Thursday, May 06, 2010

தமிழ் சினிமா - ஒரு பார்வை


நம்மில் பலருக்கு சினிமா உலகம் என்றாலே ஒரு சொர்க்கப்புரி என்ற நினைப்புமட்டுமல்லாது, நடிக, நடிகையர்கள் கடவுள்களாகவும், ஆதர்ஷ புருசர்களாகவும் இன்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப்படுகின்றனர். ஏன் தமிழ் நாட்டு அரசியலே திரைப்பட துறையை சேர்ந்தவர்களாலெயே ஆட்டுவிக்கப்பட்டு வந்துள்ளது.

தியாகராஜர் காலம் முதல் இன்றைய சிம்பு காலம் வரை சினிமா உலகம் ஒரு மாய உலகமாகவே பலருக்கு தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலையென்ன என பலருக்கும் தெரியவில்லை.

பல திறமையான இயக்குனர்கள் ஒரு படம் அல்லது இரண்டு படங்களுக்கு மேல் காணாமல் போய்விடுகின்றனர்... அதற்கு காரணம் அவர்களின் திறமையின்மையா என்றால் அது கிடையாது.... சினிமா உலகம் கந்து வட்டிக்காரர்களாலும், பண முதலைகளாலும், அண்டர்வோர்ல்ட் ஆட்களினாலும் ஆளப்பட்டு வருவதே. தயாரிப்பாளர்கள் இவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் பல காரணங்களால் படம் சரியாக எடுக்க முடியாமலும், எடுத்தும் தோல்வியில் முடிவதாலும் தங்கள் வாழ்க்கையையே இழந்துவிடுகின்றனர்.

கேடி குஞ்சுமோன், ஜி. வெங்கடேஸ்வரன், ஏ எம் ரத்னம் போன்ற பிரம்மாண்டமான படம் எடுத்தவர்களின் இன்றைய நிலை மிக பரிதாபம். இதில் ஜிவி மனம் நொந்தே இறந்துவிட்டார்.

அது போல பல இயக்குனர்களையும் நடிகர்களையும் அறிமுகம் செய்து பல வெற்றிப் படங்களை தயாரித்த ஆர்பி செளத்ரியின் இன்றைய நிலை என்ன என்பது கேள்விக்குறி.

பல நடிக நடிகைகள், இயக்குனர்கள் எல்லாம் ஒரு படம் கொஞ்சம் ஓடினாலே போதும் ஆடும் ஆட்டமும் செய்யும் ஜம்பங்களும் மிக மிக அதிகம். இதில் இயக்குனரே நடிகராக மாறி நம்மை சாகடிப்பதை என்னவென்று சொல்ல. இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். இரண்டு படங்கள் ஊத்திகிட்ட பிறகு இவர்களை சீண்டுவார் யாரும் இல்லை என்பதை மறந்து விடுகின்றனர்.

ஒரு சிலரை தவிர இது திரைப்படத்துறையில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

நடிக நடிகைகளையே எடுத்துக்கொண்டாலும் பலர் ஓரளவுக்கு காசு வந்தவுடன் சொந்த படம் எடுக்கிறேன் என ஆரம்பித்து அது தோல்வியில் முடிந்து பணமும் போய் பின் பட வாய்ப்புகளும் போய் ஒடுங்கி விடுகின்றனர். சிலர் எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்க தயாராகி விடுகின்றனர். உதாரணம்: ரம்பா, லக்சுமி, பானுப்ரியா, ரோஜா, தேவயானி இன்னும் பலர்.

சிலர் தங்கள் மகன்/மகள் போன்றோரை நடிகராக்க ஆசைப்பட்டு சொந்த படம் எடுத்து கையை சுட்டுக்கொள்கின்றனர்: பாரதிராஜா, ரவிச்சந்திரன், பாக்கியராஜ், தியாகராஜன் இன்னும் பலர்.

சில பிரபல நடிகர்கள் மார்க்கெட் டல்லாக இருக்கும் போது சொந்தப்படம் எடுத்து அதுவும் தோல்வியில் முடிந்து விலாசம் இல்லாமலே போய்விடுகின்றனர்: மோகன், இன்னும் சிலர்

ஏவிஎம், சிவாஜி பிலிம்ஸ் போன்றவர்களே கையை சுட்டு பின் ரஜினி யின் உதவியால் கொஞ்சம் தங்கள் நஸ்டத்தை ஈடு செய்தவர்களே.

கமலின் எத்தனை படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டிக்கொடுத்திருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறி!

விஜய்யின் தொடர்ந்த தோல்விப்படங்கள் மூலம் அவர் இன்று விலாசம் இல்லாமல் போயிருப்பார். சன் ஊடகம் மூலம் இன்னும் மூச்சு வாங்கிக்கொண்டிருக்கிறார்.

அஜீத்தில் அசல், கிரீடம், நடுவில் வந்த இருபடங்களும் தோல்விப்படங்களே.

விக்ரம் தொடர்ந்து மூன்றோ நாலோ தோல்விபடங்களை கொடுத்துவிட்டார்.

சூர்யாவின் வாரணம் ஆயிரம் பெரிய லாபத்தை கொடுக்கவில்லை என்பதே உண்மை அது போல சமீபத்தில் வந்த இரு படங்கள்.

மேலும் சமீபத்தில் வந்த பல படங்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. மேலும் பல படங்கள் ஒரு சில காட்சிகள் தயாரிக்கப்பட்டும், பாதி முடிந்த நிலையிலும் சில இறுதி பகுதிகள் முடியாத நிலையிலும் சில ரிலீஸ் செய்ய முடியாத நிலையிலும் அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்து இருந்து வருகின்றன. இவற்றினால் ஏற்படும் நஸ்டம் மிக மிக அதிகம். அது படத்தை தயாரிப்பவரையே சாரும். கந்து வட்டிக்கு வாங்கி தயாரிக்கும் இது போன்ற படங்கள் மூலம் எத்தனையோ தயாரிப்பாளர்கள் இன்று சோற்றுக்கே வழியில்லாமல் நாதியற்று போயிருக்கின்றனர் என்பது தான் கசக்கும் உண்மை.

மிகவும் குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்களே சினிமா மூலம் சம்பாதிக்கும் பணத்தை உருப்படியான வழியில் முதலீடு செய்கின்றனர். சிலர் தங்கள் வாரிசுகள் சரியில்லாமல் போவதால் பெரும் நஸ்டமும் அவமானமும் அடைகின்றனர். இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

அடுத்து திடீரென பணம், புகழ் என வருவதால் தலைகால் புரியாமல் ஆடி எல்லா தீயப்பழக்கங்களுக்கும் ஆளாகி அழிபவர்கள் ஒரு புறம். இதற்கும் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதில் குடித்தே செத்தவர்கள் மிக அதிகம். சுருளிராஜன், விஜயன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

நடிகைகள் என்றால் புகழ், பணம் என்ற போதையில் செய்வதறியாமல் பல தவறுகள் செய்து வழிகாட்டிகள் இல்லாமல் தற்கொலைகளில் தங்கள் வாழ்க்கையை முடித்துவிடுகின்றனர்.

திருமணம் செய்யும் பல நடிகைகள் விவாகரத்து செய்வதற்கு முக்கிய காரணமே அவர்களின் கடந்த கால வாழ்க்கையும், நிஜ வாழ்க்கையுடன் அவர்களால் சமாளித்துக்கொண்டு போக முடியாமையுமே!. இதில் மிகவும் பெரிய ஜோக் காதல் கல்யாணம் செய்பவர்கள் பின் விவாகரத்து செய்வது (பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபுதேவா etc.). அதனாலெயே சில புத்திசாலி நடிகைகள் இரண்டாம் அல்லது மூன்றாம் திருமணம் செய்து செட்டில் ஆகிவிடுகின்றனர். (ஹேமா மாலினி, ஸ்ரீதேவி, ராதிகா)

மேலும் பலர் எவ்வளவோ திறமை இருந்தும் கடைசி வரை வெளியில் தெரியாமலே வாய்ப்புகள் கிடைக்காமலே மங்கி போய்விடுகின்றனர்.நல்லவர்கள் இருக்கின்றனர் என்றாலும் ஏமாற்றுக்காரர்களும் ஏய்ப்பவர்களும் மிக அதிகமாக இருக்கின்றனர் என்பதே உண்மை.

சினிமா உலகம் வெளிப்பார்வைக்கு வேண்டுமானால் கவர்ச்சியாக தோன்றலாம்.. ஆனால் உள்ளே மிகவும் நாறிப்போய் கிடக்கிறது என்பதே சோகமான உண்மை.