Wednesday, April 19, 2006

"நம்பிக்கை முதலாம் ஆண்டு விழா" போட்டி அறிவிப்பு

நம்பிக்கை குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா
கவிதை மற்றும் கட்டுரை போட்டிஅறிவிப்பு மடல்
இணையத்தின் இனிய நண்பர்களே! சக குழும நண்பர்களே வணக்கம்!உங்கள் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது முதலாம் ஆண்டுவிழாவினை ஏப்ரல் 23, 2006 - ல் கொண்டாடுகிறது. அதை சிறப்பிக்கும் விதத்தில் நம்பிக்கை நண்பர்களின் வேண்டுகோளின் படி இணையத்தில் கவிதை மற்றும் கட்டுரை போட்டியை நடத்தி சிறந்த ஆறு படைப்புகளை தேர்ந்தெடுத்து அவற்றிற்கு புத்தகப் பரிசு வழங்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி:1. இணையத் தமிழில் ஈடுபாடு உள்ளவர்கள் எவராகினும் இருக்கலாம்.2. நம்பிக்கையின் உறுப்பினராக இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது.3. வலைப்பூ நண்பர்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றனர்.
போட்டி விதி முறை:
கவிதை !1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் (அ) சமூக பார்வை கொண்ட கவிதையாய் இருத்தல் வேண்டும்! (தலைப்பு உங்கள் விருப்பப்படி வைக்கலாம்)2. கவிதை வரிகளுக்கு கட்டுப்பாடு இல்லை. எத்தனை வரிகள் வேண்டுமானாலும் இருக்கலாம்! மரபுக்கவிதை (அ) புதுக்கவிதையாகவும் இருக்கலாம்.3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!
கட்டுரை !1. மனிதனுக்கு நம்பிக்கையை விதைக்கும் சமூக பார்வை கொண்ட கட்டுரையாய், மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் கட்டுரையாய் இருத்தல் வேண்டும்!2. குறைந்தபட்சம் ஒருபக்கம் அளவில் இருக்க வேண்டும். மற்றபடி கட்டுப்பாடு இல்லை.3. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!4. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!
படைப்பை அனுப்ப கடைசி நாள்14 - 05 - 2006 (ஞாயிறு) இந்திய நேரம் இரவு 7.00 மணிக்குள்
தேர்வு குழுபடைப்பை தேர்ந்து எடுப்பவர்கள் முனைவர் பட்டம் பெற்ற மொழி வல்லுநர்கள், பேராசிரியர்கள், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீகச் செம்மல்கள்.
உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப் பட்டு தேர்ந்தெடுக்கப் படும்.முதலாம் இடம், இரண்டாம் இடம் என்று வகைப்படுத்தப் போவதில்லை.கவிதை மற்றும் கட்டுரைகளில் இருந்து சிறந்த மூன்று, மூன்று படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அவற்றிற்கு பரிசளிக்கப் படும்.
அனுப்பப்படும் படைப்புகளை நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.
தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் மே மாத இறுதியில் அறிவிக்கப்படும்.
படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:1.பரஞ்சோதி paransothi@gmail.com2.உமாநாத்(எ) விழியன் umanaths@gmail.com3.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com
இந்த 3 மின்னஞ்சலுக்கும் அனுப்பி வையுங்கள்.
மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களை தொடர்பு கொள்க!
முக்கியக் குறிப்பு :தேர்தெடுக்கப்படும் கவிதைகள், கட்டுரைகள் சும்மா பொழுது போக்கிற்காக அன்று , சில நல்ல நோக்கங்களுக்காக பயன்படுத்தப் படவும் உள்ளது என்பதை நம்பிக்கை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.
உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவண்,நம்பிக்கை நண்பர்கள்கூகுள் குழுமம்.http://groups-beta.google.com/group/nambikkai/

Wednesday, April 12, 2006

மாணவர்கள் ஏன் தேர்வில் தோல்வி அடைகிறார்கள்?

இன்று காலை நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது அவர் சொன்னார், மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் முக்கியமான சில விசயங்களை மறந்து விடுகிறார்கள் என்றார். அதென்ன முக்கியமான விசயங்கள் என்று நான் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:

ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தேர்வில் தோல்வி அடைவதற்கு அவர்களை குற்றம் சொல்லி எந்த புண்ணியமும் இல்லை.

ஏனென்றால் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள்

சராசரியாக ஒரு மாணவனின் கல்வியாண்டில்:

52 ஞாயிற்று கிழமைகள் விடுமுறை. மீதி இருப்பது 313 நாட்கள்.

கோடைவிடுமுறை 50 நாட்கள். இந்த சமயத்தில் வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாக சரியாக படிக்க முடியாது. மீதி 263 நாட்கள்.

ஒரு நாளுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்கினால் அதில் 122 நாட்கள் போய்விடும். மீதி 141 நாட்கள்.

உடல் ஆரோக்கியத்திற்காக தினம் ஒரு மணி நேரம் விளையாட்டில் கழித்தால் அதில் ஒரு 15 நாட்கள் போய்விடும். மீதி 126 நாட்கள்.

சாப்பாடு, மற்றும் கொறித்தல் பொன்றவைகளுக்கு ஒரு நாளில் இரண்டு மணி நேரம் அதில் ஒரு 30 நாட்கள். மீதி இருப்பது 96 நாட்கள்.

குறைந்த அளவு என்றாலும் தினம் ஒரு மணி நேரமாவது பேசுகிறோம் (பெண்கள் இன்னும் கொஞ்சம் அதிகம்). இதில் 15 நாட்கள். மீதி 81 நாட்கள்.

ஒரு வருடத்தில் பல வித பரீட்சைகளுக்காக சுமார் 35 நாட்கள் போய்விடும். மீதி 46 நாட்கள்.

காலாண்டு, அறையாண்டு, பண்டிகை போன்றவற்றுக்காக விடுமுறை 40 நாட்கள். மீதி இருப்பதோ ஆறு நாட்கள்.

எப்படியும் உடல்நல குறைவு ஏற்படுவதால் வருடத்திற்கு குறைந்தது மூன்று நாட்கள் அதில் போய்விடும்.மீதி இருப்பது மூன்று நாட்கள். ஏதாவது முக்கிய நிகழ்ச்சிக்கோ, அல்லது சினிமாவுக்கோ மிக மிக குறைந்த அளவென்றாலும் இரண்டு நாட்கள் அதில் போய்விடும்.

இப்பொழுது இருப்பதோ ஒரே ஒரு நாள்.

அந்த ஒரு நாள் அவர்களின் பிறந்த நாள்.

பிறகு எப்படித்தான் தேர்வில் வெற்றிப்பெற முடியும்?



பின்குறிப்பு: இந்த செய்தி ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

Monday, April 10, 2006

வாழ்க்கைக்கான இனிய பாடம்

ஒரு மாணவன் ஆசிரியரை பார்த்து கேட்டான்: "காதல் என்றால் என்ன?"

ஆசிரியர் சொன்னார் உனது கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமென்றால் நீ வயலுக்கு போய் ஒரு மிகப் பெரிய கதிரை அறுத்துக்கொண்டு வா என்றார்.
ஆனால் ஒரு நிபந்தனை: நீ ஒரே தடவையில் இந்த வேலையை முடிக்க வேண்டும். திரும்பவும் செய்யக்கூடாது.

மாணவன் வயலுக்கு சென்று முதல் வரிசையில் பார்த்தான் அங்கே ஒரு நீளமான பெரிய கதிர் ஒன்றைக் கண்டான். உடனே நினைத்தான் இதைவிட பெரிதாக வேறு கதிர் இருந்துவிட்டால். ஓ அங்கே இன்னொன்று பெரிதாக இருக்கிறதே!, அதோ இன்னொன்று அதை விட பெரிதாக….

ரொம்ப நேரம் கழித்து பாதி வயலை சுற்றிய பிறகும் அவனால் எந்த கதிர் பெரிய கதிர் என்று நிச்சயிக்க முடியவில்லை. முதலில் பெரிதாக தெரிந்தது பின்னர் வேறொன்றை பார்க்கும்போது சிறிதாக தெரிந்தது. அவன் மிகவும் வருத்தமுற்றான். அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. வெறுங்கையுடன் வகுப்புக்கு திரும்பினான்.

ஆசிரியர் சொன்னார். இதுதான் காதல். நீ சரியான ஒருத்தி கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருக்கவேண்டும். பின் ஒரு நாள் நீ உணர்வாய் நீ தேடியது ஏற்கனவே உன் கையைவிட்டு தவறிப்போய்விட்டது என்று.

இப்பொழுது மாணவன் ஆசிரியரிடம் அடுத்த கேள்வியை கேட்டான்.

"திருமணம் என்றால் என்ன? "

"இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவேண்டுமென்றால் நீ சோளக்கொல்லைக்கு போய் இருப்பதிலேயே பெரிய சோளக்கருதொன்றை அறுத்துக்கொண்டு வரவேண்டும்" என்றார்.

ஆனால் ஒரு நிபந்தனை: நீ ஒரே முயற்சியில் இந்த வேலையை முடிக்க வேண்டும். திரும்பவும் செய்யக்கூடாது.

மாணவன் சோளக்கொல்லைக்கு போனான். இந்த முறை முதலில் செய்தது போல எந்த தவறும் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அவன் சோளக்கொல்லைக்குள் புகுந்து நடுமையத்திற்கு சென்று ஒரு சராசரி அளவுள்ள சோளக்கருது ஒன்றை அறுத்து எடுத்துக்கொண்டு திருப்தியுடன் வகுப்புக்கு திரும்பினான்.

அந்த சோளக்கதிரை பார்த்த ஆசிரியர் சொன்னார், "இந்த முறை நீ உனக்கு பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டு வந்திருக்கிறாய். இதுதான் மிகவும் சிறந்தது என்பதில் உனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ….
"இது தான் திருமணம்"


ஆங்கிலத்திலிருந்து - நன்றி : வினோத்

Sunday, April 09, 2006

நமது பெற்றோருடன் நாம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும்

அந்த சோபாவில் அமர்ந்திருக்கும் பெரியவருக்கு சுமார் எண்பது வயதிருக்கும், அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அவர் மகனுக்கு சுமார் நாற்பத்தைந்து வயது இருக்கும். உயர்ந்தப் படிப்பு படித்திருக்கிறார் என்பதை அவர் முகம் காட்டுகிறது.

அப்பொழுது ஒரு காகம் பறந்து வந்து ஜன்னல் கதவில் அமர்கிறது.
தந்தை மகனைப் பார்த்து "என்ன சததம்?"

மகன் : "அது ஒரு காகம் ஜன்னல் கதவில்"

சில நிமிடங்களுக்கும் பிறகு தந்தை மீண்டும் மகனைப் பார்த்து "என்ன சத்தம்"

"அப்பா, நான் இப்பத்தானே சொன்னேன் அது காகம் என்று "

சிறிது நேரம் கழிந்தது. வயதான அந்த தந்தை மறுபடியும் மகனைப் பார்த்து

"என்ன சத்தம் அது ?" என்று கேட்டார்

இப்பொழுது மகன் எரிச்சலடைந்த குரலில் "அது காகம், காகம்" என்று சத்தமாக கூறினார்.

இன்னும் சிறிது நேரம் கழிந்தது. தந்தை நான்காவது முறையாக தன் மகனை நோக்கி "என்ன சத்தம் அது" எனக் கேட்டார்

இப்பொழுது பொறுமையிழந்த மகன் சத்தமாக எதுக்காக கேட்டக் கேள்வியையே திரும்ப திரும்ப கேட்கிறீர்கள்? நான் தான் பலமுறை சொன்னேனே அது காகம்ன்னு. உங்களுக்கு இதுகூட புரியலையா?"

கொஞ்ச நேரம் கழிந்தது. தந்தை மெதுவாக சோபாவிலிருந்து எழுந்து தனது அறைக்கு போய் ஒரு பழைய நைந்து போன டைரியை கொண்டு வந்தார். அந்த டைரியை அவர் தன் மகன் பிறந்த நாளிலிருந்து பாதுகாத்து வருகிறார். அதை புரட்டி ஒரு குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து மகனுக்கு கொடுத்து படிக்க சொன்னார்.

அந்த டைரியில் எழுதியிருந்த வாசகங்கள் வருமாறு:

"இன்று காலையில் என் மூன்று வயது மகன் சோபாவில் என் அருகில் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது ஒரு காகம் வந்து ஜன்னலில் அமர்ந்தது. அதைப் பார்த்த என் மகன் சுமார் இருபத்தி மூன்று தடவை அது என்ன என்று திரும்ப திரும்பக் கேட்டான். நானும் அவன் கேட்கும்போதெல்லாம் அது காகம் என்று சொன்னேன். ஒவ்வொரு முறையும் ஒரே கேள்வியை அவன் கேட்கும் போது நான் அவனை கட்டி அணைத்தப்படி அவனுடைய கேள்விக்கு இருப்பத்தி மூன்று முறையும் பதில் சொன்னேன். பலமுறை அவன் கேட்டும் எனக்கு சிறிதளவேனும் அவன் மீது கோபமோ, எரிச்சலோ உண்டாகவில்லை அதற்கு பதில் அந்த அப்பாவி குழந்தையின் மீது அன்பும் பாசமும் தான் அதிகமாயிற்று."

அந்த சிறு குழந்தை இருபத்திமூன்று முறை அது என்ன என்று கேட்டும் அந்த தந்தை எரிச்சலடையாமல் பொறுமையாக அந்த குழந்தைக்கு பதில் சொன்னார்.

இன்று அதே தந்தை தன் அதே மகனிடம் அதே கேள்வியை வெறும் நாலு முறை கேட்டதற்கு அந்த மகன் எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன:

உங்கள் பெற்றோருக்கு வயதாகி விட்டால் அவர்களை ஒதுக்கவோ, அவர்களை உங்களுக்கு ஒரு பாரமாகவோ நினைக்காதீர்கள். அவர்களுடன் அன்பாக நாலு வார்த்தை பேசுங்கள், பணிவாக இருங்கள், அவர்களுக்கான மரியாதையை கொடுங்கள்.அவர்களை புரிந்துக் கொள்ளுங்கள்.

இன்று முதல் சத்தமாக உரக்க சொல்லுங்கள், "என் பெற்றோர் எப்பொழுதும் சந்தோசமாக இருக்கவேண்டும். நான் சிறு குழந்தையாக இருந்தப் போதிலிருந்து அவர்கள் என்னை பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். தன்னலமற்ற அன்பை அவர்கள் என்மீது எப்போதும் காட்டியிருக்கிறார்கள். எல்லா கஸ்டத்தையும், துயரங்களையும் தாங்கள் ஏற்றுக்கொண்டு, வெயில், புயல், மழை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டு என்மீது ஒரு சிறு தூசியும் படாமல் பாதுகாத்து இன்று என்னை இந்த அளவிற்கு சமுதாயத்தில் ஒரு உயர்நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இன்றைய என் நிலைக்கு அவர்களே காரணம்."

இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள், "நான் எனது வயதான பெற்றோர்களுக்கு மிக சிறந்த முறையில் சேவை செய்வேன். அவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும் நான் என் பெற்றோரிடம் மிக நல்ல அன்பான வார்த்தைகளை மட்டும் பேசுவேன்."

இந்த உலகில் முடியாது என்று எதுவுமே இல்லை. முடியும் என்றொரு வார்த்தை இருப்பதால் தான் முடியாது என்ற வார்த்தை தோன்றியது. ஆதலால் முடியும் என்பது நிச்சயமான உண்மை.

Nothing in this world is IMPOSSIBLE ,,, coz the word IMPOSSIBLE itself says I M POSSIBLE..
KEEP SMILING ALWAYS

என்றும் புன்னகை உங்கள் அணிகலனாய் இருக்கட்டும்

நன்றி: பரமேஸ்வரி.