Friday, November 09, 2007

எச்சரிக்கை - அவசரம்

எச்சரிக்கை

அன்பு நண்பர்களே

முத்தமிழ் குழுமத்தின் இணைய சொல்லி அழைப்பு வருவதாக ஒரு சில நண்பர்கள் தகவல் அனுப்பியிருக்கின்றனர். முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினராக சேர யாருக்கும் தனியாக அழைப்பு அனுப்பப்படுவதில்லை. ஆகவே உங்களுக்கும் முத்தமிழ் பெயரில் குழுமத்தில் இணைய சொல்லி அழைப்பு வந்தால் அந்த மடலை உடனடியாக நீக்கிவிடுங்கள்.அந்த அழைப்பின் மூலம் உங்கள் கடவுச்சொல் திருடப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்ல வேறு எந்த முகவரியிலிருந்து இணைய சொல்லி அழைப்பு வந்தாலும் அதை திறக்க வேண்டாம். உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் திறக்கவேண்டாம். பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்தமிழில் இணைய விருப்பமுள்ளவர்கள் குழும முகவரிக்கு நேரடியாக விண்ணப்பித்து சேர்ந்து கொள்ள முடியும். குழுமம் உங்களின் கடவுச்சொல்லை கேட்பதில்லை.

முத்தமிழ் குழுமத்தின் மீதான இந்த தாக்குதல் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ செயல்படும் ஒரு சில விஷமிகளின் வேலையே. விரைவில் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்பதையும் சரியான தண்டனைக்கு ஆளாவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, November 07, 2007

தீபாவளி - மலரும் நினைவுகள்

தீபாவளி என்றவுடன் எனக்கு என் சின்ன வயதில் கொண்டாடிய பல தீபாவளிகள் இனிய நினைவுகளாக வருவதை ஏனோ தடுக்கமுடியவில்லை. இப்படித்தான் ஒரு தீபாவளி நாளில் நடந்த ஒரு சம்பவம்

தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.

என்றாவது ஒரு நாள் தான் இட்லி என்பதால் எல்லா வீடுகளிலும் மாவு அரைக்கும் ஆட்டாங்கல் இருப்பதில்லை. அதனால் இருக்கும் சிலரது வீடுகளில் போய் வரிசையில் காத்திருக்கவேண்டும். எங்க அம்மா காலையிலேயே ஊறவைத்த அரிசி உளுந்து முதலியவற்றை என்னிடம் கொடுத்து அங்கு நிற்க செய்துடுவாங்க. நானும் பொறுமையாக காத்திருப்பேன். அதில் ஒரு சுகம்.
ஏன்னா அடுத்த நாள் இட்லி கிடைக்குமே. பிறகு அம்மா வந்து மாவரைத்து எடுத்து செல்வதற்குள் இரவு ஆகிவிடும்.

இதற்கிடையில் தையல்காரரிடம் போய் துணி தைத்தாகிவிட்டதா என பார்க்கவேண்டும். நம்ம தையல்காரர்களுக்கு விசேஷ்நாட்களில் தான் அதிக துணி வருவதால் ரொம்ப கடைசியாத்தான் எங்கள் துணி கிடைக்கும். சில நாட்களில் பொத்தான் போடும் வேலையும் நானே செய்து துணியை வாங்கி வருவேன்.

கையில் துணி கிடைப்பதற்கு சில சமயம் பத்து மணி கூட ஆகிவிடும் அதுவரை குளிரில் காத்திருந்து வாங்கிட்டு வந்தால் வீட்டில் அப்பாவிடம் திட்டு வேறு வாங்கவேண்டும்.

அப்போழுதெல்லாம் எட்டு மணிக்கே ஊர் அடங்கிவிடும். இப்பத்தான் தொலைக்காட்சி தொடர் வந்தப்பிறகு பதினோரு மணி வரை யாரும் உறங்குவதில்லை.

இரவு முழுவதும் தூக்கமே வராமல் புரண்டுக்கொண்டிருப்போம். அம்மா அதிகாலை மூணு மணிக்கே எழுந்து இட்லி போட ஆரம்பிச்சிடுவாங்க. கூடவே நானும் எழுந்து அம்மா பக்கத்தில் தூங்கி வழிந்துக்கொண்டே அடுப்பருகில் உட்கார்ந்திருப்பேன்.
மணி ஐந்தானவுடன் தூரத்தில் இருக்கும் வினாயகர் கோயிலின் ஒலிப்பெருக்கியில் சுப்ரபாதம் கேட்க ஆரம்பித்துவிடும். உடனே புதுத்துணி போடும் ஆசையில் அரக்கப்பரக்க குளித்துவிட்டு தயாராகிவிடுவதே வாடிக்கை.

இப்படித்தான் ஒரு நாள் குளித்துவிட்டு துணி எடுப்பதற்காக அடுத்த அறைக்குள் போனேன். அங்கு மின்விளக்குக்கு பொத்தான் கிடையாது. மின் விளக்கை போட அதனுடன் இணைந்த ஃப்ளக்கை இணைக்கவேண்டும். பொதுவாக விளக்கு வெளிச்சத்தில் தான் இணைப்போம். மேலும் எனக்கு உயரம் போதாதால் அப்பா தான் இணைப்பார். அப்பா அந்த அறையில் தான் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். எழுப்பினால் திட்டுவார் என்பதால் மிகவும் அமைதியாக கட்டிலில் மீது ஏறி நின்று ஃப்ளகை சொருகப்போனேன். ஆனால் எனது அவசரத்திலும் பரப்பரப்பிலும் ப்ளக்கின் பின்னை மாற்றி சொருகி விட்டேன். சரியாக சொருகாததால் லைட் எரியவில்லை. என்னடா இது என குழம்பி போய் ஆட்டி ஆட்டி பார்த்ததும் ஃப்ளக்கின் ஒரு பின் உடைந்து உள்ளே மாட்டிவிட்டது.

என்ன செய்வது என்று புரியவில்லை. அப்பாவை கூப்பிட்டால் திட்டுவார். சரி என ஒரு முடிவோடு மின்சாரம் பாய்வது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அதை பிடுங்குவதற்காக கையில் தொட்டேன். அவ்வளவு தான் !


அம்மா!! என்ற சத்தத்துடன் அப்பா மீது விழுந்தேன். திடீரென இப்படி நேர்ந்ததால் அப்பாவும் அலறி அடித்து கொண்டு எழ.. இருட்டில் ஒன்றும் தெரியாமல்..... ஒரே குழப்பம்... அம்மா அரக்க பரக்க உள் அறையிலிருந்து விளக்கை எடுத்து வந்து பார்க்க.. கட்டிலின் முனை என் தலையில் பட்டு வீக்கத்துடன் நான் அழுதுக்கொண்டிருக்க, அப்பாவுக்கு வந்த கோபத்தில் இன்னும் இரண்டு அடி எனக்கு கொடுக்க.... இப்படியாக ஒரு அருமையான மறக்க முடியாத தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, October 31, 2007

கடவுச்சொல் திருட்டு

அன்பு நண்பர்களே

இட்லி வடைக்கு நேர்ந்தது போல எனக்கும் நேர்ந்தது. ஓசை செல்லாவின் முகவரியிலிருந்து வந்த மடலை திறந்து ஓர்குட்டில் நுழைய எத்தனித்து என் கடவுச்சொல்லை இட்டதால் என் கடவுச்சொல் திருடப்பட்டுவிட்டது.

என்னால் வலைப்பதிவுக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஓசையை தொடர்பு கொண்டப்போது அவருக்கும் அதே போல மடல் வந்தது என்றார்.

என் கடவுச்சொல்லை திருடியவனின் முக்கிய குறிக்கோள் முத்தமிழ் கூகில் குழுமத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்பதே. என் கடவுச்சொல் மூலம் நிர்வாகத்திற்குள் நுழைந்து மாடரேட்டர்கள் அனைவரையும் நீக்கியிருக்கிறான்.

ஆனால் அவனது துரதிர்ஸ்டம் ஓனரை நீக்க முடியவில்லை. கூகிளில் இது ஒரு வசதி. ஓனர் ஐடி மூலம் மீண்டும் முத்தமிழில் நாங்கள் நுழைந்து எனது திருடப்பட்ட முகவரியை நீக்கிவிட்டோம்.

பிறகு மூன்று நாட்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு இன்று 31.10.07 காலையில் எனது பெயரில் முத்தமிழுக்குள் நுழைந்திருக்கிறான். உடனே எனக்கு தகவல் கிடைத்தது.

நண்பர்கள் பேசி பார்த்தனர். அவன் ஒருவார்த்தை பதிலிலேயே பேசியிருக்கிறான்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மடல்களை எனது முகவரியிலிருந்து பலருக்கு பார்வேர்ட் செய்திருக்கிறான். இதிலிருந்து இவனது நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது.

இந்த சமயத்தில் கூகில் மூலம் மீண்டும் எனது ஐடி திரும்ப கிடைத்ததால் நான் உள்நுழைந்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்.

யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது கூகிள் தமிழ் குழூமங்கள் மற்றும் பதிவுகள் பற்றி அதிகம் தெரிந்த நபர் என்பது மட்டும் தெளிவு.

என் ஐடி திருடப்பட்டதை அறிந்து குழுமங்கள் மற்றும் பதிவுலகில் இருந்து பலரும் ஆறுதலும் உதவிகளும் அளித்தனர். அனைவருக்கும் மிகவும் நன்றி.

Thursday, August 16, 2007

கவிதை பாடும் சில மலர்கள்

இதழ்கள் இல்லாத மலர்களா? வளர்ந்து வரும் கவிதாயினி அனிதாவின இதழ்கள் வெறும் மலர்களின் இதழ்களன்று. இதில் வித்தியாசமான பல்வேறு இதழ்களும் இருக்கின்றன.
கரிசனம்
அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில் இவரது கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்தன என்பது கூடுதல் செய்தி. இவரது ஒற்றை ரோஜா என்னும் கவிதையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் ! நிறமில்லாத மலர்களா? நிறங்கள் என தன் வலை மலரை குறிப்பிடும் செல்வநாயகி சக்தி என்ற மற்றொரு வலைமலரையும் நடத்திவருகிறார்.
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
என வித்தியாசமாக ஆசைப்படும் செல்வநாயகி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இவரது நான் ரசித்த பயணம் படிக்க வேண்டிய ஒரு நல்லப் படைப்பு.

காகித மலர்கள் என்று தன் வலைமலரை தன்யா குறிப்பிட்டாலும் அவை உண்மையிலேயே காகித மலர்களல்ல. ஓலமடங்கிய வெளிகளில் என தொடங்கும் கவிதையில்
குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு
என்னும் வரிகளே எடுத்துக்காட்டு. தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள் தடுக்கின்றன என்னும் கவிதையும் படிக்கவேண்டிய ஒரு கவிதை.


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்
என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.

உலகிலுள்ள அனைவரும் எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும். என இருந்தால் எப்படி இருக்கும். அந்த எண்ணத்தையே தன் வலைமலரின் தலைப்பாக்கியிருக்கும் ஷைலஜாவின் வலைமலரில் உங்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என கதம்பமாலையாக எல்லாம் கிடைக்கும். அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஒரே நோக்கில் எழுதிவரும் இவரது ஒவ்வொரு படைப்பும் படிக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுவே இவரின் வெற்றியின் ரகசியமும் கூட. தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை உள்ள இவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் வர்ணனையாளர் என்பதும் கூடுதல் தகவல்கள். உன்னை நினைக்கையிலே என்னும் இவரது கவிதை சமீபத்தில் அன்புடன் குழுமத்தில் நடந்த ஒலிவடிவ கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஷைலஜாவின் சிறு கவிதை ஒன்று:
மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நில மகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.

மலர்கள் அதிகமாக மலர்வது இளவேனில் காலத்தில் தான். இளவேனில் என தன் வலைமலரை குறிப்பிடும் தமிழ் நதி ஒரு வளர்ந்து வரும் கவிதாயினி. இவரது கவிதை தொகுப்பு சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆனந்த விகடனிலும் இவரது கவிதைகள் வந்துள்ளன. சமீபக்கால ஈழத்து கவிதாயினிகளில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மெல்லிய சோகம் இழையோடும் இவரது கவிதைகளை படித்தப்பின் ஒரு கணமாவது நம்மை அதிர செய்யும் என்பது நிதர்சனம்.
காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
இவரது நதியின் ஆழத்தில் என்னும் கவிதையை பாருங்கள் புரியும்.

மலர்களை ரசிக்க ஒரு மனம் வேண்டும் அதுவும் மனம் நமது உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. அதையே தன் வலைமலரின் தலைப்பாக வைத்திருக்கும் வேதாவின் மனம் - உண்மை முகம் வளர்ந்து வரும் ஒரு கவிதாயினியை நமக்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்கிறது. தனது மனதில் தோன்றுபவற்றை கவிதைகளாக கொட்டிவிடும் இவரது சமீப கால கவிதைகளில் நல்ல முதிர்ச்சியும் வளர்ச்சியும் தெரிகிறது. சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை என்னும் அவரது கவிதையில்:
அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விடுகின்றன
என கவிமொழி பேசுகிறார். இவரது வேதா என்னும் மற்றொரு வலைமலரில் பல சுவையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Saturday, May 26, 2007

நீங்கள் கல்ஃபில் வேலை செய்பவரா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."

டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"

ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"

டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."

ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"

டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."

ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"

டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"

ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். "
"காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்."
"காக்கா குளியல் குளிப்பேன்"
"மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்"
"முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்"
"இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்"
"எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்"
"என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்"
"என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"

டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"

ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"

டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"

நன்றி: அனுசுயா
ஆங்கிலத்திலிருந்து

Wednesday, January 17, 2007

இப்படியும் ஒரு பொங்கல்



எல்லோரும் பொங்கல் விழா எல்லாம் முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கரும்பு எல்லாம் சாப்பிட்டு சந்தோசமா இருக்கீங்க போலெ.

அட, பொங்கலெ பத்தி அவனவன் பதிவு எழுதறானே, நம்ம வீட்டு பொங்கலெ பத்தியும் எழுதலேன்னா எப்படின்னு தோணிச்சி.

பொங்கல் வாழ்த்துக்கள் ஒரு வாரமாவே வந்துட்டு இருந்ததாலெ இந்த தடவெ பொங்கல் நாள் மறக்கமுடியாமெ அப்படியே மனசிலெ பதிஞ்சிடிச்சி.

காலையில் எழுந்ததும் காப்பி போட்டு குடித்துக் கொண்டே தூங்கிகிட்டிருந்த மனைவிகிட்டெ பொங்கல் வாழ்த்துக்கள் சொன்னேன். "ம்ம்... சரி"... வாழ்த்துக்கள்.

"ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கப்போறோம்".

"ஏன் மாமா தூங்கிகிட்டிருக்கேனென்னு தெரியலெயா?" உங்களுக்கு இப்பத்தான் பொங்கலெ பத்தி கேக்கணுமா"

"எனக்கு இன்னிக்கி ஆபிஸ்லெ முக்கியமான வேலை இருக்கு, பொங்கல் எல்லாம் சாயங்காலம்தான்"

"என்ன நீ இப்படி சொல்லறே, எல்லோரும் காலையில் தானை குளிச்சி, புதுத்துணி போட்டு கொண்டாடுவாங்க"

"நீங்க இப்ப ஆபிசுக்கு போறிங்களா, இல்லையா?" தூக்க கலக்கத்தில் குரல் வலுக்கவும் எப்படியோ போகட்டும்னு அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

எப்பவும் போல அலுவலகம் வந்து கணினியை திறந்ததும். "அண்ணா, பொங்கல் வாழ்த்துக்கள்" "பொங்கல் சாப்பிட்டாச்சா" "நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்" என ஒரே பொங்கலோ பொங்கல் தான்.

சரி நம்ம பொளப்பெ சொல்லி இவங்க மூடையும் கெடுக்க வேண்டாமேன்னு நினெச்சி, எல்லோருக்கும் வாழ்த்துகள் சொன்னேன்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு தொலைபேசி, "என்ன பொங்கல் ரெடியாகிடுச்சா"

"ஏன் மாமா நா இப்பத்தானே ஆபிஸ்லெருந்து வர்றேன், இந்த பசங்களுக்கும் இன்னும் சாப்பாடு கொடுக்கலே, உங்களுக்கு பொங்கல்தான் முக்கியமா போச்சா"

"இல்லே அது வந்து ..... "

"சரி போனெ வைங்க, எனக்கு வேலை இருக்குது"

"சாப்பாடுக்கு வந்துடட்டுமா"

"நான் மெக்டொனால்டிலெருந்து எங்களுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்", உங்களுக்கு வேணும்னா தோசை போட்டு தர்றேன், வாங்க"

"தோசையா, இன்னிக்கி பொங்கல்ங்கறதெ மறந்துட்டெயா"

"அய்யோ, உங்க கூட தாங்க முடியலெயே",

"சரி சாயங்காலம் பொங்கல் பண்ணுவோம், இப்ப ஹோட்டல்லெயே சாப்பிட்டு வந்துடுங்க."

அலுவலக மேலாளரிடம் பொங்கல்னு சொல்லி ஒரு மணி நேரம் முன்அனுமதி கேட்டுட்டு நேரா வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் ஓட்டலில் போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (அங்கெ கொஞ்சமா சாஸ்திரத்துக்கு சக்கரை பொங்கல் கொடுத்துட்டாங்க) வீட்டுக்கு போனேன்.

சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மனைவி, நிமிர்ந்து பார்த்து
"என்ன மாமா, இன்னிக்கி சீக்கிரமா வந்துட்டீங்க"

"பொங்கல்!, அதான்."

என்னை ஒரு மாதிரியாக பார்த்த மனைவி, "சரி, சரி, வேலைக்காரி வந்துடட்டும், பாத்திரம் எல்லாம் கழுவாமெ அப்படியே இருக்கு, அவ வந்து கழுவி கொடுத்த பின்னாலெ பொங்கல் வைக்கறேன். சாயங்காலம் தானே எல்லோரும் வர்றாங்க"

"ம்ம்ம் சரி, சரி, குழந்தைங்க சாப்பிட்டாங்களா?"

"ஓ அப்பவே சாப்டாச்சே, இப்ப உள்ளே படிச்சிகிட்டிருக்காங்க"

"ஆமா, வடை செய்யறெயா"

"வடையா? பொங்கலுக்கு வடை யாராவது செய்வாங்களா?"

"இல்லே, செஞ்சா நல்லா இருக்குமேன்னு"

"சரி, சரி, செய்யறேன், கொஞ்சம் நேரம் பேசமெ இருங்க, இந்த நிகழ்ச்சி முடியட்டும்"

எனக்கும் களைப்பாக இருந்ததால் [ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட மயக்கம்(?!)] கொஞ்ச நேரம் படுக்கலாம்னு உள்ளே போனேன்.

பாத்திரங்களை கழுவும் சத்தம் கேட்டு எழும் போது மணி ஐந்தரை. அய்யோ அஞ்சரை ஆச்சேன்னு வேகமா எழுந்து ஹாலுக்கு போனேன். மனைவி எப்பவும் போல பொங்கல் நிகழ்ச்சிகளில்

"என்ன, இன்னும் பொங்கல் பண்ணலெயா?"
"ஏன் மாமா தூங்கி எந்திரிச்சி வந்து கத்தறீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எல்லாம் ரெடியாகிட்டிருக்கு"

சமையலறைக்கு போய் பார்த்தேன். அடுப்பை வேலைக்காரம்மா சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது கதவு தட்டற சத்தம். போய் திறந்தால் குழந்தைகள் ட்யூசனிலிருந்து வந்துவிட்டார்கள்.

அவர்களை பார்த்ததும் வீட்டுக்காரி, சரி சரி, எல்லோரும்னு போய் முகம் கழுவிட்டு வாங்கன்னு சொல்லி, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாங்க (அப்பாடா தொலைகாட்சிக்கு விடுதலை).

அட பொங்கலே இன்னும் தயாராகலெயே, அதுக்குள்ளே எப்படி பூஜைன்னு யோசிச்சிகிட்டிருக்கறப்ப வாழை இலையை இரண்டாக கிழிச்சி எடுத்துட்டு ஹாலுக்கு போனாங்க. அங்கெ இருந்த மின் சமைகலனை (Electric Cooker) திறந்தாங்க. உடனே என் சின்ன பெண் பொங்கலோ பொங்கல் என்று கூவ நானும் பொங்கலோ பொங்கல் என பின்பாட்டு பாட பொங்கலுக்கான பூஜை முடிந்தது. (நம்புங்க, புது பானைக்கு பதிலா மின்சமைகலன்)

பிறகென்ன கொஞ்சம் கொஞ்சம் பொங்கல் எல்லோருக்கும் மின்கலனிலிருந்து எடுத்து கொடுத்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.
சாயங்காலம் வடை, சாப்பாடு என செஞ்சாங்க.அப்புறம் என்ன நண்பர்களும் தம்பிகளும் வர மின்சமைக்கலனில் செய்யப்பட்ட எங்க வீட்டு பொங்கல் இரவு விருந்துடன் அமர்க்களமாக முடிந்தது.

பொங்கலோ பொங்கல்.