Wednesday, July 05, 2006

விசா

இந்தியாவில் நஸ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த சிங்கத்திற்கு ஒரு நாளுக்கு ஒரு கிலோ இறைச்சி மட்டும்தான் கிடைத்து வந்ததால் அது மிகவும் நொந்துபோய் இருந்தது.
ஒரு நாள் அங்கு வந்த அமெரிக்காவிலிருக்கும் ஒரு மிருகக் காட்சி சாலையின் மேலாளர் அந்த சிங்கத்தை அமெரிக்காவிற்கு அனுப்பும்படி நிர்வாகத்திடம் சொன்னபோது அந்த சிங்கம் ஓ எனது பிரார்த்தனை பலித்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது.

அமெரிக்காவுக்கு சென்றுவிட்டால் அருமையான குளிர் சாதனம் பொருத்தப்பட்டட அறையில் தங்கலாம், தினமும் ஒரு முழு ஆடு அல்லது இரண்டு ஆடுகள் கூட சாப்பிட கிடைக்கும். அதுவும் அல்லாது அமெரிக்காவிற்கான பச்சை அட்டையும் (கிரீன் கார்ட்) கிடைக்கும் என்று கணக்குப் போட்டது.

அமெரிக்காவுக்கு போய் சேர்ந்த முதல் நாள்அந்த சிங்கத்திற்கு காலையில் அருமையாக கட்டப்பட்ட ஒரு பெட்டியில் உணவு வந்தது.

சிங்கம் ஆவலுடன் வேக வேகமாக அந்த பெட்டியைத் திறந்துப் பார்த்து அதில் சில வாழைப்பழங்கள் மட்டும் இருந்தது கண்டு ஏமாற்றம் அடைந்தது.
ஓ நான் இப்பத்தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கேன், அதனாலெ என்னெ நல்லா கவனிக்கணும்ங்கற எண்ணத்திலெ எனக்கு ஏதாவது வயிறு கோளாறு வரக்கூடாது அப்படீன்னு நினைச்சி வாழைப்பழம் கொடுத்திருக்காங்க போலிருக்கு என்று நினைத்தது.

அடுத்த நாளும் முதல் நாள் போலவே நடந்தது. மூன்றாவது நாளும் அதே வாழைப்பழப் பெட்டி வந்ததும் அந்த சிங்கத்தினால் தாங்க முடியவில்லை.

பெட்டியை கொண்டுவந்த பையனை தடுத்து நிறுத்தி கோபமாக உனக்கு தெரியாதா, நான் சிங்கம்னு, காட்டுக்கே ராஜா! உங்க நிர்வாகம் என்ன நினைச்சிகிட்டு இருக்காங்க, கொஞ்சம் கூட அறிவில்லாமெ இருக்காங்க? எனக்கு எதுக்கு வாழைப்பழத்தை தினமும் கொண்டுவர்றே? என்று கேட்டது.

அந்தப் பையன் மிகவும் பணிவாக, ஐயா, எனக்கு தெரியும் நீங்க காட்டுக்கே ராஜாங்கறது. ஆனா நீங்க இங்கே வந்திருக்கறது குரங்குக்கான விசாவில் என்றான்.

வெளிநாட்டில் குரங்காக இருப்பதைவிட இந்தியாவில் சிங்கமாக இருக்கலாம்.


நன்றி: வினோத்