஆகியோர் வெளியில் சாப்பிடச் சென்றால் அவர்கள் தங்களுக்குள் பெயர் சொல்லியேக் கூப்பிடுவார்கள்
புகாரி, ஞானியார், சுரேஷ், விக்கி சேர்ந்து வெளியில் சென்றால் அவர்கள் குண்டா, சொட்டை தலையா, வழுக்கை, அழுக்கா என்று அன்புடன் அழைப்பார்கள்.D (அனைவரும் ஜாலியாக எடுத்துக் கொள்ளவும்)

ஹோட்டலில்:
பில் வந்ததும் புகாரி, ஞானியார், சுரேஷ், விக்கி ஆகியோர் ஏகக்காலத்தில் 450 ரூபாய் பில் வந்திருந்தாலும் 500 ரூபாய் நோட்டை எடுத்து ஸ்டைலாக வீசுவார்கள்.ஒருத்தரிடத்திலும் வேறு சில்லறை நோட்டு இருக்காது. யாரும் திரும்பச் சில்லறை வேண்டும் என்று எதிர்ப்பார்க்க மாட்டார்கள் (எதிர்ப்பார்க்க மாட்டோம் என்பதுப் போல நடிப்பார்கள்)
ஆனால் பெண்கள் பில் வந்ததும் கணக்குப் போடத் தொடங்குவார்கள்.

பணம்
ஆண் 50 ரூபாய் மதிப்புள்ளப் பொருளை 100 ரூபாய் கொடுத்து வாங்குவான்.
பெண் 50 ரூபாய் கொடுத்து 100 ரூபாய் மதிப்புள்ள பொருளை ஆடித் தள்ளுப்படி அதிரடி விற்பனையில் தேவையே இல்லாமல் வாங்குவாள்.

குளியலறை:
ஒரு ஆணின் குளியலறையில் முக்கியமாக ஒரு பல் விளக்கி,பற்பொடி, சவரம் செய்ய உபயோகிக்கும் சோப்பு, மற்றும் கத்தி, குளியல் மற்றும் துணி சோப்பு, துடைக்கும் துண்டு இருக்கும். ஆனால் ஒரு பெண்ணின் குளியலறையில் பலவிதமான சுமார் 337 ஆண்களைக் குழப்பும் பொருள்கள் இருக்கும் (என்னக் கணக்கு என்றுத் தெரியவில்லை)

விவாதம்:
எந்த ஒரு விவாதத்திலும் பெண் சொல்வதே இறுதியான வார்த்தையாக இருக்கும். அதற்குப் பிறகு ஆண் ஏதாவது சொன்னால் அந்த வார்த்தை புதிய ஒரு விவாதத்திற்கு அடிக்கோலும். மீண்டும் முதலில் இருந்து ஆரம்பமாகும். (பழையக்குருடி, கதவைத் திறடி)

பூனைகள்:
பெண்களுக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும் (எத்தனைப்பேருக்கு?)
ஆண்களும் பூனையைப் பிடிக்கும் என்று சொல்வார்கள், ஆனால் பெண்கள் பார்க்காத நேரத்தில் அதற்கு ஒரு உதை விடுவார்கள்.

எதிர்காலம்
கணவன் கிடைக்கும் வரை ஒரு பெண் தன் எதிர்காலத்தைப்பற்றிய நினைப்பில் கவலையுடன் இருப்பாள். ஒரு ஆண் தனக்கு கல்யாணம் ஆகும் வரை (மனைவி வரும் வரை) எதிர்காலத்தைப்பற்றி சிந்திக்கவே மாட்டான்.


வெற்றி:
ஒரு வெற்றிகரமான ஆண் தனது மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பான்.
ஒரு வெற்றிகரமானப் பெண் அப்படிப்பட்ட கணவனைக் கைப்பிடிப்பாள்.

திருமணம்: ஒரு பெண் தன் கணவன் மாறிவிடுவான் என்று எதிர்ப்பார்ப்பாள், ஆனால் அவன் மாற மாட்டான். ஒரு ஆண் தன் மனைவி மாற மாட்டாள் என்று நினைப்பான், ஆனால் அவள் மாறி விடுவாள்.

உடை மாற்றுதல்: ஒரு பெண், கடைக்குச் செல்வதற்கும்,செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கும், குப்பையை வெளியேப் போடப் போவதற்கும், தொலைப்பேசியில் பதில் சொல்வதற்கும், புத்தகம் படிப்பதற்கும், தபால்களைப் படிப்பதற்கும் உடை மாற்றுவாள்.
ஒரு ஆண் கல்யாணம் அல்லது கருமாதிக்குப் போவதற்கு உடை மாற்றுவான்.

இயல்பு:
ஆண்கள் தூங்கப் போகும் போது எப்படி இருப்பார்களோ அப்படியே தூங்கி எழும்போதும் இருப்பார்கள்
ஆனால் பெண்கள் ஒரு மாதிரி சோகையாக இருப்பார்கள்

குழந்தைகள்:
ஒரு பெண் குழந்தைகளைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பாள். பல் மருத்துவரை பார்க்கவேண்டிய நேரம், காதல், நெருங்கிய நண்பர்கள், விருப்பமான உணவு வகைகள், ரகசியமான பயங்கள், எதிர்ப்பார்ப்புகள், நம்பிக்கைகள், கனவுகள்.
ஒரு ஆண் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதைக் கூட பல சமயங்களில் மறந்து அஜாக்கிரதையாக இருப்பான்

இறுதியாக
கல்யாணமான ஆணகள் தங்கள் தவறுகளை மறந்துவிடவேண்டும். ஏனென்றால் ஒரே விசயத்தை இரண்டுப் பேர் ஞாபகம் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

நன்றி: விக்கி



Tuesday, September 27, 2005

ஒரு நம்பிக்கை துரோகம்

ஓரு நம்பிக்கை துரோகம்
முதலில் அவனை வெளியே இழு!
அவனது வீட்டை
அடிக்கல்லிலிருந்து தோண்டி எடுத்து
ஒரு ஓரத்தில் கட்டிலைப்போல சாய்வாய் நிறுத்தி வை!
பிறகு அவனை தூக்கிமூடிய கதவுக்கு மேலே இருத்து!
அவன் நிலை தடுமாறுவான்.

அவன் கைகளை பின்னால் கட்டி
கண்களை ஒரு வண்ணப்பொய்யினால் மூடு!
எது செய்தாலும் அவனிடம்
எந்தவித அசைவுகளும் இருக்காது

இவை அனைத்தும் தன் நன்மைக்கே
எனக்க்கூட அவன் ஒரு கணம் எண்ணக்கூடும்!

இப்போது அவன் வீட்டுக் கிணற்றிலிருந்து
கயிறை எடுத்து சுருக்குப் போட்டு
அவன் கழுத்தில் மாலையாய் போடு!
அவன் ஒன்றும் செய்யமாட்டான்!

பூஜையறைக்கிண்டியைப் போல
அசைவேதும் இருக்காது அவனிடம்

கயிற்றின் மறுமுனையை
அவன் வீட்டின்முன் இருக்கும்
பழைய மரத்தில் கட்டு!

அவன் உன்னை வணங்குவான்.

இப்போது கேள், அவனுக்கு என்ன வேண்டுமென்று!

தனது வீட்டில் அமைதியாக
வாழவேண்டுமென்று அவன் சொன்னால்
மெதுவாக எழுந்து அவனுக்காக
அவன் வீட்டுக் கதவைத் திறந்துவிடு!

அவன் வேதனையில் துடிப்பான்
ஆனால் துடிப்பில் விண்ணப்பமிருக்காது
அவன் மிக விரைவில் இறந்து விடுவான்
பிறகு அவனுக்கும் உனக்கும்
எந்த வித்தியாசமும் இருக்காது


இந்தியில் : குன்வர் நாராயண்

மொழியை தொலைத்துவிட்டேன்

மொழியை தொலைத்துவிட்டேன் என்று
எந்த அர்த்தத்தில் சொன்னாயென
என்னை நீ கேட்டாய்

நான் கேட்டேன்,
உன்னிடம் இரண்டு மொழிகள் இருந்து
அதில் தாய்மொழியை தொலைத்துவிட்டு,
மற்றொன்றையும் சரியாக அறியாமல் இருந்தால்
என்ன செய்வாய் என்று.

நீ நினைத்தாலும் கூட
உன்னால் இரண்டு மொழிகளையும்
ஒரே நேரத்தில் பேச முடியாது

நீ வசிக்கும் இடத்தில்
அயல் மொழிதான் பேசவேண்டும் எனும்போது
நீ உமிழவில்லையெனில்
உன் தாய்மொழி அழுகி அழுகி
உன் வாய்க்குள்ளேயே மரித்துவிடும்

அதைத் உமிழ்ந்துவிட்டேன்
என்றே நான் நினைத்தேன்
நேற்றைய என் கனவில்
அது மீண்டும் வரும் வரை.

திரும்பவும் வளர்ந்து வந்தது,
அதன் கிளைகள் நீண்டு வளர்ந்தன,
ஈரத்துடனும், முறுக்கிய நரம்புகளுடனும்
அது மேலும் மேலும் வளர்ந்தது
அது அயல் மொழியை இறுக்கமாக கட்டியது.
மொட்டு மலர்ந்தது,
மொட்டு மலர்ந்தது எனது வாயிலிருந்து
அது அயல் மொழியை ஓரமாக தள்ளியது
ஒவ்வொரு முறையும் தாய் மொழியை
மறந்துவிட்டேனோ என்ற நினைப்பும்,
தொலைந்து போனதோ
என்ற எண்ணமும் வருகையில்.
என் வாயிலிருந்து மீண்டும் மலர்கிறது

அமைதி விற்கும் அங்காடி

அமைதியை விற்கிறான் என் அண்டைவீட்டுக்காரன்.
அவனுடைய ஒலிப்பெருக்கிக் கடை
என் பக்கத்து வீடு

சூரியன் உதிப்பதற்கு இரண்டுமணி நேரத்திற்குமுன் ஒலிப்பெருக்கியை இயக்காமலிருக்க அவனுக்கு நான் மாதம் நூறு ரூபாய் கொடுக்கிறேன்.

அவனுக்குத் தெரியும் அமைதியின்றி வாழமுடியாத என்னைப் போன்ற பல துரதிர்ஸ்டசாலிகளை
அவனுக்குத் தெரியும் இனி வரும் நாட்களில் நல்ல குடிதண்ணீருக்கும், மாசில்லாதக் காற்றுக்கும் ஏற்படும் பற்றாக்குறையைவிட அமைதிக்கு அதிகப் பற்றாக்குறை ஏற்படுமென்று

காலத்தின் சுழற்சிகள் முடிந்துவிட்டன என்றும் இனி வரும் நாட்களில் அமைதியை விற்று தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும்

இந்தியாவைப் போனற விலைவாசி ஆகாயத்தை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் மாதம் வெறும் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரம் அமைதியைத் தரும் அவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

Tuesday, June 21, 2005

வாடி வாசல்

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா எழுதிய குறுநாவல்.

இந்த குறுநாவலை நம்மில் பலர் படித்திருக்கலாம். ஆனாலும் ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் ஒரு புது உணர்வு ஏற்படுகிறது என்பது நிஜம்.

இந்த நாவலின் மையக்கருத்து ஜல்லிக்கட்டுப் பற்றியது. மாடு அணைவதை இவ்வளவு, விவரமாகவும், விறுவிறுப்பாகவும், அழகாகவும் யாராவது இதுவரை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு ஒருநாள் கிரிக்கெட் மாட்ச் (வேண்டாம்) ஒரு கால்பந்தாட்ட பைனலை பார்ப்பது போன்ற உணர்வுடன் நம்மைக் கொண்டு செல்கிறது.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் லாவகத்திற்காக ஒரு சபாஷ்

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.

இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன் எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது.

ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

அரட்டை அரங்கம்

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவி குவைத் அரட்டை அரங்கத்தில் என் புத்திரி பேசுகிறாள் என்ற தகவல் கிடைக்க, சரி வேலைக்கு கொஞ்சம் லேட்டா போனாலும் பரவாயில்லெ எப்படியாவது பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஞாயிறு காலை
நண்பரின் போன், என்னப்பா உம்பொண்ணு அரட்டை அரங்கத்திலே பேசறா, பாக்கபோறயா, இல்லெ, இன்னிக்கும் வேலெ வேலென்னு போயிருவியா என்று குரல் கொடுத்தார்.

சனிக்கிழமையிலிருந்தே வீட்டிலெ சன் டிவி தகராறு செஞ்சிட்டிருந்தது. சரி ஞாயிற்றுக்கிழமை காலையிலே சரி ஆயிடும்ன்னு நினெச்சோம், ஆகலெ, சரி நண்பர்கள் வீட்டிற்குப் போய் பாக்கலாம்னு நினெச்சா,
ஆபிஸிலிருந்து தொல்லைபேசி, உடனே வரசொல்லி, 8.30க்கு ஒளிப்பரப்பு, இப்ப மணி 7.50, ஆபிஸுக்கு அடிச்சி பிடிச்சிப் போய் சேந்தா மணி 8.15,
அங்கிருந்து பேங்க் போகவேண்டி இருந்தது, மறுபடியும் ஓட்டம், பேங்க் வேலெ முடிச்சிப் பார்த்தா மணி 8.26, இன்னும் 4 நிமிசந்தான் இருந்தது.
சரி பக்கத்திலிருக்கிற திருச்சி ஓட்டல்லெ போய் பாக்கலான்னு அங்கெ போனா அவங்க 12 மணிக்குத்தான் கார்டு சிஸ்டத்திலெ வரும்னுட்டாங்க.
மண்டெக்காஞ்சி போய் இன்னொரு ஓட்ட்ல்லெ போய் பார்த்தா அங்கெயும் இல்லே. வெயில் வேறெ கொளுத்துது
நொந்து நூலாகி போயி, சரி ஒரு இட்லி வடையாவது சாப்பிடலான்னு ஆர்டர் கொடுத்துட்டு நிக்கும் போது நம்ம நண்பர் ஒருத்தர் வந்தாரு,
என்னப்பா இந்த நேரத்திலெ இங்கே?
இன்னிக்கு அரட்டை அரங்கம் பார்க்காலம்ன்னு வந்தேம்பா,
எம்பொண்ணு பேசுது அது என்னாடான்ன எங்கேயும் வர்றதில்லெ
அப்படியா? எனக்கு தெரியவே இல்லெயே, முபாரக்கியா ஹோட்டலுக்கு போனா இருக்குமேன்னாரு.
ஆர்டரே அப்படியே கேன்சல் செய்துட்டு முபாரக்கியா ஓடுனா அங்கெ ஜீ ம்யூசிக் ஓடுது.
அப்புறம் ஓட்டல்காரங்கிட்டெ பேசி
அவன் சன் டிவி போட்டப்பொ 8.47.
பொண்ணுப் பாதி பேசி முடிஞ்சிருச்சி,
மீதி பாதியெ பார்த்துட்டு,
இட்லி வடெயெ சாப்ட்டுட்டு வந்தேன்.
ஏதோ பொண்ணு மூஞ்சியெயாவது பாத்தோமெங்கற சந்தோசம்தான்.

Monday, June 20, 2005

மூன்றரை வருட அவஸ்தை

நேற்று பயங்கர வெயிலில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (வெயில் மட்டுமல்ல, சூடான மணல் தூசியும் சுமார் 55 டிகிரிஇருக்கலாம்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து பிக்கப் செய்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்ப்ட்டுவிட்டு கிளம்பும் போது,

மனைவி: நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் மெட்டி ஒலி பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ
மறுத்துப் பேச முடியுமா நான். சரி, சீக்கிரம் வந்துரு.

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும்,
வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது
ஹலோ, அண்ணா, நா சந்திரசெகரண்ணா,
ஒரு முக்கியமான விசய்மண்ணா,
நீங்க வீட்லெதானெ இருக்கீங்க
ஆமா என்ன விசயம்?
இல்லெண்ணா நா நேரில் வந்து பேசறேன்!
சரி வா.
பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி
அண்ணா நாந்தான் சந்திரசேகர்,
அண்ணா உங்க வீட்டிலெ மெட்டி ஒலி வருதா அண்ணா?
இல்லெ
அப்படியா, அக்கா எங்கே?
தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?
அது ஒண்ணுமில்லெண்ணா, மெட்டிஒலி பாக்கணும்னுதான்!
பேசி வைக்கப்பட்டது.
(என்னுடைய நிலைமெ எப்படி இருக்கும்)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம்.
எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.
அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெவர்தா?
டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.
என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன். தூக்கம்வந்தால்தானே!?
கொடுமை...

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று
நைசா, என்ன ஆச்சு என்றுக் கேட்டால்,
க்ளைமாக்ஸ் சரியில்லெ என்றாள்.
பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்
பின்குறிப்பு: மெட்டி ஒலி முடிந்த கையோடு புது தொடர் ஆரம்பிக்கிறார்களாம் (செத்தோமடா சாமி)
இதுக்கு வைரமுத்து, கலைஞர், மனோரமா இவர்களின் தலைமையில் விழாவேறெ!.

ஐய்யயோ என்ன ஒரே கூட்டமா வருது....
கையில் என்னன்னமோ இருக்குதே,?
அட நம்மளெத்தான் மொத்த வர்றாங்க டோய்!..
விடு ஜூட்.....

Sunday, June 05, 2005

குவைத்தில் லியோனியின் பட்டிமன்றம்

சமீபத்தில் லியோனி தன் பரிவாரங்களுடன் குவைத்தில் பட்டிமன்றம் நடத்த வந்திருந்தார். அவர் ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்ததால் இங்குள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக இருந்தார். குவைத் செளத் இண்டியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

லியோனி என்றாலே ஆழமான கருத்துகளை முன் வைக்காது, சினிமா சம்பந்தப்பட்டே தன் பட்டிமன்றத்தை நடத்தி செல்வார் என்றக் கருத்தை பொய்யாக்கும் வண்ணம் அவரது பட்டிமன்றம் இருந்தது

விசாப் பிரச்சினைகளால் லியோனி வருவாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. அப்படியான ஒரு வதந்தி உருவாகியிருந்தது.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பல நண்பர்களை சந்தித்தப் பொழுது பலரும் இதே கேள்வியைக் கேட்க, அவருக்கும் எப்படியோ ஆகிவிட்டது.

சிலர் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளைக் கூட திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

இருந்தாலும் நிகழ்ச்சி அன்று, வாய் மொழி விளம்பரம் மூலம் எதிர்ப்பார்த்ததற்கும் மேலேயே ரசிகர்கள் வந்திருந்தனர்.

இந்த முறை, முதல் முறையாக லியோனி குழுவினர் தம் இயல்புக்கு மாறாக சினிமாவை ஒதுக்கிவிட்டு, நடப்பு நிகழ்ச்சிகளையும், தமிழிலக்கியங்களையும் மேற்கோள் காட்டி மிக அருமையாக உரையாற்றினர்.

ரசிகர்களின் தொடர்ந்த கரகோஷமும், ஆரவாரமும், சிரிப்பும் பட்டிமன்ற அங்கத்தினர்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தர, இரண்டரை மணி நேரத்தில் முடிய வேண்டிய நிகழ்ச்சி, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

ரசிகர்களின் இந்த அருமையான ரசனை லியோனி குழுவினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்லவேண்டும். அதை அவர் முகத்தில் காண முடிந்தது.

பின்னர் லியோனி குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அனைவரின் பேச்சிலும் மிகச் சிறப்பானதொரு பட்டிமன்றத்தில் பங்குப் பெற்றது குறித்தான பெருமிதம் இருந்தது.

லியோனியும் தான் நடத்தியப் பட்டிமன்றங்களில், தனக்கு ஆத்ம திருப்தியைத் தந்த சில பட்டிமன்றங்களில் இந்த குவைத் பட்டிமன்றம் மிகவும் முக்கியமானது என்றார்.

திரு லியோனி தமிழ் இலக்கியத்தையும், நடப்பு நிகழ்வுகளையும் முன் வைத்து இதுபோல பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழ் இலக்கியத்தை பாமரனுக்கும் எடுத்து செல்வதுமட்டுமல்லாது,
தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும் என்றும் எதிர்நோக்குகிறேன்.

Wednesday, June 01, 2005

கனவினில் மரணம்

கனவினில் நான் மரணிக்கிறேன்
என் மரணத்தை நானே பார்க்கிறேன்

கனவில் மரணம் வித்தியாசமானது அதிலும்
நம் மரணத்தை நாமேப் பார்ப்பது

கனவு மரணம் பயமில்லாதது அதைப்
பார்த்து நாம் அழுவதில்லை

கனவினில் மரணம் பார்த்து விழித்தப் பொழுது
நிஜமரணத்தின் அச்சம் மனதில் சிறுதுளியாய்..

அறிமுகம்

பல வலைப்பூக்களை தொடர்ந்து படித்தப் பொழுது ஏன் நாமும் ஒரு வலைப்பூவைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தினால் உதித்ததுதான்
இந்த என் பக்கம்.

இதுவரை குழுமங்களில் மட்டுமே எழுதி வந்த நான் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகின்றேன். தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.

உங்கள் விமர்சனங்கள் எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்கும்.

நன்றி