Saturday, December 23, 2006

அழியாதக் கோலங்கள் - 2

எங்க ஊரெ சுத்தி மலைகளும், தேயிலை தோட்டங்களும், கொஞ்சம் தூரம் சென்றால் காடுகளும் இருக்கும். எனக்கு சின்ன வயசிலிருந்தே காடுகளின் சுற்றுவதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி. எனக்கு நினைவு தெரிந்து நான் காடுகளில் நண்பர்களுடன் சுற்ற தொடங்கிய போது எட்டு ஒன்பது வயதிருக்கும். அதற்கு முன்பும் அம்மாவோடு காடுகளில் சுள்ளி பொறுக்க போயிருக்கிறேன்.

மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து பையை தூக்கிப்போட்டுவிட்டு, கிடைக்கும் வரக்காப்பியையும் ஒரு மடக்கு குடித்துவிட்டு காட்டை நோக்கி படையெடுப்பது அடிக்கடி நடக்கும்.

எங்க ஊருக்கு அருகிலுள்ள காட்டில் குரங்குகள் அதிகம் இருப்பதால் கொரங்குப்பிள்ளை சோலை என்றே அதற்கு பெயர். அது என்னவோ தெரியவில்லை பெரிய மிருகங்கள் அவ்வளவாக அதிகம் பார்க்க வாய்ப்பு இருப்பதில்லை. ஒரே ஒரு முறை புலியை பார்த்திருக்கிறோம்.
மற்றப்படி காட்டாடு, காட்டெருமை, குள்ளநரி, முயல், காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, கீரி, பாம்புகள், மான் என இப்படித்தான்.

பொதுவா சனி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே நாங்கள் காட்டு வாசிகள் ஆகிவிடுவோம். ரொம்ப தூரம் போவோம். அதாவது காலையில் வீட்டில் கேழ்வரகு களியை சாப்பிட்டுவிட்டு போனால் மாலை வரை காடுகளில் சுற்றுவதும், பழங்கள் பறிப்பதும், காட்டாறில் குதித்து நீச்சல் அடிப்பதும், காட்டுக்கோழிகள், முயல்களை துரத்துவதும், ஆற்றில் நண்டு பிடிப்பதும் என எதாவது ஒன்று நடந்துக்கொண்டே இருக்கும்.

எங்கள் குழுவில் மொத்தம் நாலு பேர்.... மணிகண்டன், தேவன், சதாசிவன், நான். இதில் மணிகண்டனும் நானும் மரமேறுவதில் கொஞ்சம் கில்லாடிகள். மற்ற இருவரும் கொஞ்சம் பயப்படுவார்கள். எனக்கு எந்தெந்த இடத்தில் எந்தெந்த பழமரம் இருக்கு என்பது அத்துப்படி. அதனால் நண்பர்கள் என்னையே தொடர்வார்கள்.

நாவல் பழ காலத்தில் சில நாட்களுக்கு முன்பே போய் மரங்களை நோட்டமிட்டுவிட்டு வந்துவிடுவோம். காய்களை பார்த்து எப்பொழுது பழமாகும் என ஒரு கணக்கு வைத்து சரியாக அந்த நாளில் அங்கு போவோம்.பொதுவாக மலைக்காடுகளில் கிடைக்கும் நாவல் பழங்கள் சிறியதாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். சமவெளியில் அந்த சுவையை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை. சில நாவல் மர இலை குருத்துகளும் சுவையாக இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான் நான், மணிகண்டன், தேவன் மூன்று பேரும் ஒரு நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்து சாப்பிட்டுக்கொண்டும். பைகளில் நிரப்பிக்கொண்டும் இருந்தோம். திடீரென்று மணிகண்டனின் கத்தல்..... பயந்துபோய் அவனெ பாத்தா மரத்திலிருந்து கீழே புதரில் விழுந்து கிடந்தான். எனக்கு பயமும் பதட்டமும், தேவனை பார்த்தேன். அவனும் என்னை போலவே பதட்டத்தில். மணிகண்டான்னு குரல் கொடுத்தேன். அவன் புதரிலிருந்து சிரமப்பட்டு எழுந்து பக்கத்து மரத்தை பாக்க சொன்னான்.

திரும்பினால் அந்த மரத்தில் ஒரு மலைப்பாம்பு மெதுவாக நகர்ந்துக்கொண்டிருந்தது.

தேவன் அதற்குள் மரத்திலிருந்து இறங்கி்யிருந்தான். எனக்கு குதிப்பதற்கு பயம். கீழே விழுந்த மணிகண்டனும், தேவனும் பதட்டத்தில் என்னை அவசரப்படுத்துகிறார்கள். நானோ கை, கால் நடுங்க உதறல் எடுத்துக்கொண்டெ, குதிக்கலாமா, வேண்டாமான்னு.... பின்னெ .....நல்ல உயரம். முப்பது அடி இருக்கும்.

அப்புறம் என்ன... காலும், கையும் நடுங்க வேகவேகமாக இறங்கி, பாதியிலெயே புதருக்குள் குதித்து, கை, கால் எல்லாம் சிராய்ப்பு, ரத்தத்துடன் ஓட்டம்..... பத்து நிமிடம் ஓடியப்பின் மூச்சு வாங்க முன்னாலெ ஓடினவங்களெ பாத்தா, அவனுக கொஞ்ச தூரத்தில் இன்னொரு மரத்தில் ஏறிகிட்டு இருந்தானுக..... இந்த மணிகண்டன் விழுந்தும் கூட ஒண்ணுமே நடக்காதவன் போல மரம் ஏறுவதை பார்த்து அசந்துட்டேன்.

நான் மட்டும் விடுவேனா என்ன... ஓடிப்போய் தொத்திகிட்டேன்.

இளங்கன்று பயம் அறியாதுன்னு இதுக்குத்தான் சொன்னாங்களோ?

தொடரும்.

Monday, December 11, 2006

அழியாத கோலங்கள் - 1

அப்ப நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதுசு. ஐந்தாம் வகுப்பு வரை கீழ் நிலை பள்ளி(எலிமெண்டரி ஸ்கூல்). பிறகு அந்த பள்ளிக்கு அடுத்து இருக்கும் உயர்நிலைப் பள்ளி ஒரு நாள் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் வராததால் நாங்க எல்லோரும் வழக்கம் போல கத்திக்கொண்டும் குறும்பு செய்துக்கொண்டும் இருந்தோம்.

பக்கத்து அறை எட்டாம் வகுப்பு. அங்கு ஆஙகில பாடம் நடந்துக்கொண்டிருந்தது. நடத்தியவர் தலைமை ஆசிரியர். நாங்கள் கத்தியது அவருக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கிவிட்டது. உடனே எங்கள் வகுப்புக்கு வந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். சாதாரணமாகவே அந்த தலைமை ஆசிரியர் மீது எல்லோருக்கும் பயமும் மரியாதையும் இருக்கும். அவரை பார்த்து நாங்களும் பயந்து அமைதியாகிவிட்டோம். அவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு எங்கள் அனைவரையும் எட்டாம் வகுப்பிற்கு போய் உட்கார சொன்னார்.

வகுப்புகள் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், பெஞ்சுகளில் வகுப்பு பையன்கள் இருக்க. நாங்கள் முன்னால் தரையில் அமர்ந்தோம். எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தார். எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று ஒரு எழவும் புரியவில்லை. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் திடீரென மேஜைமீதிருந்த தனது சாவிக்கொத்தை எடுத்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டி "வாட் ஈஸ் திஸ்?" என்றார். யாரும் பதில் கூற வில்லை. இரண்டு மூணு பேரிடம் கேட்டார். எல்லோரும் திருதிருவென முழித்தார்கள். உடனே தரையில் உட்கார்ந்திருந்த எங்களைப் பார்த்து "வாட் ஈஸ் திஸ்? என்று கேட்க, நான் உடனே எப்பவும் போல முந்திரிக்கொட்டயாக எழுந்து "சார் திஸ் ஈஸ் சாவி!" என்றேனே பார்க்கலாம்.

வகுப்பறையில் ஓவென்ற சிரிப்பு....

அதற்கு பிறகு பள்ளி இறுதி வகுப்பு வரையும் அவர் என்னைப் பார்க்கும்போது புன்னகைப்பதும் எனக்கும் அந்த ஞாபகம் வருவதும் தவிர்க்க முடியாத விசயமாகிவிட்டது.

Wednesday, November 08, 2006

ஒரு மருத்துவமனை விஜயம்

நேற்று இரவு சுமார் பத்து மணி இருக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு நடை போகலாம் என்று நானும் நண்பரும் கிளம்பினோம். வீட்டுக்கு அருகில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் இருக்கிறது. அங்கு யாரும் அதிகம் வருவதில்லை. அதனால் அடிக்கடி அங்கு போய் பேசிக்கொண்டே நடப்போம். ஒரு முப்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் உடம்பில் லேசான அரிப்பு! வீடு நெருங்க நெருங்க அரிப்பு அதிகமாகி உடல் முழுவதும் பரவி விட்டது. வீட்டில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மனைவியும் அவரது தங்கையுடன் அருகிலிருக்கும் பூங்காவுக்கு நடை பழக போயிருந்தார்கள். நண்பர் அப்படியே வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி போய்விட்டார். குழந்தைகள் வீட்டினுள் நல்ல தூக்கத்தில். வீட்டு சாவி கொண்டுப் போகாமல் போய்விட்டேன். மணி அடித்தும் தட்டியும் குளிர்சாதனம் இயங்கி கொண்டிருந்ததால் குழந்தைகளுக்கு கேட்கவில்லை. மிகவும் முடியாமல் வீட்டிற்கு வெளியே படிக்கட்டில் உட்கார்ந்தேன். ஆனாலும் எதுவும் குறைந்தபாடில்லை. தலைச் சுற்றல், அரிப்போ தாங்க முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. மெதுவாக எழுந்து எதிர் வீட்டு நண்பரின் வீட்டுக்கதவை தட்டினேன். அவர் கதவை திறந்ததும் முடியாமல் விழுந்துவிட்டேன். எனக்கு சுய நினைவு போய்விட்டது. (இதற்கு மேல் அவர்கள் பின்னர் சொன்னது) அவர்களுக்கு பதட்டமும் பயமும் ஒரு சேர பற்றிக்கொண்டது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் அவரும் அவர் மனைவியும் என்னை மிகவும் சிரமப்பட்டு சோபாவில் படுக்க வைத்திருக்கிறார்கள்.
அந்த அம்மா ஒரு செவிலித்தாய் (நர்ஸ்). உடனே நாடி துடிப்பு (பல்ஸ்), இரத்த அழுத்தம் பார்த்திருக்கிறார்கள். அவை எதுவுமே சரியாக இல்லை. துடிப்பு சுத்தமாக தெரியவில்லை. மிகவும் பயந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிலோ யாரும் இல்லை.

நண்பர் மிகவும் பயந்து போய் அருகிலிருந்த உணவகத்தில் சிலரை கூப்பிட்டிருக்கிறார். ஒரு சிலர் வந்து பார்த்து விட்டு தங்கள் வேலையை பார்க்க போய்விட்டார்கள். வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத்த அவருக்கு யாரும் உதவ அந்த சமயத்தில் கிடடக்கவில்லை. பிறகு மேல் வீட்டு நண்பரை கூப்பிட்டிருக்கிறார். அவர் உடனே வந்து எனது தம்பிகளை தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். எல்லோரும் பதட்டத்துடன் வந்திருக்கிறார்கள். மனைவியும் வந்துவிட்டாள். இப்பொழுது அந்த செவிலி எனது முகத்தில் தண்ணீர் தெளித்திருக்கிறார்கள். லேசாக நினைவு திரும்பியது. மனைவி ஒரே அழுகை. எனக்கு சிறிதளவு நினைவு வர தொடங்கியிருந்தது. அந்த செவிலி மறுபடியும் சோதனை செய்தார்கள். இப்பொழுது எல்லாமெ ஓரளவுக்கு சரியான நிலைக்கு திரும்பியிருந்தது.

எல்லோரும் மருத்துவமனைக்கு உடனே போகலாம் என்றார்கள். நான் வேண்டாம் சரியாகிவிடும் என்றேன். ஆனால் எதிர் வீட்டு நண்பரும், அண்ணி, தம்பிகளும் கட்டாயப்படுத்தி கூட்டிக்கோண்டு போனார்கள்.

இங்குள்ள மருத்துவமனைகளில் இரவு நேரத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நண்பருக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கும் போல. தள்ளு நாற்காலியை கூப்பிடுங்கள், அப்பொழுது தான் வேகமாக மருத்துவரை பார்க்க முடியும் என்றார். அதன்படியே தள்ளு நாற்காலியும் வந்தது. அதில் என்னை உட்கார வைத்து பின்னர் பதிவு செய்து மருத்துவரின் அறைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு ஏராளமான நோயாளிகள் அமர்ந்திருந்தார்கள். நான் தள்ளு நாற்காலியில் இருந்ததால் ஒரு பத்து நிமிட காத்திருத்தலுக்கு பிறகு மருத்தவரை காண வாய்ப்பு கிடைத்தது. மருத்துவர் நண்பரிடமும், மனைவியிடமும் விசாரித்து விட்டு மருத்துவ காகிததில் ஏதோ எழுதிக்கொடுத்து வேறு ஒரு அறைக்கு அனுப்பினார். அங்கு மீண்டும் இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, மாரடைப்புக்கான சோதனைகள் செய்தார்கள். அந்த சோதனை அறிக்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அவர் அதை பார்த்து விட்டு வேறு ஒரு அறைக்கு கண்காணிப்பிற்காக (observation) அனுப்பினார். அங்கிருந்த அத்தனை படுக்கைகளும் நிரம்பியிருந்தன. ஒரு இருபது நிமிடங்கள் கழித்து ஒரு படுக்கை காலியானது அதில் என்னை படுக்க வைத்து சத்து நீர் (குளுகோஸ்) ஏற்ற தொடங்கினார்கள். பரிசோதனைக்காக இரத்தமும் எடுத்தார்கள். குளிர் சாதன அறையாக இருந்ததால் மிகவும் குளிர்ந்தது. ஒரு போர்வையை கேட்டு வாங்கி போர்த்தினாள் மனைவி. எனக்கு நேர் மேலே குளிர்சாதனத்தின் சிறு சன்னல் இருந்ததால் நான் முகத்தையும் மூடினேன். உடனே என் மனைவி பயந்துவிட்டாள். எனக்கு பயங்கரமான களைப்பில் தூக்கம் கண்ணை சொக்கவைத்தது. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை என் மனைவி என்னை கூப்பிட ஆரம்பித்தாள். ரொம்பவும் பயந்துவிட்டாள். கொஞ்ச நேரம் சும்மாயிரு, தூங்குகிறேன் என்று அதட்டியதும் பயத்துடன் அமைதியாகிவிட்டாள். வேறு சில நண்பர்களும் வந்திருந்ததால், அடுத்த நாள் வேலையின் காரணமாக எதிர்வீட்டு நண்பரை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் போக விருப்பமேயில்லாமல் போய் இருக்கிறார்.

சுமார் மூன்று மணிநேரம் கழித்து எல்லா சோதனைகளும் முடிந்து பார்த்த மருத்துவர் எல்லாம் சரியாக இருக்கிறது. ஒன்றும் பயப்பட தேவையில்லை. ஏதோ ஒரு ஒவ்வாமை (அலர்ஜி) என்று சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். பிறகு நண்பரின் வண்டியில் எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம். மணி இரவு மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர் வீட்டு நண்பர் அவ்வளவாக பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவசரத்தில் மிகவும் உதவியதை மறக்க முடியவில்லை. மேல்வீட்டு நண்பரும் தக்க சமயத்தில் வந்து உதவினார். பின்னர் வந்த நண்பர்களும் தூங்காமல், சாப்பிடாமல் திரும்ப வீடு வரும் வரை பொறுமையாக இருந்தது மனதை ஏதோ செய்தது.

காலையில் தான் குழந்தைகளுக்கு சொன்னேன். ஒரே அழுகை.

மிகவும் களைப்பாக இருந்ததால் அலுவலகத்திற்கு விடுமுறைக்கு சொல்லிவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.


மனிதநேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதற்கு எனக்கு நடந்த இந்த நிகழ்ச்சி ஒரு சின்ன உதாரணம்.

Monday, September 11, 2006

காதல் - சில கேள்விகள்

 1. ஏன் பல பேரின் காதல் கல்யாணத்திற்கு பிறகு சில காலம் கழித்து கசந்து விடுகிறது?
 2. ஏன் காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும்?
 3. ஏன் காதல் தோல்விகள் ஏற்படுகின்றன?
 4. ஏன் காதல் ஒரு குறிப்பிட்ட வயதில் அதிகமாக (90%) வருகிறது?
 5. ஏன் காதல் இல்லையேல் சாதல் என பலர் தங்கள் வாழ்வை அழித்துக்கொள்கிறார்கள்?
 6. ஏன் சிலர் முதல் காதல் தோல்வியடைந்தால் அடுத்த காதலை நோக்கி ஓடுகிறார்கள்?
 7. ஏன் காதல் கண்ணை மறைக்கிறது?
 8. ஏன் பொதுவில் பெற்றோர்கள் காதலை வெறுக்கிறார்கள்?
 9. ஏன் காதல்கள் பொதுவாக கல்லூரிகளில் உருவாகிறது?
 10. காதலுக்கும் நட்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?
 11. நட்பு காதலாக மாறலாம் ஆனால் காதல் நட்பாக மாறுமா?
 12. காதலைப் பற்றி எழுதும் போது மட்டும்தங்களின் புலம்பல்கள் எல்லாம் கவிதைகள் என்று சிலர் ஏன் மற்றவர்களை சாகடிக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு பதில் சரியாக தெரிந்தும் சொல்லாமலோ, அல்லது தவறான பதில்கள் சொன்னாலோ, அல்லது மழுப்பினாலோ உங்கள் தலை......

Sunday, September 10, 2006

இந்தியனின் மூளை

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.

250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.

அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 15.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

ஆம். இது தான் இந்தியனின் மூளை.

இதனால் தான் இந்தியா ஒளிர்கிறது.

Wednesday, July 05, 2006

விசா

இந்தியாவில் நஸ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த சிங்கத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு கிலோ இறைச்சி மட்டும்தான் கிடைத்து வந்ததால் அது மிகவும் நொந்துபோய் இருந்தது.
ஒரு நாள் அங்கு வந்த அமெரிக்காவிலிருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலையின் மேலாளர் அந்த சிங்கத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும்படி நிர்வாகத்திடம் சொன்னபோது அந்த சிங்கம் ஓ எனது பிரார்த்தனை பலித்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவுக்கு சென்றுவிட்டால் அருமையான குளிர் சாதனம் பொருத்தப்பட்டட அறையில் தங்கலாம், தினமும் ஒரு முழு ஆடு அல்லது இரண்டு ஆடுகள் கூட சாப்பிட கிடைக்கும். அதுவும் அல்லாது அமெரிக்காவிற்கான பச்சை அட்டையும் (கிரீன் கார்ட்) கிடைக்கும் என்று கணக்குப் போட்டது.

அமெரிக்காவுக்கு போய் சேர்ந்த முதல் நாள்அந்த சிங்கத்திற்கு காலையில் அருமையாக கட்டப்பட்ட ஒரு பெட்டியில் உணவு வந்தது.

சிங்கம் ஆவலுடன் வேக வேகமாக அந்த பெட்டியைத் திறந்துப் பார்த்து அதில் சில வாழைப்பழங்கள் மட்டும் இருந்தது கண்டு ஏமாற்றம் அடைந்தது.
ஓ நான் இப்பத்தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கேன், அதனாலெ என்னெ நல்லா கவனிக்கணும்ங்கற எண்ணத்திலெ எனக்கு ஏதாவது வயிறு கோளாறு வரக்கூடாது அப்படீன்னு நினைச்சி வாழைப்பழம் கொடுத்திருக்காங்க போலிருக்கு என்று நினைத்தது.

அடுத்த நாளும் முதல் நாள் போலவே நடந்தது. மூன்றாவது நாளும் அதே வாழைப்பழப் பெட்டி வந்ததும் அந்த சிங்கத்தினால் தாங்க முடியவில்லை.

பெட்டியை கொண்டுவந்த பையனை தடுத்து நிறுத்தி கோபமாக உனக்கு தெரியாதா, நான் சிங்கம்னு, காட்டுக்கே ராஜா! உங்க நிர்வாகம் என்ன நினைச்சிகிட்டு இருக்காங்க, கொஞ்சம் கூட அறிவில்லாமெ இருக்காங்க? எனக்கு எதுக்கு வாழைப்பழத்தை தினமும் கொண்டுவர்றே? என்று கேட்டது.

அந்தப் பையன் மிகவும் பணிவாக, ஐயா, எனக்கு தெரியும் நீங்க காட்டுக்கே ராஜாங்கறது. ஆனா நீங்க இங்கே வந்திருக்கறது குரங்குக்கான விசாவில் என்றான்.

வெளிநாட்டில் குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருக்கலாம்.


நன்றி: வினோத்

Friday, June 23, 2006

சந்தைப் படுத்துதல் என்றால் என்ன?

ஒரு விருந்தில் அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். உடனே அவளிடம் சென்று நான் பெரிய பணக்காரன். என்னை கல்யாணம் செய்துக் கொள்கிறாயா என்று கேட்பது நேரடியாக சந்தைப்படுத்துதல்.(Direct Marketing)

நீங்கள் ஒரு விருந்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிருக்கும்போது ஒரு அழகான பெண்ணைப் பார்க்கிறீர்கள். உங்கள் நண்பர்களில் ஒருவர் அவளிடம் சென்று உங்களை காண்பித்து அவர் மிகப்பெரிய பணக்காரர். அவரை திருமணம் செய்துகொள் என்று சொல்வது விளம்பரம் (Advertisement)

நீங்கள் ஒரு விருந்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தவுடன் உங்கள் உடையை ஒரு முறைப் பார்த்து, கழுத்துப் பட்டையை (Tie) நேராக்கி, தலையை ஒரு முறை தொட்டுப் பார்த்துவிட்டு பிறகு அவளிடம் சென்று வணக்கம் சொல்லி அவளுக்கு குளிர் பானம் ஊற்றி கொடுத்து, அவள் செல்கையில் வாசல் கதவை அவளுக்காக திறந்து வைத்து, அந்த நேரத்தில் அவளுடைய கைப்பை தவறுதலாக கீழேவிழும் போது (பொதுவாக இது நடக்கும்) அதை அவளுக்கு எடுத்து கொடுத்து, அவளை வீட்டில் கொண்டு விடவா என்று பணிவுடன் கேட்டப்பின் மெதுவாக அவளிடம் நான் ஒரு செல்வந்தன், என்னை திருமணம் செய்துக் கொள்கிறாயா என்று அவளிடம் கேட்பது
பொதுஜன தொடர்பு (Public Relations)

நீங்கள் ஒரு விருந்தில் இருக்கும்பொழுது ஒரு அழகானப் பெண் உங்களிடம் வந்து நீங்கள் மிகப் பெரிய பணக்காரர், உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நான் உங்களை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன் என்று சொல்வது உங்கள் தயாரிப்பு சந்தையில் அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்பதாகும் (Brand Recognition).

நீங்கள் ஒரு விருந்தில் அழகான ஒரு பெண்ணைப் பார்க்கிறீர்கள். உடனே அவளிடம் சென்று, நான் பணக்காரன், என்னை திருமணம் செய்து கொளகிறாயா என்று கேட்கிறீர்கள். அவள் உடனே உங்கள் கன்னத்தில் பட்டென்று ஒரு அறை கொடுப்பாள். இதற்கு பெயர் உங்கள் தயாரிப்பைப் பற்றிய வாடிக்கையாளரின் அபிப்ராயம். (Customer's Feedback)


உங்களுடைய அபிப்ராயங்களும் வரவேற்கப்படுகின்றன.

Monday, May 29, 2006

2006ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நீங்கள்

2006ஆம் ஆண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நீங்கள்

1.தெரியாத்தனமாக உங்களது கடவு சொல்லை (பாஸ்வோர்ட்) மைக்ரோவேவில் தட்டச்சுவீர்கள்

2. ஸொலிட்டையர் (சீட்டு விளையாட்டு) ஆட்டத்தை உண்மையான சீட்டுக்கட்டை வைத்து விளையாடி பல வருடங்களாகியிருக்கும், அல்லது விளையாடியே இருக்க மாட்டீர்கள்.

3. மூன்று பேருள்ள உங்கள் குடும்பத்தை தொடர்பு கொள்ள குறைந்தபட்சம் பதினைந்து தொலைபேசி எண்களை வைத்திருப்பீர்கள்.

4. உங்களுக்கு அடுத்த இருக்கையில் பணி செய்து கொண்டிருக்கும் நண்பருக்கு மின்மடல் (இமெயில் ) அனுப்புவீர்கள்.

5. உறவினர்களுடனும், நண்பர்களுடனும் அடிக்கடி உங்களால் தொடர்புகொள்ள முடியாததற்கு காரணம் அவர்களுக்கு மின் முகவரி (இமெயில் அட்ரஸ்) இல்லெயென்று சொல்வீர்கள்.

6. வீட்டிற்கு வண்டியில் போகும்போது அலைபேசியில் வீட்டை கூப்பிட்டு நீங்கள் வாங்கிகொண்டு போகும் சாமன்களை வீட்டிற்குள் கொண்டு செல்ல உதவிக்கு ஆள் அனுப்ப சொல்வீர்கள்.

7. தொலைக்காட்சியில் வரும் எல்லா விளம்பரங்களுக்கு கீழ் அந்த நிறுவனத்தின் இணைய முகவரி இருக்கும்.

8. வீட்டை விட்டு வெளியில் போகும் போது அலைபேசியை மறந்து வைத்துவிட்டு வந்திருந்தால் மிகவும் கலவரமடைந்து, உடனே போய் அதை எடுத்து வருவீர்கள் (உங்கள் வாழ்க்கையில் முதல் 20 அல்லது முப்பது வருடங்களாக ஏன் 60 வருடங்களுக்கும் மேல் அலைபேசி என்ற ஒரு கருவியே இருந்திருக்காது என்பது வேறு விசயம்)

10. காலையில் எழுந்து காப்பி குடிப்பதற்கு முன் ஆன்லைனுக்கு போய்விடுவீர்கள்

11. நீங்கள் இதை படித்து தலையை குலுக்கிக்கொண்டு சிரிப்பீர்கள்

12. அதெ விட மோசம், இதை யார் யாருக்கு அனுப்பணும்னு சரியா முடிவு செய்திருப்பீர்கள்

13. நீங்க ரொம்ப பிஸியா இருக்கறதனாலெ இங்கெ #9 இல்லேங்கறதெ கவனித்திருக்க மாட்டீர்கள்.

14. இப்பொழுது நீங்கள் திரும்பவும் மேலே போய் #9 இருக்கா இல்லையான்னு சோதித்துப் பார்ப்பீர்கள்.

15. இப்ப உங்களெ பாத்து நீங்களே சிரிப்பீங்க

போங்க, இதெ உங்க நண்பர்களுக்கு அனுப்புங்க.

அதெ தானெ இப்ப செய்ய போறீங்க!

நன்றி: நிலா

Thursday, May 25, 2006

மதுமிதாவுக்கு எனது குறிப்புகள

வலைப்பதிவர் பெயர்: மஞ்சூர் ராசா

வலைப்பூ பெயர் : மஞ்சூர் ராசாவின் பக்கங்கள்

சுட்டி(url) : http://manjoorraja.blogspot.com/

ஊர்: மஞ்சூர், இந்தியா

நாடு: தற்போது வசிப்பது குவைத்

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: நானே, தமிழ் மணமும் காரணம்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : ஜூன் 1, 2005

இது எத்தனையாவது பதிவு: 23

இப்பதிவின் சுட்டி(url):
http://manjoorraja.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: குழுமங்களில் எழுதி வந்தாலும் பல வலைப்பூக்களை தொடர்ந்து படித்தப் பொழுது ஏன் நாமும் ஒரு வலைப்பூவைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தினால் உதித்ததுதான். தற்போது அதிகமாக எழுதுவது முத்தமிழ் மற்றும் நம்பிக்கை கூகிள் குழுமங்களில்.
http://groups.google.com/group/muththamiz
http://groups.google.com/group/nambikkai


சந்தித்த அனுபவங்கள்: பெரிதாக ஒன்றும் இல்லை

பெற்ற நண்பர்கள்: ஏராளம்.

கற்றவை: கற்றுக்கொண்டே இருக்கிறேன்

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: முழு சுதந்திரம்

இனி செய்ய நினைப்பவை: அனைவராலும் விரும்பும் வண்ணம் எழுத

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என்னைப் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் பிறந்தேன். இந்தியாவில் பல இடங்களில் சுற்றிவிட்டு இப்பொழுது குவைத்தில் தற்காலிகமாக வசித்து வருகிறேன்.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளை பலரும் படிக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு, நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒரே எண்ணத்தில் எழுதினால் நல்லது. அதுமட்டுமல்லாது தங்கள் எழுத்திலும் யார் மனதும் புண்படாத வண்ணம் எழுதவேண்டும்.

Wednesday, May 10, 2006

ஒரு எளிமையான கதை அதே சமயத்தில் ஆழமான சிந்தனை

தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.

வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன. பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.

எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்
"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்."

"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்."

"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது."

"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்."

"ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."

நன்றி: Kanthi

Wednesday, April 19, 2006

"நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா" போட்டி அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா
கவிதை மற்றும் கட்டுரை போட்டிஅறிவிப்பு மடல்
இணையத்தின் இனிய நண்பர்களே! சக குழும நண்பர்களே வணக்கம்!உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கவிதை மற்றும் கட்டுரை போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.
போட்டி விதி முறை:
கவிதை !1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட கவிதையாய் இருத்தல் வேண்டும்! (தலைப்பு உங்கள் விருப்பப்படி வைக்கலாம்)2. கவிதை வரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! மரபுக்கவிதை (அ) புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!
கட்டுரை !1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் சமூக பார்வை கொண்ட கட்டுரையாய், மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் கட்டுரையாய் இருத்தல் வேண்டும்!2. குறைந்தபட்சம் ஒருபக்கம் அளவில் இருக்க வேண்டும். மற்றபடி கட்டுப்பாடு இல்லை.3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!
படைப்பை அனுப்ப கடைசி நாள்14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்
தேர்வு குழுபடைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள்.
உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை.கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.
அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.
தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:1.பரஞ்சோதி paransothi@gmail.com2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.
மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்க!
முக்கியக் குறிப்பு :தேர்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவண்,நம்பிக்கை நண்பர்கள்கூகுள் குழுமம்.http://groups-beta.google.com/group/nambikkai/

Wednesday, April 12, 2006

மாணவர்கள் ஏன் தேர்வில் தோல்வி அடைகிறார்கள்?

இன்று காலை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவர் சொன்னார், மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் முக்கியமான சில விசயங்களை மறந்து விடுகிறார்கள் என்றார். அதென்ன முக்கியமான விசயங்கள் என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தேர்வில் தோல்வி அடைவதற்கு அவர்களை குற்றம் சொல்லி எந்த புண்ணியமும் இல்லை.

ஏனென்றால் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்

சராசரியாக ஒரு மாணவனின் கல்வியாண்டில்:

52 ஞாயிற்று கிழமைகள் விடுமுறை. மீதி இருப்பது 313 நாட்கள்.

கோடைவிடுமுறை 50 நாட்கள். இந்த சமயத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக சரியாக படிக்க முடியாது. மீதி 263 நாட்கள்.

ஒரு நாளுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்கினால் அதில் 122 நாட்கள் போய்விடும். மீதி 141 நாட்கள்.

உடல் ஆரோக்கியத்திற்காக தினம் ஒரு மணி நேரம் விளையாட்டில் கழித்தால் அதில் ஒரு 15 நாட்கள் போய்விடும். மீதி 126 நாட்கள்.

சாப்பாடு, மற்றும் கொறித்தல் பொன்றவைகளுக்கு ஒரு நாளில் இரண்டு மணி நேரம் அதில் ஒரு 30 நாட்கள். மீதி இருப்பது 96 நாட்கள்.

குறைந்த அளவு என்றாலும் தினம் ஒரு மணி நேரமாவது பேசுகிறோம் (பெண்கள் இன்னும் கொஞ்சம் அதிகம்). இதில் 15 நாட்கள். மீதி 81 நாட்கள்.

ஒரு வருடத்தில் பல வித பரீட்சைகளுக்காக சுமார் 35 நாட்கள் போய்விடும். மீதி 46 நாட்கள்.

காலாண்டு, அறையாண்டு, பண்டிகை போன்றவற்றுக்காக விடுமுறை 40 நாட்கள். மீதி இருப்பதோ ஆறு நாட்கள்.

எப்படியும் உடல்நல குறைவு ஏற்படுவதால் வருடத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் அதில் போய்விடும்.மீதி இருப்பது மூன்று நாட்கள். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிக்கோ, அல்லது சினிமாவுக்கோ மிக மிக குறைந்த அளவென்றாலும் இரண்டு நாட்கள் அதில் போய்விடும்.

இப்பொழுது இருப்பதோ ஒரே ஒரு நாள்.

அந்த ஒரு நாள் அவர்களின் பிறந்த நாள்.

பிறகு எப்படித்தான் தேர்வில் வெற்றிப்பெற முடியும்?பின்குறிப்பு: இந்த செய்தி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, April 10, 2006

வாழ்க்கைக்கான இனிய பாடம்

ஒரு மாணவன் ஆசிரியரை பார்த்து கேட்டான்: "காதல் என்றால் என்ன?"

ஆசிரியர் சொன்னார் உனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால் நீ வயலுக்கு போய் ஒரு மிகப் பெரிய கதிரை அறுத்துக்கொண்டு வா என்றார்.
ஆனால் ஒரு நிபந்தனை: நீ ஒரே தடவையில் இந்த வேலையை முடிக்க வேண்டும். திரும்பவும் செய்யக்கூடாது.

மாணவன் வயலுக்கு சென்று முதல் வரிசையில் பார்த்தான் அங்கே ஒரு நீளமான பெரிய கதிர் ஒன்றைக் கண்டான். உடனே நினைத்தான் இதைவிட பெரிதாக வேறு கதிர் இருந்துவிட்டால். ஓ அங்கே இன்னொன்று பெரிதாக இருக்கிறதே!, அதோ இன்னொன்று அதை விட பெரிதாக….

ரொம்ப நேரம் கழித்து பாதி வயலை சுற்றிய பிறகும் அவனால் எந்த கதிர் பெரிய கதிர் என்று நிச்சயிக்க முடியவில்லை. முதலில் பெரிதாக தெரிந்தது பின்னர் வேறொன்றை பார்க்கும்போது சிறிதாக தெரிந்தது. அவன் மிகவும் வருத்தமுற்றான். அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. வெறுங்கையுடன் வகுப்புக்கு திரும்பினான்.

ஆசிரியர் சொன்னார். இதுதான் காதல். நீ சரியான ஒருத்தி கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருக்கவேண்டும். பின் ஒரு நாள் நீ உணர்வாய் நீ தேடியது ஏற்கனவே உன் கையைவிட்டு தவறிப்போய்விட்டது என்று.

இப்பொழுது மாணவன் ஆசிரியரிடம் அடுத்த கேள்வியை கேட்டான்.

"திருமணம் என்றால் என்ன? "

"இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவேண்டுமென்றால் நீ சோளக்கொல்லைக்கு போய் இருப்பதிலேயே பெரிய சோளக்கருதொன்றை அறுத்துக்கொண்டு வரவேண்டும்" என்றார்.

ஆனால் ஒரு நிபந்தனை: நீ ஒரே முயற்சியில் இந்த வேலையை முடிக்க வேண்டும். திரும்பவும் செய்யக்கூடாது.

மாணவன் சோளக்கொல்லைக்கு போனான். இந்த முறை முதலில் செய்தது போல எந்த தவறும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவன் சோளக்கொல்லைக்குள் புகுந்து நடுமையத்திற்கு சென்று ஒரு சராசரி அளவுள்ள சோளக்கருது ஒன்றை அறுத்து எடுத்துக்கொண்டு திருப்தியுடன் வகுப்புக்கு திரும்பினான்.

அந்த சோளக்கதிரை பார்த்த ஆசிரியர் சொன்னார், "இந்த முறை நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு வந்திருக்கிறாய். இதுதான் மிகவும் சிறந்தது என்பதில் உனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ….
"இது தான் திருமணம்"


ஆங்கிலத்திலிருந்து - நன்றி : வினோத்

Sunday, April 09, 2006

நமது பெற்றோருடன் நாம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும்

அந்த சோபாவில் அமர்ந்திருக்கும் பெரியவருக்கு சுமார் எண்பது வயதிருக்கும், அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அவர் மகனுக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். உயர்ந்தப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டுகிறது.

அப்பொழுது ஒரு காகம் பறந்து வந்து ஜன்னல் கதவில் அமர்கிறது.
தந்தை மகனைப் பார்த்து "என்ன சததம்?"

மகன் : "அது ஒரு காகம் ஜன்னல் கதவில்"

சில நிமிடங்களுக்கும் பிறகு தந்தை மீண்டும் மகனைப் பார்த்து "என்ன சத்தம்"

"அப்பா, நான் இப்பத்தானே சொன்னேன் அது காகம் என்று "

சிறிது நேரம் கழிந்தது. வயதான அந்த தந்தை மறுபடியும் மகனைப் பார்த்து

"என்ன சத்தம் அது ?" என்று கேட்டார்

இப்பொழுது மகன் எரிச்சலடைந்த குரலில் "அது காகம், காகம்" என்று சத்தமாக கூறினார்.

இன்னும் சிறிது நேரம் கழிந்தது. தந்தை நான்காவது முறையாக தன் மகனை நோக்கி "என்ன சத்தம் அது" எனக் கேட்டார்

இப்பொழுது பொறுமையிழந்த மகன் சத்தமாக எதுக்காக கேட்டக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்? நான் தான் பலமுறை சொன்னேனே அது காகம்ன்னு. உங்களுக்கு இதுகூட புரியலையா?"

கொஞ்ச நேரம் கழிந்தது. தந்தை மெதுவாக சோபாவிலிருந்து எழுந்து தனது அறைக்கு போய் ஒரு பழைய நைந்து போன டைரியை கொண்டு வந்தார். அந்த டைரியை அவர் தன் மகன் பிறந்த நாளிலிருந்து பாதுகாத்து வருகிறார். அதை புரட்டி ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து மகனுக்கு கொடுத்து படிக்க சொன்னார்.

அந்த டைரியில் எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:

"இன்று காலையில் என் மூன்று வயது மகன் சோபாவில் என் அருகில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு காகம் வந்து ஜன்னலில் அமர்ந்தது. அதைப் பார்த்த என் மகன் சுமார் இருபத்தி மூன்று தடவை அது என்ன என்று திரும்ப திரும்பக் கேட்டான். நானும் அவன் கேட்கும்போதெல்லாம் அது காகம் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் ஒரே கேள்வியை அவன் கேட்கும் போது நான் அவனை கட்டி அணைத்தப்படி அவனுடைய கேள்விக்கு இருப்பத்தி மூன்று முறையும் பதில் சொன்னேன். பலமுறை அவன் கேட்டும் எனக்கு சிறிதளவேனும் அவன் மீது கோபமோ, எரிச்சலோ உண்டாகவில்லை அதற்கு பதில் அந்த அப்பாவி குழந்தையின் மீது அன்பும் பாசமும் தான் அதிகமாயிற்று."

அந்த சிறு குழந்தை இருபத்திமூன்று முறை அது என்ன என்று கேட்டும் அந்த தந்தை எரிச்சலடையாமல் பொறுமையாக அந்த குழந்தைக்கு பதில் சொன்னார்.

இன்று அதே தந்தை தன் அதே மகனிடம் அதே கேள்வியை வெறும் நாலு முறை கேட்டதற்கு அந்த மகன் எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன:

உங்கள் பெற்றோருக்கு வயதாகி விட்டால் அவர்களை ஒதுக்கவோ, அவர்களை உங்களுக்கு ஒரு பாரமாகவோ நினைக்காதீர்கள். அவர்களுடன் அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள், பணிவாக இருங்கள், அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.அவர்களை புரிந்துக் கொள்ளுங்கள்.

இன்று முதல் சத்தமாக உரக்க சொல்லுங்கள், "என் பெற்றோர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கவேண்டும். நான் சிறு குழந்தையாக இருந்தப் போதிலிருந்து அவர்கள் என்னை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். தன்னலமற்ற அன்பை அவர்கள் என்மீது எப்போதும் காட்டியிருக்கிறார்கள். எல்லா கஸ்டத்தையும், துயரங்களையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு, வெயில், புயல், மழை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு என்மீது ஒரு சிறு தூசியும் படாமல் பாதுகாத்து இன்று என்னை இந்த அளவிற்கு சமுதாயத்தில் ஒரு உயர்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்றைய என் நிலைக்கு அவர்களே காரணம்."

இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், "நான் எனது வயதான பெற்றோர்களுக்கு மிக சிறந்த முறையில் சேவை செய்வேன். அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும் நான் என் பெற்றோரிடம் மிக நல்ல அன்பான வார்த்தைகளை மட்டும் பேசுவேன்."

இந்த உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும் என்றொரு வார்த்தை இருப்பதால் தான் முடியாது என்ற வார்த்தை தோன்றியது. ஆதலால் முடியும் என்பது நிச்சயமான உண்மை.

Nothing in this world is IMPOSSIBLE ,,, coz the word IMPOSSIBLE itself says I M POSSIBLE..
KEEP SMILING ALWAYS

என்றும் புன்னகை உங்கள் அணிகலனாய் இருக்கட்டும்

நன்றி: பரமேஸ்வரி.

Sunday, March 12, 2006

வேலைக்கான சரியான நபர்களை எப்படி தேர்ந்தெடுப்பது?

சுமார் நூறு கற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒரு மூடிய அறைக்குள் வைத்து ஒரு ஜன்னலை மட்டும் திறந்து வைத்துவிடவும்.வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் 3 அல்லது 4 நபர்களை அந்த அறைக்குள் அனுப்பி கதவை மூடிவிடவும்.அவர்களை தனியாக விட்டுவிட்டு சுமார் 6 மணி நேரம் கழித்து நிலமை என்னவென்று பார்க்கவும்.

 • அவர்கள் கற்களை எண்ணிக்கொண்டிருந்தால் கணக்கு (accounts) துறையில் போடவும்.
 • திரும்ப திரும்ப எண்ணிக்கொண்டிருந்தால் கணக்காய்வு, தணிக்கை துறையில் போடவும் (auditing)
 • அறை முழுவதும் எல்லா கற்களையும் கலைத்துவிட்டிருந்தால் அவர்களை பொறியியல் (இன்ஜீனியரிங்) துறையில் போடவும்.
 • கற்களை வித்தியாசமான முறையில் அடுக்கியிருந்தால் திட்டத் துறையில் (planning) போடவும்.
 • கற்களை ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொண்டிருந்தால் செயல் மற்றும் இயக்கத்துறையில் (operation) போடவும்.
 • தூங்கிக்கொண்டிருந்தால், பாதுகாப்புத் துறையில் (Security) போடவும்
 • கற்களை உடைத்து துண்டுகளாக்கிக் கொண்டிருந்தால் தகவல் தொழில்நுபத்துறையில் (Information Technology) போடவும்.
 • அமைதியாக உட்கார்ந்துக் கொண்டிருந்தால் மனிதவள மேம்பாட்டுத்துறையில் (Human Resource Development) போடவும்.
 • நாங்கள் பல விதங்களில் முயற்சி செய்தோம் என்று அவர்கள் சொல்வதுடன், ஒரு கல்லையும் இன்னும் நகர்த்தாமல் வைத்திருந்தால், விற்பனை துறையில் (sales) போடவும்.
 • நீங்கள் அங்கு போகும் போது அவர்கள் ஏற்கனவே போய் விட்டிருந்தால் சந்தை படுத்துதல் (marketing) துறையில் போடவும்.
 • ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் முக்கிய முடிவு எடுக்கும் திட்டக்குழுவில் (strategic Planning) போடவும்
 • இறுதியாக ஆனால் முக்கியமாக அவர்கள் ஒரு கல்லையும் நகர்த்தாமல் ஒருவரோடு ஒருவர் பேசி அரட்டை அடித்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி, நிறுவனத்தின் முக்கியமான உயர்ந்த நிர்வாகத்துறையில் (Top Management) போடவும்.

ஆங்கிலத்திலிருந்து சிறு முயற்சி.
-- மஞ்சூர் ராசா

http://manjoorraja.blogspot.com/

http://muththamiz.blogspot.com/

குழுமம்:http://groups.google.com/group/muththamiz

Thursday, January 26, 2006

சிறுவர் பூங்கா: கதை எண் 66 - வரும்முன் காப்போம்

சிறுவர் பூங்கா: கதை எண் 66 - வரும்முன் காப்போம்

Wednesday, January 04, 2006

நேரத்தின் மதிப்பு

 • சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள்
 • பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்
 • நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்
 • ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள்
 • ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள்
 • ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள்
 • ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள்
 • ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள்
 • ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, இரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்
 • ஒரு வினாடியின் மதிப்பை விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய நபரிடம் கேளுங்கள்
 • ஆயிரத்தில் ஒரு வினாடியின் மதிப்பை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்ப்தக்கம் வென்ற வீரரிடம் கேளுங்கள்
 • ஒரு நண்பனின் மதிப்பு அவனை இழக்கும்போதுதான் தெரியும்.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது. விலைமதிப்பற்ற நேரத்தை நமக்கு மிகவும் வேண்டியவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவேண்டும். பயனுள்ள விதத்தில் உபயோகப்படுத்தவேண்டும்.

ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு. நன்றி: வினோத்