Wednesday, March 17, 2010

காபி வித் கவுண்டமணி


பதினாறு வயதினிலே படத்தில் நடித்ததன் மூலம் ஓரளவு பிரபலாமாகியிருந்த கவுண்டமணியை நான் அடிக்கடி எல்டாம்ஸ் சாலை பேருந்து நிறுத்தத்திலோ அல்லது எல்டாம்ஸ் ஹோட்டல் முன்பாகவோ நின்றுக்கொண்டிருப்பதை பார்ப்பேன். ஹோட்டலுக்கு எதிர்புறமுள்ள கடையின் மாடியில் நான் நண்பர்களோடு தங்கியிருந்தேன். ஒரு அறையில் திரைத்துறையை சேர்ந்த சில நண்பர்கள் தங்கியிருந்தனர். அங்கு அடிக்கடி ஜனகராஜ் வருவார். அவரும் அப்போது படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அவர் வந்தால் மிகவும் கலகலப்பாக இருக்கும் எங்கள் அறை.

ஒரு நாள் எல்லோரும் காபி சாப்பிடலாமெனெ எல்டாம்ஸ் ஹோட்டலுக்கு போனோம். நடிகர் சந்திரசேகரும் அங்கு நின்றிருந்தார். ஹோட்டலினுள் போகும் நேரத்தில் கவுண்டமணியும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். சில நிமிடங்கள் காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம்.நான் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தேன். புது வாய்ப்புகள் பற்றியும், நடிப்பது பற்றியுமான பேச்சுகள். காப்பி குடித்து முடித்ததும் காப்பிக்கான கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பின்னர் பல முறை அதே ஹோட்டல் வாசலில் அவரை பார்ப்பேன். ஆனால் பேசியதில்லை.

ஒரு சிறந்த காமெடியன் என சொல்வதைவிட குணச்சித்திர நடிகர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

சிம்புவுடன் கடைசியாக நடித்த ஒரு படத்திற்கு பிறகு அதிக படங்கள் இல்லாமல் இருந்தார். உடல் நலப்பிரச்சினையும் காரணம் என நினைக்கிறேன். சமீபத்தில் திரையுலகினர் நடத்திய ஒரு விழாவில் சத்யராஜுடன் மேடையில் ஏறி சில நிமிடங்கள் பேசினார்.

இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் எனவும் கேள்விப்பட்டேன்.

இரண்டு தினங்களுக்கு முன் கழுத்துவலியால் அவதிப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி. தற்போது நலமுடன் இருப்பதை அறிந்து ஆறுதல்.