Tuesday, September 27, 2005

ஒரு நம்பிக்கை துரோகம்

ஓரு நம்பிக்கை துரோகம்
முதலில் அவனை வெளியே இழு!
அவனது வீட்டை
அடிக்கல்லிலிருந்து தோண்டி எடுத்து
ஒரு ஓரத்தில் கட்டிலைப்போல சாய்வாய் நிறுத்தி வை!
பிறகு அவனை தூக்கிமூடிய கதவுக்கு மேலே இருத்து!
அவன் நிலை தடுமாறுவான்.

அவன் கைகளை பின்னால் கட்டி
கண்களை ஒரு வண்ணப்பொய்யினால் மூடு!
எது செய்தாலும் அவனிடம்
எந்தவித அசைவுகளும் இருக்காது

இவை அனைத்தும் தன் நன்மைக்கே
எனக்க்கூட அவன் ஒரு கணம் எண்ணக்கூடும்!

இப்போது அவன் வீட்டுக் கிணற்றிலிருந்து
கயிறை எடுத்து சுருக்குப் போட்டு
அவன் கழுத்தில் மாலையாய் போடு!
அவன் ஒன்றும் செய்யமாட்டான்!

பூஜையறைக்கிண்டியைப் போல
அசைவேதும் இருக்காது அவனிடம்

கயிற்றின் மறுமுனையை
அவன் வீட்டின்முன் இருக்கும்
பழைய மரத்தில் கட்டு!

அவன் உன்னை வணங்குவான்.

இப்போது கேள், அவனுக்கு என்ன வேண்டுமென்று!

தனது வீட்டில் அமைதியாக
வாழவேண்டுமென்று அவன் சொன்னால்
மெதுவாக எழுந்து அவனுக்காக
அவன் வீட்டுக் கதவைத் திறந்துவிடு!

அவன் வேதனையில் துடிப்பான்
ஆனால் துடிப்பில் விண்ணப்பமிருக்காது
அவன் மிக விரைவில் இறந்து விடுவான்
பிறகு அவனுக்கும் உனக்கும்
எந்த வித்தியாசமும் இருக்காது


இந்தியில் : குன்வர் நாராயண்

மொழியை தொலைத்துவிட்டேன்

மொழியை தொலைத்துவிட்டேன் என்று
எந்த அர்த்தத்தில் சொன்னாயென
என்னை நீ கேட்டாய்

நான் கேட்டேன்,
உன்னிடம் இரண்டு மொழிகள் இருந்து
அதில் தாய்மொழியை தொலைத்துவிட்டு,
மற்றொன்றையும் சரியாக அறியாமல் இருந்தால்
என்ன செய்வாய் என்று.

நீ நினைத்தாலும் கூட
உன்னால் இரண்டு மொழிகளையும்
ஒரே நேரத்தில் பேச முடியாது

நீ வசிக்கும் இடத்தில்
அயல் மொழிதான் பேசவேண்டும் எனும்போது
நீ உமிழவில்லையெனில்
உன் தாய்மொழி அழுகி அழுகி
உன் வாய்க்குள்ளேயே மரித்துவிடும்

அதைத் உமிழ்ந்துவிட்டேன்
என்றே நான் நினைத்தேன்
நேற்றைய என் கனவில்
அது மீண்டும் வரும் வரை.

திரும்பவும் வளர்ந்து வந்தது,
அதன் கிளைகள் நீண்டு வளர்ந்தன,
ஈரத்துடனும், முறுக்கிய நரம்புகளுடனும்
அது மேலும் மேலும் வளர்ந்தது
அது அயல் மொழியை இறுக்கமாக கட்டியது.
மொட்டு மலர்ந்தது,
மொட்டு மலர்ந்தது எனது வாயிலிருந்து
அது அயல் மொழியை ஓரமாக தள்ளியது
ஒவ்வொரு முறையும் தாய் மொழியை
மறந்துவிட்டேனோ என்ற நினைப்பும்,
தொலைந்து போனதோ
என்ற எண்ணமும் வருகையில்.
என் வாயிலிருந்து மீண்டும் மலர்கிறது

அமைதி விற்கும் அங்காடி

அமைதியை விற்கிறான் என் அண்டைவீட்டுக்காரன்.
அவனுடைய ஒலிப்பெருக்கிக் கடை
என் பக்கத்து வீடு

சூரியன் உதிப்பதற்கு இரண்டுமணி நேரத்திற்குமுன் ஒலிப்பெருக்கியை இயக்காமலிருக்க அவனுக்கு நான் மாதம் நூறு ரூபாய் கொடுக்கிறேன்.

அவனுக்குத் தெரியும் அமைதியின்றி வாழமுடியாத என்னைப் போன்ற பல துரதிர்ஸ்டசாலிகளை
அவனுக்குத் தெரியும் இனி வரும் நாட்களில் நல்ல குடிதண்ணீருக்கும், மாசில்லாதக் காற்றுக்கும் ஏற்படும் பற்றாக்குறையைவிட அமைதிக்கு அதிகப் பற்றாக்குறை ஏற்படுமென்று

காலத்தின் சுழற்சிகள் முடிந்துவிட்டன என்றும் இனி வரும் நாட்களில் அமைதியை விற்று தான் வாழ்க்கை நடத்தவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியும்

இந்தியாவைப் போனற விலைவாசி ஆகாயத்தை எட்டிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் மாதம் வெறும் நூறு ரூபாய் வாங்கிக் கொண்டு இரண்டு மணி நேரம் அமைதியைத் தரும் அவனுக்கு நான் நன்றி சொல்கிறேன்.