Sunday, June 15, 2008

தசாவதாரமா? ஹசாவதாரமா?


படத்தின் ஆரம்பம் கொஞ்சம் அசத்தலாக இருந்ததால் நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே ஒரு மாபெரும் கிராஃபிக்ஸ் அரங்கத்தை காட்டியதும் ஓரளவு படத்தின் நோக்கம் புரிந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு வந்த பத்தாம் நூற்றாண்டு கதையில் அந்த மாபெரும் சிலையை ஒற்றையாளாய் தூக்கி நகர்த்தியதை பார்க்கையில் கொஞ்சம் லேசாக பூசுத்த ஆரம்பித்துவிட்டார்களோ என தோன்றி முடிக்கும் முன் இயேசுவை தொங்க வைத்தது போல கம்பிகளால் கமலை முதுகில் குத்தி தொங்க வைக்கிறார்கள். ஆனால் ஆச்சரியம் முதுகில் கம்பியால் குத்தப்பட்ட இடங்களிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்த வில்லை என்பது.

பல வேடங்களை ஒப்பனை மூலம் திறம்பட செய்தவர்கள் ஒரே முகத்துடன் அமெரிக்கனையும், உயரமான முஸ்லீம் உருவத்தையும் காட்டியதில் ஏன் வித்தியாசம் காட்ட மறந்துவிட்டார்கள் என தோன்றியது. உயரம் மட்டும் போதும் என நினைத்துவிட்டார்களோ!

ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் கடலை காட்டும் போது கிராஃபிக்ஸ் வேலை நன்றாக தெரிகிறது. அது போலவே சுனாமியிலும். பல இடங்களில் அவை செட்டிங் என்பது கண்கூடாக தெரிகிறது. இசை பரவாயில்லை ரகம். அசினின் நடிப்பில் கஜினி படத்தில் சாயல் எட்டிப்பார்க்கிறது என்றாலும் அந்த உயிர்ப்பு இதில் இல்லை, மிகவும் செயற்கையான நடிப்பு.

உளவுதுறை அதிகாரி, மற்றும் பூவராகன் வேடங்கள் மனதில் பதிகின்றன.
கதை வசனம் கமல் என போடுகிறார்கள். ஆனால் பல இடங்களில் கிரேஸி மோகனின் வாடை அடிக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் ரவிகுமாராம் அவர் உலக்க நாயகனே என்ற பாட்டில் கமலை புகழ்ந்து தள்ளுவதை பார்த்தாலே யார் இயக்குனர் என சுலபமாக தெரிந்துவிடுகிறது. புஷ், கருணாநிதி, மன்மோகன் சிங் என படத்தில் தோன்றவைத்திருப்பதற்கு, (கூடவெ ஒரு கட்டத்தில் உண்மையான ஜெயலலிதா) ஏதேனும் காரணங்களை மக்கள் கண்டுபிடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கமலின் முயற்சியை பாராட்டலாம். ஆனால் அதற்கு இத்தனை செலவு செய்து காதில் பூ சுத்த வேண்டுமா!(ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு போட்டப்பணம் எப்படியும் வசூலாகி விடும் என்பது வேறு விசயம் - போடப்பட்ட அதிகபட்ச பிரிண்ட்களின் மூலமும் அதிகபட்ச எதிர்ப்பார்ப்புகளினாலும் முதல் பதினைந்து நாட்கள் அனைத்து திரையரங்குகள் நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம்)

கடைசி கட்ட காட்சிகள் ரொம்பவும் இழுவை. எப்பவும் போல ஒரு மசாலா படத்தை பார்த்துவிட்டு தலைவலியோடு வீட்டுக்கு வந்ததை தவிர பெருசாக சொல்ல ஒன்றும் இல்லை.

இன்னொரு அன்பே சிவம், சலங்கை ஒலி, தெனாலி, மகாநதி போன்ற ஒரு படத்தை விரைவில் எதிர்ப்பார்ப்போம்.

Sunday, May 25, 2008

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு உங்களுக்கு பிடிக்கவில்லையா?

நீங்கள் தினமும் சாப்பிடும் உணவு உங்களுக்கு பிடிக்கவில்லையா?

இன்று ஒரு மாறுதலுக்காக பிட்சா சாப்பிடுவோமா?



வேண்டாமா? சரி, பாஸ்தா?


அதுவும் வேண்டாமா ?? .. டாக்கோ நல்லா இருக்குமே?



என்ன இன்னிக்கி டாக்கோ சாப்பிடும் எண்ணம் இல்லையா ? ... சரி.. இந்த மெக்ஸிகன் உணவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?



அதுவும் வேண்டாமா? பரவாயில்லை, இன்னும் நெறைய உணவு வகைகள் இருக்கு.....
ம்ம்ம் சைனீஸ்???????



பர்கர்ஸ்????????



சரி சரி இந்திய உணவு தான் வேண்டுமா?

ஏதேனும் இனிப்பு வகை சாப்பிடலாமா?



தென்னிந்திய உணவா?

இல்லே! வட இந்திய உணவா?



வேண்டாத உணவு எனப்படும் ஜங்க் புட் பத்தி என்ன நினைக்கிறீங்க?



அல்லது பத்திய உணவா??



நீங்கள் எதைவேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், முடிவே இல்லை!

சிற்றுண்டி?



அசைவம்?



பல்வேறு சுவையுடன் கூடிய சாப்பாடு



அல்லது கொஞ்சம் கோழி வறுவல்

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், அல்லது எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சுவைத்து பார்க்கலாம்...

ஆனால்..

இவர்களால் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது...

இவர்கள் உயிருடன் இருப்பதற்காக கொஞ்சம் உணவு இருந்தால் போதும்






அடுத்த முறை இந்த உணவு சரியில்லை என்று குப்பையில் கொட்டுவதற்குமுன் ஒரு முறை இவர்களை பற்றி கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்!!



இந்த சப்பாத்தி கல்லு மாதிரி இருக்கிறது என அடுத்தமுறை சொல்வதற்குமுன்கொஞ்சம் யோசித்து பாருங்கள்


இவர்களை போல ஆயிரமாயிரம் குழந்தைகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்



தயவு செய்து உணவை வீணாக்காதீர்கள்

"வணங்கும் உதடுகளை விட உதவும் கரங்களே சிறந்தவை"

மேலும் விவரங்களுக்கு: http://www.childlineindia.org.in/

நன்றி

மஞ்சூர் ராசா


(ஆங்கிலத்தில் வந்த மடல்)

Thursday, May 15, 2008

கிரிக்கெட் சூதாட்டம் - ஒரு பார்வை


//கொளுத்தும் வெயில் காலையிலிருந்து நம்மை வாட்டியெடுக்க மாலையானால்
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் சுடச்சுட நடந்து நம் இதயத்துடிப்பை எகிர
வைத்துக் கொண்டிருக்கும் நாட்கள் இவை. விளையாட்டை ரசித்துப் பார்த்துக்
கொண்டிருக்கும் இந்த வேளையில், பகிரங்கமாக நடந்து கொண்டிருக்கிறது
சூதாட்டம் ஊடகங்களின் துணையுடன். நேற்றைய போட்டியின் நடுவே எதேச்சையாக
ஹலோ பண்பலை (Hello FM 106.40MHz) கேட்க நேர்ந்தபோது முற்றிலும் அதிர்ந்து
போனேன். அந்த பண்பலை ஒலிபரப்பு நிகழ்ச்சியில் நடந்தது இது தான். ஒரு ஓவர்
வீசப்படும் போது இந்த நிகழ்ச்சியில் மூன்று பேர் பங்கேற்கலாம். நேயர்கள்
அந்த ஓவரில் எடுக்கப்படும் ஓட்டங்களைத் தொலைபேசி வாயிலாகக் குறிப்பிட
வேண்டும். குறிப்பிடப்பட்ட‌ ஓட்டங்கள் எடுக்கப்பட்டால், அந்த ஓவருக்காக
நிர்ணயிக்கப்பட்ட பரிசுத்தொகை அந்த நேயருக்கு வழங்கப்படும்.
நிர்ணயிக்கப்பட்ட‌ பரிசுத்தொகையோ பத்தாயிரம் ரூபாய் வரை. இரு நேயர்கள்
ஒரே அளவிலான ஓட்டங்களைக் குறிப்பிட்டால், பரிசுத்தொகை வழக்கம் போல்
பகிர்ந்தளிக்கப்படும். போதாக்குறைக்கு, குறுந்தகவல் போட்டிக் கேள்விகள்
வேறு. அதில் ஜெயித்தால் ஐந்தாயிரம் பரிசு.(நன்றி சகாரா தென்றல்)//முத்தமிழ் குழுமத்தில் வந்த ஒரு மடலில் முதல் பத்தி இது.

கிரிக்கெட் சூதாட்டம்

கிரிக்கெட் சூதாட்டம் என்பது மேலே குறிப்பிட்டது அல்ல. இதுவும் ஒரு வகையில் சூதாட்டம் என்றாலும் கிரிக்கெட் சூதாட்டம் இதை விட பன்மடங்கு பெரியது

கொஞ்சம் விவரமாகவே சொல்வதென்றால்:

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பே சூதாட்டம் தொடங்கிவிடும்.

புக்கிகள் (குதிரைப்பந்தயத்தில் இந்த சொற்றொடர் வழங்கப்படுகிறது, தரகர் என தமிழில் சொல்லலாம்) இவர்கள் மூலமே சூதாட்டம் நடைபெறுகிறது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன் இரு அணிகளிலும் யார் யார் இருப்பார்கள் என்று தொடங்கி பந்தயம் ஆரம்பிக்கும். அதற்கும் பணம் கட்டப்படும். பிறகு எந்த அணி டாஸில் ஜெயிக்கும் என ஒரு பந்தயம் நடக்கும். இதில் பெருமளவு பணம் போடப்படும்.

டாஸில் ஜெயித்த அணி பந்து வீசுமா அல்லது மட்டையை பிடிக்குமா என ஒரு பந்தயம்
அடுத்து முதல் பந்தை யார் வீசுவார்கள் என ஒரு பந்தயம். முதல் பநதை யார் அடிப்பார்கள் என இன்னொன்று. முதல் பந்தில் வெளியேறுவாரா இல்லையா என ஒரு பந்தயம், எத்தனை ஓட்டங்கள் எடுப்பார் என ஒரு பந்தயம், முதல் பந்து எத்தனை வேகத்தில் வீசப்படுகிறது என பந்தயம், யார் யார் எங்கெங்கு நிற்பார்கள் என பந்தயம், விக்கெட் கீப்பர் யார் எனவும் அவர் எத்தனை பந்துகளை பிடித்து எத்தனை விளையாட்டு வீரர்களை வெளியேற்றுவார் என பந்தயம். பிறகு ஓட்டங்கள் எடுப்பவர் எத்தனை ஓட்டம் எடுப்பார் என பந்தயம், ஒவ்வொரு பந்துக்கும் எத்தனை ஓட்டங்கள் என பந்தயம், இந்த பந்து நோ பால், இந்த பந்து லெக்பை, இந்த பந்து வைட் என ஒவ்வொன்றுக்கும் பந்தயம் நடந்துக்கொண்டே இருக்கும்.
ஒரு பந்துவீச்சாளர் எத்தனை விக்கெட் எடுப்பார், எத்தனை ஓட்டங்கள் கொடுப்பார் என பந்தயம்.

இப்படி எல்லாவற்றுக்கும் பணம் கட்ட முடியும்.

சிறிய தரகு நடக்கும் இடங்களில் நீங்கள் கட்டும் பணத்துக்கு ஜெயித்தவுடனே லாபத்தை கொடுத்துவிடுவார்கள்.

பெரிய பணமுதலைகள் பொதுவாக தொலைபேசிகள் மூலம் பந்தயத்தில் விளையாடுவார்கள்.

ஒரு நாளில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.

இந்த பந்தயங்களில் இன்னொரு முக்கிய அம்சமும் இருக்கிறது

அதாவது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு விலை வைத்திருப்பார்கள். அந்த விலையில் நீங்கள் பணம் கட்டலாம். இந்த விலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக

ஜெயசூர்யா விளையாடுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்

முதல் பந்தில் ஆறு ரன் எடுப்பார் என பந்தயம் என்றால் தரகர்கள் இவ்வாறு விலை நிர்ணயிப்பார்கள் = இதற்கு விலை 1/1, 1/2, 3/2, 2/1,3/1,4/1,5/1.....20/1 இன்னும் போய்க்கொண்டே இருக்கும்


புரியாதவர்களுக்கு:

1/1 என்றால் நீங்கள் நூறு ரூபாய் கட்டினால் அவர்கள் இருநூறு ரூபாய் தருவார்கள்
1/2 என்றால் நீங்கள் நூறு கட்டினால் 150 கிடைக்கும்
அதே போல 5/1 என்றால் நீங்கள் 100 கட்டினால் 500+100 = 600 கிடைக்கும்
20/1 என்றால் 2000+100=2100 கிடைக்கும்


இது ஒவ்வொரு வீரருக்கும் மாறும். அதாவது சிறந்த மட்டையாளர் என்றால் அதிகமான தொகை கிடைக்கும் வாய்ப்பு குறைவு. மேலும் ஆரம்பத்தில் ஒரு மட்டையாளர் எப்படி ஆடுகிறார் என்பதை பொருத்தும் தொகை மாறும்.

உதாரணமாக ஜெயசூர்யா ஐபில் போட்டிகள் பலவற்றில் சரியாக விளையாடவில்லை
என்பதால் நேற்று அவருக்கு ஆரம்பத்தில் அதிக விலை இருக்கும் வாய்ப்பு மிக அதிகம். அதாவரு 5/1 வரை கிடைக்கும். இரண்டு மூன்று ஓவர்கள் முடிந்த பிறகு அவர் இன்று நன்றாக விளையாடுவார் என்ற நம்பிக்கை வரும் போது விலை 3/1, 2/1 என குறையும் வாய்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் கடைசியாக வரும் பந்து வீச்சாளர்களுக்கு 20/1 வரை விலை இருக்கும். அடித்தால் சிக்ஸர் இல்லேன்னா அவுட் என இது மிக பெரிய அளவில் நடைபெறும் பந்தயமாகும்.

இந்த அடிப்படையில் தான் பொதுவாக சூதாட்டங்கள் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை உலகம் முழுவதும் நடைப்பெறுகிறது.

இதுதான் கிரிக்கெட் சூதாட்டம் என பொதுவாக சொல்லப்படுகிறது.

இன்னும் விவரம் தெரிந்தவர்கள் மேலும் எழுதலாம்.

டிஸ்கி: மேலுள்ள விவரங்கள் உங்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே. இதில் ஈடுபடுவதை தவிர்ப்பதே நல்லது. தங்க நாணயம், சிட் பண்ட் போன்றவற்றை விட மிக மோசமானது இது.

Monday, May 05, 2008

ரியாத்திலுள்ள ஒரு இத்தாலிய உணவகத்தில்




பின்குறிப்பு: சிலர் ஏற்கனவே பார்த்து இருக்கலாம்.

Wednesday, April 30, 2008

குவைத்தில் புழுதிப்புயல்

குவைத் நகரம் முழுவதும் புழுதிப்புயலால் தற்போது இந்த நிலைமையில் இருக்கிறது. இந்தப் படங்கள் எனது அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்டவை (30.4.2008 குவைத் நேரம் 1:57)






Thursday, April 17, 2008

தனிமை போட்டிக்கு



Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல் - 2007

எல்லோரும் பொங்கல் விழா எல்லாம் முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கரும்பு எல்லாம் சாப்பிட்டு சந்தோசமா இருக்கீங்க போலெ.(2007 பொங்கலில்)

அட, பொங்கலெ பத்தி அவனவன் பதிவு எழுதறானே, நம்ம வீட்டு பொங்கலெ பத்தியும் எழுதலேன்னா எப்படின்னு தோணிச்சி.

பொங்கல் வாழ்த்துக்கள் ஒரு வாரமாவே வந்துட்டு இருந்ததாலெ இந்த தடவெ பொங்கல் நாள் மறக்கமுடியாமெ அப்படியே மனசிலெ பதிஞ்சிடிச்சி.

காலையில் எழுந்ததும் காப்பி போட்டு குடித்துக் கொண்டே தூங்கிகிட்டிருந்த மனைவிகிட்டெ பொங்கல் வாழ்த்துக்கள் சொன்னேன். "ம்ம்... சரி"... வாழ்த்துக்கள்.

"ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கப்போறோம்".

"ஏன் மாமா தூங்கிகிட்டிருக்கேனென்னு தெரியலெயா?" உங்களுக்கு இப்பத்தான் பொங்கலெ பத்தி கேக்கணுமா"

"எனக்கு இன்னிக்கி ஆபிஸ்லெ முக்கியமான வேலை இருக்கு, பொங்கல் எல்லாம் சாயங்காலம்தான்"

"என்ன நீ இப்படி சொல்லறே, எல்லோரும் காலையில் தானை குளிச்சி, புதுத்துணி போட்டு கொண்டாடுவாங்க"

"நீங்க இப்ப ஆபிசுக்கு போறிங்களா, இல்லையா?" தூக்க கலக்கத்தில் குரல் வலுக்கவும் எப்படியோ போகட்டும்னு அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

எப்பவும் போல அலுவலகம் வந்து கணினியை திறந்ததும். "அண்ணா, பொங்கல் வாழ்த்துக்கள்" "பொங்கல் சாப்பிட்டாச்சா" "நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்" என ஒரே பொங்கலோ பொங்கல் தான்.

சரி நம்ம பொளப்பெ சொல்லி இவங்க மூடையும் கெடுக்க வேண்டாமேன்னு நினெச்சி, எல்லோருக்கும் வாழ்த்துகள் சொன்னேன்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு தொலைபேசி, "என்ன பொங்கல் ரெடியாகிடுச்சா"

"ஏன் மாமா நா இப்பத்தானே ஆபிஸ்லெருந்து வர்றேன், இந்த பசங்களுக்கும் இன்னும் சாப்பாடு கொடுக்கலே, உங்களுக்கு பொங்கல்தான் முக்கியமா போச்சா"

"இல்லே அது வந்து ..... "

"சரி போனெ வைங்க, எனக்கு வேலை இருக்குது"

"சாப்பாடுக்கு வந்துடட்டுமா"

"நான் மெக்டொனால்டிலெருந்து எங்களுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்", உங்களுக்கு வேணும்னா தோசை போட்டு தர்றேன், வாங்க"

"தோசையா, இன்னிக்கி பொங்கல்ங்கறதெ மறந்துட்டெயா"

"அய்யோ, உங்க கூட தாங்க முடியலெயே",

"சரி சாயங்காலம் பொங்கல் பண்ணுவோம், இப்ப ஹோட்டல்லெயே சாப்பிட்டு வந்துடுங்க."

அலுவலக மேலாளரிடம் பொங்கல்னு சொல்லி ஒரு மணி நேரம் முன்அனுமதி கேட்டுட்டு நேரா வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் ஓட்டலில் போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (அங்கெ கொஞ்சமா சாஸ்திரத்துக்கு சக்கரை பொங்கல் கொடுத்துட்டாங்க) வீட்டுக்கு போனேன்.

சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மனைவி, நிமிர்ந்து பார்த்து
"என்ன மாமா, இன்னிக்கி சீக்கிரமா வந்துட்டீங்க"

"பொங்கல்!, அதான்."

என்னை ஒரு மாதிரியாக பார்த்த மனைவி, "சரி, சரி, வேலைக்காரி வந்துடட்டும், பாத்திரம் எல்லாம் கழுவாமெ அப்படியே இருக்கு, அவ வந்து கழுவி கொடுத்த பின்னாலெ பொங்கல் வைக்கறேன். சாயங்காலம் தானே எல்லோரும் வர்றாங்க"

"ம்ம்ம் சரி, சரி, குழந்தைங்க சாப்பிட்டாங்களா?"

"ஓ அப்பவே சாப்டாச்சே, இப்ப உள்ளே படிச்சிகிட்டிருக்காங்க"

"ஆமா, வடை செய்யறெயா"

"வடையா? பொங்கலுக்கு வடை யாராவது செய்வாங்களா?"

"இல்லே, செஞ்சா நல்லா இருக்குமேன்னு"

"சரி, சரி, செய்யறேன், கொஞ்சம் நேரம் பேசமெ இருங்க, இந்த நிகழ்ச்சி முடியட்டும்"

எனக்கும் களைப்பாக இருந்ததால் [ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட மயக்கம்(?!)] கொஞ்ச நேரம் படுக்கலாம்னு உள்ளே போனேன்.

பாத்திரங்களை கழுவும் சத்தம் கேட்டு எழும் போது மணி ஐந்தரை. அய்யோ அஞ்சரை ஆச்சேன்னு வேகமா எழுந்து ஹாலுக்கு போனேன். மனைவி எப்பவும் போல பொங்கல் நிகழ்ச்சிகளில்

"என்ன, இன்னும் பொங்கல் பண்ணலெயா?"
"ஏன் மாமா தூங்கி எந்திரிச்சி வந்து கத்தறீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எல்லாம் ரெடியாகிட்டிருக்கு"

சமையலறைக்கு போய் பார்த்தேன். அடுப்பை வேலைக்காரம்மா சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது கதவு தட்டற சத்தம். போய் திறந்தால் குழந்தைகள் ட்யூசனிலிருந்து வந்துவிட்டார்கள்.

அவர்களை பார்த்ததும் வீட்டுக்காரி, சரி சரி, எல்லோரும்னு போய் முகம் கழுவிட்டு வாங்கன்னு சொல்லி, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாங்க (அப்பாடா தொலைகாட்சிக்கு விடுதலை).

அட பொங்கலே இன்னும் தயாராகலெயே, அதுக்குள்ளே எப்படி பூஜைன்னு யோசிச்சிகிட்டிருக்கறப்ப வாழை இலையை இரண்டாக கிழிச்சி எடுத்துட்டு ஹாலுக்கு போனாங்க. அங்கெ இருந்த மின் சமைகலனை (Electric Cooker) திறந்தாங்க. உடனே என் சின்ன பெண் பொங்கலோ பொங்கல் என்று கூவ நானும் பொங்கலோ பொங்கல் என பின்பாட்டு பாட பொங்கலுக்கான பூஜை முடிந்தது. (நம்புங்க, புது பானைக்கு பதிலா மின்சமைகலன்)

பிறகென்ன கொஞ்சம் கொஞ்சம் பொங்கல் எல்லோருக்கும் மின்கலனிலிருந்து எடுத்து கொடுத்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.
சாயங்காலம் வடை, சாப்பாடு என செஞ்சாங்க.அப்புறம் என்ன நண்பர்களும் தம்பிகளும் வர மின்சமைக்கலனில் செய்யப்பட்ட எங்க வீட்டு பொங்கல் இரவு விருந்துடன் அமர்க்களமாக முடிந்தது.

பொங்கலோ பொங்கல்.

2008 பொங்கல் பதிவு விரைவில்

Thursday, January 10, 2008

தொடரும் அவஸ்தைகள்

நேற்று பயங்கர குளிரில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (குளிர் மட்டுமல்ல, மணல் தூசியும் பனிமூட்டமும்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து அழைத்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டருகில் வந்தோம்.

"மாமோவ் காரை நிறுத்துங்க"

"ஏன், என்ன ஆச்சி:

"நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் கோலங்கள் பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ"

மறுத்துப் பேச முடியுமா நான்.

"ம்ம், சரி, சீக்கிரம் வந்துரு." (இதற்கு மேல் பதில் சொன்னால் என்ன நடக்கும்னு தான் எல்லோருக்கும் தெரியுமே!)

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும், வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது

"ஹலோ, அண்ணா, நா பிரசாத்ணா, "

“சொல்லு”

"ஒரு முக்கியமான விசய்ம்ண்ணா, நீங்க வீட்லெதானெ இருக்கீங்க"
(இதை விட ஒரு மடத்தனமான கேள்வி இருக்க முடியுமா?)

"ஆமா என்ன விசயம்?"

"இல்லெண்ணா நான் நேரில் வந்து பேசறேன்!”

"சரி வா"

பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி.

"அண்ணா நாந்தான் பிரசாத்!"

"??!!??"

"அண்ணா உங்க வீட்டிலெ கோலங்கள் வருதா அண்ணா?"
"இல்லெ"
"அப்படியா, அக்கா எங்கே?"
"தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?"
"அது ஒண்ணுமில்லெண்ணா, கோலங்கள் பாக்கணும்னுதான்!"
பேசி வைக்கப்பட்டது.
(என்ன கொடுமை சிவா இது!)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம். எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.

"அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெ வர்தா?"

டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.

என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன்.
மீண்டும் அலைபேசி அடிக்கும் சத்தம்
"ஹலோ அங்கிள் நா ரீத்து பேசறேன், உங்க வீட்டில் சன் டீவி வருதா?"

"ஆமம்மா ஏன்"

"இல்லே அம்மா வெளியில் போயிருக்கா, என்னெ கோலங்களெ ரிகார்ட் செஞ்சி வைக்க சொன்னா, எங்க வீட்லெ வரலெ, நீங்க கொஞ்சம் ரிகார்ட் செய்து கொடுக்கறீங்களா" (இந்த பெண் பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிறது வீட்டில் என்பது வேறு விசயம்)

"எங்க வீட்லெ ரிகார்ட் செய்ய முடியாதம்மா, ரிகார்டர் சரியா வேலை செய்யலெ"

"சரி அங்கிள்"

என் நிலைமையை பாருங்கள். கொஞ்ச நேரம் தூங்க விடாமல்... போதுமடா சாமி....

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று மெதுவாக...

"என்ன ஆச்சு?"
"க்ளைமாக்ஸ் சரியில்லீங்க" அதுக்குள்ளெ தொடரும் போட்டுட்டாங்க (?!)

அப்பாடா! ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்

இரவு சாப்பாடு நேரத்தில், கொஞ்சம் சாம்பார் ஊத்து....
அப்போது ...மீண்டும் ஃபோன் மேல் வீட்டிலிருந்து. ஃபோனை எடுத்த என் மனைவி கோலங்களின் கதையை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
நான் சாம்பார் வரும் என ஆறிப்போய்க்கொண்டிருக்கும் இட்லியை பார்த்துக்கொண்டு ”ஙே” என விழித்துக்கொண்டிருக்கிறேன்....

அட நீங்களுமா?

Saturday, January 05, 2008

ஒரு மீசையின் கதை


மீசைக்கு என்ன பெருசா கதை இருக்கப்போகுதுன்னு எப்பவும் போல தமிழ் பயணி சிவா முணுமுணுப்பது லேசா காதில் விழுகிறது. அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை மீசைக்கும் கதை இருக்குங்கறது.

முதலில் இந்த கதையை ஏன் எழுதணும்ங்கறதெ சொல்லிடறேன். நம்ம சைலஜா இல்லே சைலஜா அதாங்க மைபா புகழ் இன்னும் என்னென்னமோ புகழ். அவங்க சும்மா இல்லாமெ புத்தாண்டு சபதம் என ஒரு பதிவு போட்டு ஒற்றை வரியிலேயே காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கும் என்னையும் அதில் இழுத்துவிட்டுட்டாங்க. சரி மாட்டிகிட்டோம் என்னடா செய்வது என யோசனையில் இருக்கும் போது தான் இந்த மீசை கதையை எழுதும் எண்ணம் தோன்றியது.

சின்ன வயதிலிருந்தே கருமையான மீசைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு ஆசை. நாமும் பெரியவனாகும் போது இப்படி மீசை வைக்க வேண்டும் என்று. அந்தக் காலத்து சினிமாக்களில் எம்ஜியார், சிவாஜி, ஜெமினி முதலிய கதாநாயகர்களின் மீசையை நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரு கோடு இழுக்கப்பட்டது போல இருக்கும். புராணப்படங்களில் அவர்களது மீசை லேசாக முனையில் வளைந்திருக்கும். ஒரு சில படங்களில் மட்டும் கொஞ்சம் கத்தையாக இருக்கும் உதாரணமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு இருப்பதை போல.

இவர்களுக்கு இப்படி என்றால் வில்லன்களுக்கு எப்பவும் கொடுவாள் மீசைதான். வில்லனென்றாலே கொடுவாள் மீசை இருக்கவேண்டும் என்ற சட்டம் போல. நிஜ உதாரணம் வீரப்பன். இது போலவே காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும். இப்பொழுதும் காவல்துறையினர் என்றாலே கம்பீரமான கொடுவாள் மீசை இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். தேவாரம் போன்றவர்கள். மாபோசி போன்றவர்களின் மீசை ஒரு தனி வகை.

மீசையினால் புகழ்பெற்றவர்கள் பலர். மீசை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர்கள் வித்தியாசமான மீசை வைத்திருந்த ஹிட்லர், சார்லி சாப்ளின்.

கமலஹாசன் முதல் முதலில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தப்பொழுது அவரது மீசை புதிய வடிவில் அடர்த்தியாக முனை மட்டும் கொஞ்சமாக தொங்குவது போல இருக்கும். கமலின் மீசையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மீசை அரும்ப ஆரம்பித்தவுடன் கமல் போல மீசை வைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டேன். மீசை விரைவில் வளரவேண்டும் என தினமும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருப்பேன். தலைமுடியும் அதே போல இருக்கவேண்டும் என்றும். ரஜினியின் மீசை மீது எனக்கு இதுவரை எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. அதில் ஈர்ப்பும் இல்லை என்பது என் கருத்து. ஏன்னா அவரது தலைமுடியே மீசையை மறக்கடிக்க செய்துவிடுகிறது.

ஒரு வழியாக சில வருடங்களில் மீசை அடர்த்தியாக வளர்ந்ததும் கமலை போலவே மீசையையும் மாற்றியாகிவிட்டது. இந்த நேரத்தில் கமல் மீசையை எடுத்துவிட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றாலும் நான் எனது மீசையின் அமைப்பை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தேன். இப்படியாக தொடர்ந்த என் மீசையை வாரத்திற்கு ஒரு நாள் சரியாக்குவேன். நடுவில் ஒரு தலை ராகம் படம் வந்தபோது சங்கரை பார்த்து சில காலம் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். இப்ப மீசையும் தாடியும் சேர்ந்த கலவையாக மாறிவிட்டது. திருமணம் வரை தாடியுடன் தொடர்ந்தேன்.அந்த தாடிக்காரன் என்னும் அளவிற்கு அடையாளம் ஏற்பட்டுவிட்டது. பெண்பார்க்க போகும் போதும் அதே தாடியுடன் தான் போனேன். நான் பார்த்த நான்கு பெண்களுக்கும் என்னை பிடித்து விட்டது என்பது வேறு விசயம் என்றாலும் ஒருத்தியை தான் திருமணம் செய்ய முடிந்தது.(தப்பித்தேன்)

இப்பொழுது ஒரு பெரிய பிரச்சினை வந்துவிட்டது. கல்யாணம் அன்று தாடியை மழிக்கவேண்டும் என்று என் தந்தையார் கட்டளை இட்டு விட்டார். வேறு வழி தாடியை எடுத்துவிட்டேன். ஆனால் மீசையை எடுக்கவில்லை.
அது தானே நமக்குஅழகு (?)

திருமணத்திற்கு பிறகு தாடி வளர்க்கவில்லை. மீசை மட்டும். அதை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சீர் செய்வேன். இப்படியாக காலம் போய்க்கொண்டிருக்கும் போது தான் அந்த நாள் வந்தது
.
அன்று காலை முகம் மழிக்க கண்ணாடியில் பார்க்கும்பொழுது மீசையில் ஒரு மண் நிறத்தில் முடி ஒன்று. அதை உடனே பிடுங்கி எடுத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பார்த்தால் இன்னொரு இடத்தில் இன்னும் வெளிர்நிறத்தில் ஒரு முடி.அதையும் பிடுங்கிவிட்டேன்.

பிறகு வந்த நாட்களில் அப்பப்ப ஒவ்வொரு முடி கண்ணுக்கு தெரிவதும் அதை பிடுங்குவதுமாக இருந்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து நாலைந்து முடிகளாக லேசான வெண்மை நிறத்துடன் முடிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஆமாம் மீசை நரைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை புரிந்துக்கொள்ள எனக்கு இவ்வளவு நாட்கள். இனி பிடுங்க முடியாது என்பதால் கத்திரியை வைத்து குறிப்பிட்ட வெண்முடிகளை வெட்ட ஆரம்பித்தேன். இந்த மாதிரி வெட்டும்பொழுது அருகிலிருக்கும் கருப்பு முடிகளும் சில சமயம் வெட்டப்படுவதால் மீசையில் ஆங்காங்க சிறு சிறு இடைவெளிகள்.

என்ன செய்யலாம் என முடித்திருத்துபவரிடம் ஆலோசனை கேட்டேன். மீசையின் அடர்த்தியை குறைத்து சிறியதாக்கி விடலாம் என்ற யோசனையை அவர் சொன்னார். வேறு வழி. அவர் யோசனைப்படியே மீசை சிறிதாக்கப்பட்டது. ஆனாலும் ஒரு பத்து நாட்களுக்குள் அது வளர்ந்து விடும்பொழுது வெள்ளை முடிகள் மட்டும் எடுப்பாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து என்னை ஏளனத்துடன் ஒரு பார்வை பார்க்க ஆரம்பித்தன.

அப்பொழுது தான் என் நண்பர் ஒரு யோசனை சொன்னார். பேசாமல் மை அடித்துவிடுங்கள். எப்பொழுதும் கருமையாக இருக்கும் என. ஆனால் எனக்கென்னவோ இந்த மை அடிப்பதில் உடன்பாடில்லை. கல்யாணம் செய்து குழந்தைகளும் பிறந்துவிட்டனர். இனி எதற்கு மைனராட்டம் கருமை மீசை என தோன்றியதால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். ஆனாலும் கண்ணாடியில் ஒரு சில வெள்ளை முடியுடன் மீசையை பார்க்கும் போதெல்லாம் ஒரு லேசான சோகம் எட்டிப்பார்க்கும்.

என்ன செய்வது என்ற பலநாள் யோசனையில் போன மாதம் திடீரென ஒரு திட்டம் தோன்றியது மீசையை எடுத்துவிடலாம் என.

ஆனால் மனம் கேட்கவில்லை. இவ்வளவு நாட்கள் வைத்த மீசையை எடுப்பதா என்றும் மீசையை எடுத்து விட்டால் என் முகம் எப்படி இருக்கும் என்றும் பல யோசனைகள். கண்ணாடி முன் நின்று கையால் மீசையை மறைத்து பார்த்து பலவாறு முயற்சித்தும் மீசையில்லாமல் என்னை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
ஆனால் வெண் முடிகள் அதிகமாக அதிகமாக இந்த யோசனையும் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது.

இந்த நேரத்தில் 2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும் புத்தாண்டு நாள் விழா வீட்டில் கொண்டாடப்பட்டது. பல்வேறு விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு விளையாட்டு கணவர்களுக்கு மனைவிமார் புடவை கட்டி விடுவது. என் மனைவி எனக்கு வேகமாக புடவை கட்டி ஜெயிக்க முடியவில்லை என்றாலும் புடவைக்கட்டப்பட்ட என்னை எல்லோரும் அண்ணா நீங்கள் புடவை கட்டினாலும் அழகாகவே இருக்கிறீர்கள் என உசுப்பேத்திவிட்டுவிட்டனர். அன்று அதிகாலை வரை விழா நடந்தாலும் என்மனமோ அவர்கள் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தது.

அடுத்தநாள் எழுந்து குளியலறை போய் கண்ணாடியை பார்த்ததும் உடனே இரவில் நடந்த நிகழ்ச்சி திரைப்படமாக மனதில். ஏன் நான் புத்தாண்டு சபதமாக மீசையை எடுக்கக்கூடாது என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றியது. ஆனாலும் மனம் ஒப்பவில்லை. முகத்தில் சோப்பு போட்டு தாடியை மழிக்க ஆரம்பித்த போதும் மீசையை மழிப்பதா என்ற குழப்பம். ஆனால் கடைசியில் புத்தாண்டு சபதம் என முடிவெடுத்துவிட்டோம் இனி பின்வாங்கக்கூடாது என்ற முடிவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு மீசையிலும் கத்தியை வைத்து ஒரு பாதி மீசையை நீக்கிவிட்டேன்.

கண்ணீர் வராத குறைதான். ஒரு பக்கம் மீசையில்லாமல் ஒரு பக்கம் மீசையுடன் என் முகம் என்னையே பார்த்து சிரித்தது. அடடா தப்பு செய்து விட்டோமே என்று என்னையே நொந்துக்கொண்டு அடுத்த பகுதி மீசையையும் மழித்து, முகம் கழுவி முகத்தை பார்த்தால். அய்யோ, இது என் முகமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
திரும்ப திரும்ப முகத்தை ஒரு பத்து நிமிடமாவது பார்த்துக்கொண்டிருந்தேன். ம்ம்.. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன செய்ய என்று நொந்துக்கொண்டே வெளியில் வந்ததும் என்னை பார்த்த என் மனைவிக்கு கோபமும், சிரிப்பும். ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. எதற்காக மீசையை எடுத்தீர்கள் என ஒரு திட்டு. உங்களை பார்க்கவே சகிக்கவில்லை என்று ஒரு முறைப்பு, குழந்தைகளை கூப்பிட்டு என்னை வேடிக்கை பொருளாக்கி எல்லோரும் கேலி பேச ஆரம்பித்துவிட்டனர். என் சின்னப்பெண் அப்பா உங்களை பார்த்தால் ..... என்று இடைவெளி விட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். இப்படியாக என் புத்தாண்டு சபதம் ஒரு மிகப்பெரிய தியாகத்துடன் ஆரம்பித்து இன்றோடு ஐந்தாவது நாள். ஒரு சிலர் நல்லா இருக்கு என்கின்றனர். ஒரு சிலர் மீசை இருந்தால் தான் அழகு என்கின்றனர் ஒரே குழப்பத்தில் மீண்டும் மீசை வைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தவித்துக்கொண்டிருக்கிறேன். மீசை வைத்தால் புத்தாண்டு சபதம் என்ன ஆவது என்ற யோசனை வேறு. யாராவது வந்து உதவுங்களேன்.

நான் கூப்பிடும் அன்பர்கள்:
அய்யனார்
கீதா சாம்பசிவம்
சித்தார்த்
வேதா

Friday, November 09, 2007

எச்சரிக்கை - அவசரம்

எச்சரிக்கை

அன்பு நண்பர்களே

முத்தமிழ் குழுமத்தின் இணைய சொல்லி அழைப்பு வருவதாக ஒரு சில நண்பர்கள் தகவல் அனுப்பியிருக்கின்றனர். முத்தமிழ் கூகிள் குழுமத்தில் உறுப்பினராக சேர யாருக்கும் தனியாக அழைப்பு அனுப்பப்படுவதில்லை. ஆகவே உங்களுக்கும் முத்தமிழ் பெயரில் குழுமத்தில் இணைய சொல்லி அழைப்பு வந்தால் அந்த மடலை உடனடியாக நீக்கிவிடுங்கள்.அந்த அழைப்பின் மூலம் உங்கள் கடவுச்சொல் திருடப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது மட்டுமல்ல வேறு எந்த முகவரியிலிருந்து இணைய சொல்லி அழைப்பு வந்தாலும் அதை திறக்க வேண்டாம். உங்கள் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும் எந்த இணைப்பையும் திறக்கவேண்டாம். பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுக்கவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்தமிழில் இணைய விருப்பமுள்ளவர்கள் குழும முகவரிக்கு நேரடியாக விண்ணப்பித்து சேர்ந்து கொள்ள முடியும். குழுமம் உங்களின் கடவுச்சொல்லை கேட்பதில்லை.

முத்தமிழ் குழுமத்தின் மீதான இந்த தாக்குதல் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டோ செயல்படும் ஒரு சில விஷமிகளின் வேலையே. விரைவில் அவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்பதையும் சரியான தண்டனைக்கு ஆளாவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Wednesday, November 07, 2007

தீபாவளி - மலரும் நினைவுகள்

தீபாவளி என்றவுடன் எனக்கு என் சின்ன வயதில் கொண்டாடிய பல தீபாவளிகள் இனிய நினைவுகளாக வருவதை ஏனோ தடுக்கமுடியவில்லை. இப்படித்தான் ஒரு தீபாவளி நாளில் நடந்த ஒரு சம்பவம்

தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.

என்றாவது ஒரு நாள் தான் இட்லி என்பதால் எல்லா வீடுகளிலும் மாவு அரைக்கும் ஆட்டாங்கல் இருப்பதில்லை. அதனால் இருக்கும் சிலரது வீடுகளில் போய் வரிசையில் காத்திருக்கவேண்டும். எங்க அம்மா காலையிலேயே ஊறவைத்த அரிசி உளுந்து முதலியவற்றை என்னிடம் கொடுத்து அங்கு நிற்க செய்துடுவாங்க. நானும் பொறுமையாக காத்திருப்பேன். அதில் ஒரு சுகம்.
ஏன்னா அடுத்த நாள் இட்லி கிடைக்குமே. பிறகு அம்மா வந்து மாவரைத்து எடுத்து செல்வதற்குள் இரவு ஆகிவிடும்.

இதற்கிடையில் தையல்காரரிடம் போய் துணி தைத்தாகிவிட்டதா என பார்க்கவேண்டும். நம்ம தையல்காரர்களுக்கு விசேஷ்நாட்களில் தான் அதிக துணி வருவதால் ரொம்ப கடைசியாத்தான் எங்கள் துணி கிடைக்கும். சில நாட்களில் பொத்தான் போடும் வேலையும் நானே செய்து துணியை வாங்கி வருவேன்.

கையில் துணி கிடைப்பதற்கு சில சமயம் பத்து மணி கூட ஆகிவிடும் அதுவரை குளிரில் காத்திருந்து வாங்கிட்டு வந்தால் வீட்டில் அப்பாவிடம் திட்டு வேறு வாங்கவேண்டும்.

அப்போழுதெல்லாம் எட்டு மணிக்கே ஊர் அடங்கிவிடும். இப்பத்தான் தொலைக்காட்சி தொடர் வந்தப்பிறகு பதினோரு மணி வரை யாரும் உறங்குவதில்லை.

இரவு முழுவதும் தூக்கமே வராமல் புரண்டுக்கொண்டிருப்போம். அம்மா அதிகாலை மூணு மணிக்கே எழுந்து இட்லி போட ஆரம்பிச்சிடுவாங்க. கூடவே நானும் எழுந்து அம்மா பக்கத்தில் தூங்கி வழிந்துக்கொண்டே அடுப்பருகில் உட்கார்ந்திருப்பேன்.
மணி ஐந்தானவுடன் தூரத்தில் இருக்கும் வினாயகர் கோயிலின் ஒலிப்பெருக்கியில் சுப்ரபாதம் கேட்க ஆரம்பித்துவிடும். உடனே புதுத்துணி போடும் ஆசையில் அரக்கப்பரக்க குளித்துவிட்டு தயாராகிவிடுவதே வாடிக்கை.

இப்படித்தான் ஒரு நாள் குளித்துவிட்டு துணி எடுப்பதற்காக அடுத்த அறைக்குள் போனேன். அங்கு மின்விளக்குக்கு பொத்தான் கிடையாது. மின் விளக்கை போட அதனுடன் இணைந்த ஃப்ளக்கை இணைக்கவேண்டும். பொதுவாக விளக்கு வெளிச்சத்தில் தான் இணைப்போம். மேலும் எனக்கு உயரம் போதாதால் அப்பா தான் இணைப்பார். அப்பா அந்த அறையில் தான் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். எழுப்பினால் திட்டுவார் என்பதால் மிகவும் அமைதியாக கட்டிலில் மீது ஏறி நின்று ஃப்ளகை சொருகப்போனேன். ஆனால் எனது அவசரத்திலும் பரப்பரப்பிலும் ப்ளக்கின் பின்னை மாற்றி சொருகி விட்டேன். சரியாக சொருகாததால் லைட் எரியவில்லை. என்னடா இது என குழம்பி போய் ஆட்டி ஆட்டி பார்த்ததும் ஃப்ளக்கின் ஒரு பின் உடைந்து உள்ளே மாட்டிவிட்டது.

என்ன செய்வது என்று புரியவில்லை. அப்பாவை கூப்பிட்டால் திட்டுவார். சரி என ஒரு முடிவோடு மின்சாரம் பாய்வது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அதை பிடுங்குவதற்காக கையில் தொட்டேன். அவ்வளவு தான் !


அம்மா!! என்ற சத்தத்துடன் அப்பா மீது விழுந்தேன். திடீரென இப்படி நேர்ந்ததால் அப்பாவும் அலறி அடித்து கொண்டு எழ.. இருட்டில் ஒன்றும் தெரியாமல்..... ஒரே குழப்பம்... அம்மா அரக்க பரக்க உள் அறையிலிருந்து விளக்கை எடுத்து வந்து பார்க்க.. கட்டிலின் முனை என் தலையில் பட்டு வீக்கத்துடன் நான் அழுதுக்கொண்டிருக்க, அப்பாவுக்கு வந்த கோபத்தில் இன்னும் இரண்டு அடி எனக்கு கொடுக்க.... இப்படியாக ஒரு அருமையான மறக்க முடியாத தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

Wednesday, October 31, 2007

கடவுச்சொல் திருட்டு

அன்பு நண்பர்களே

இட்லி வடைக்கு நேர்ந்தது போல எனக்கும் நேர்ந்தது. ஓசை செல்லாவின் முகவரியிலிருந்து வந்த மடலை திறந்து ஓர்குட்டில் நுழைய எத்தனித்து என் கடவுச்சொல்லை இட்டதால் என் கடவுச்சொல் திருடப்பட்டுவிட்டது.

என்னால் வலைப்பதிவுக்குள்ளும் நுழைய முடியவில்லை. ஓசையை தொடர்பு கொண்டப்போது அவருக்கும் அதே போல மடல் வந்தது என்றார்.

என் கடவுச்சொல்லை திருடியவனின் முக்கிய குறிக்கோள் முத்தமிழ் கூகில் குழுமத்தை ஆக்கிரமிக்கவேண்டும் என்பதே. என் கடவுச்சொல் மூலம் நிர்வாகத்திற்குள் நுழைந்து மாடரேட்டர்கள் அனைவரையும் நீக்கியிருக்கிறான்.

ஆனால் அவனது துரதிர்ஸ்டம் ஓனரை நீக்க முடியவில்லை. கூகிளில் இது ஒரு வசதி. ஓனர் ஐடி மூலம் மீண்டும் முத்தமிழில் நாங்கள் நுழைந்து எனது திருடப்பட்ட முகவரியை நீக்கிவிட்டோம்.

பிறகு மூன்று நாட்கள் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு இன்று 31.10.07 காலையில் எனது பெயரில் முத்தமிழுக்குள் நுழைந்திருக்கிறான். உடனே எனக்கு தகவல் கிடைத்தது.

நண்பர்கள் பேசி பார்த்தனர். அவன் ஒருவார்த்தை பதிலிலேயே பேசியிருக்கிறான்.

ஆனால் அதே நேரத்தில் ஒரு சில மடல்களை எனது முகவரியிலிருந்து பலருக்கு பார்வேர்ட் செய்திருக்கிறான். இதிலிருந்து இவனது நோக்கம் என்ன என்பது தெளிவாகிறது.

இந்த சமயத்தில் கூகில் மூலம் மீண்டும் எனது ஐடி திரும்ப கிடைத்ததால் நான் உள்நுழைந்து கடவுச்சொல்லை மாற்றிவிட்டேன்.

யார் என கண்டுப்பிடிக்கமுடியவில்லையென்றாலும் இது கூகிள் தமிழ் குழூமங்கள் மற்றும் பதிவுகள் பற்றி அதிகம் தெரிந்த நபர் என்பது மட்டும் தெளிவு.

என் ஐடி திருடப்பட்டதை அறிந்து குழுமங்கள் மற்றும் பதிவுலகில் இருந்து பலரும் ஆறுதலும் உதவிகளும் அளித்தனர். அனைவருக்கும் மிகவும் நன்றி.

Thursday, August 16, 2007

கவிதை பாடும் சில மலர்கள்

இதழ்கள் இல்லாத மலர்களா? வளர்ந்து வரும் கவிதாயினி அனிதாவின இதழ்கள் வெறும் மலர்களின் இதழ்களன்று. இதில் வித்தியாசமான பல்வேறு இதழ்களும் இருக்கின்றன.
கரிசனம்
அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.

திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில் இவரது கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்தன என்பது கூடுதல் செய்தி. இவரது ஒற்றை ரோஜா என்னும் கவிதையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.

வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் ! நிறமில்லாத மலர்களா? நிறங்கள் என தன் வலை மலரை குறிப்பிடும் செல்வநாயகி சக்தி என்ற மற்றொரு வலைமலரையும் நடத்திவருகிறார்.
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
என வித்தியாசமாக ஆசைப்படும் செல்வநாயகி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இவரது நான் ரசித்த பயணம் படிக்க வேண்டிய ஒரு நல்லப் படைப்பு.

காகித மலர்கள் என்று தன் வலைமலரை தன்யா குறிப்பிட்டாலும் அவை உண்மையிலேயே காகித மலர்களல்ல. ஓலமடங்கிய வெளிகளில் என தொடங்கும் கவிதையில்
குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு
என்னும் வரிகளே எடுத்துக்காட்டு. தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள் தடுக்கின்றன என்னும் கவிதையும் படிக்கவேண்டிய ஒரு கவிதை.


விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்
என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.

உலகிலுள்ள அனைவரும் எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும். என இருந்தால் எப்படி இருக்கும். அந்த எண்ணத்தையே தன் வலைமலரின் தலைப்பாக்கியிருக்கும் ஷைலஜாவின் வலைமலரில் உங்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என கதம்பமாலையாக எல்லாம் கிடைக்கும். அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஒரே நோக்கில் எழுதிவரும் இவரது ஒவ்வொரு படைப்பும் படிக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுவே இவரின் வெற்றியின் ரகசியமும் கூட. தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை உள்ள இவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் வர்ணனையாளர் என்பதும் கூடுதல் தகவல்கள். உன்னை நினைக்கையிலே என்னும் இவரது கவிதை சமீபத்தில் அன்புடன் குழுமத்தில் நடந்த ஒலிவடிவ கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஷைலஜாவின் சிறு கவிதை ஒன்று:
மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நில மகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.

மலர்கள் அதிகமாக மலர்வது இளவேனில் காலத்தில் தான். இளவேனில் என தன் வலைமலரை குறிப்பிடும் தமிழ் நதி ஒரு வளர்ந்து வரும் கவிதாயினி. இவரது கவிதை தொகுப்பு சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆனந்த விகடனிலும் இவரது கவிதைகள் வந்துள்ளன. சமீபக்கால ஈழத்து கவிதாயினிகளில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மெல்லிய சோகம் இழையோடும் இவரது கவிதைகளை படித்தப்பின் ஒரு கணமாவது நம்மை அதிர செய்யும் என்பது நிதர்சனம்.
காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
இவரது நதியின் ஆழத்தில் என்னும் கவிதையை பாருங்கள் புரியும்.

மலர்களை ரசிக்க ஒரு மனம் வேண்டும் அதுவும் மனம் நமது உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. அதையே தன் வலைமலரின் தலைப்பாக வைத்திருக்கும் வேதாவின் மனம் - உண்மை முகம் வளர்ந்து வரும் ஒரு கவிதாயினியை நமக்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்கிறது. தனது மனதில் தோன்றுபவற்றை கவிதைகளாக கொட்டிவிடும் இவரது சமீப கால கவிதைகளில் நல்ல முதிர்ச்சியும் வளர்ச்சியும் தெரிகிறது. சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை என்னும் அவரது கவிதையில்:
அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விடுகின்றன
என கவிமொழி பேசுகிறார். இவரது வேதா என்னும் மற்றொரு வலைமலரில் பல சுவையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

Saturday, May 26, 2007

நீங்கள் கல்ஃபில் வேலை செய்பவரா?

ஆண்: "டாக்டர் நான் ஒரு மாச லீவில் வந்திருக்கேன். எனக்கு ஒரு முழு செக்கப் செய்யணும்."

டாக்டர்: "நீங்க எதிர்லெ இருக்கற டாக்டர்கிட்டே போயிருக்கணும்.அந்த போர்டெ பாருங்க"

ஆண்: "இல்லெ டாக்டர், நான் உங்களெத்தான் பார்க்கவந்தேன்"

டாக்டர்: "பாருங்க சார், நான் வெட்ரினரி டாக்டர். விலங்குகளுக்கு மட்டும் தான் மருத்துவம் பார்க்கிறேன். மனுசங்களுக்கல்ல."

ஆண்: "எனக்கு அது நல்லா தெரியும் டாக்டர். அதனால் தான் நான் உங்களிடம் வந்திருக்கேன்"

டாக்டர்: "என்னங்க சார் புரியாத ஆளா இருக்கீங்க. நீங்கள் என்னை போல மனிதர். பேசுகிறீர்கள், சிந்திக்கிறீர்கள், நீங்கள் மிருகமல்ல. என்னால் முடியாது."

ஆண்: "எனக்கு தெரியும் டாக்டர், நான் மனிதன் தான். ஆனா மொதல்லெ நீங்க என்னுடைய பிரச்சினைகளை கொஞ்சம் தயவுசெய்து கேளுங்களேன்"

டாக்டர்: "சரி சரி சொல்லுங்க"

ஆண்: "நான் தூங்கும்போது நாயெ போல எச்சரிக்கையா தூங்கிகிட்டே என்னுடைய ஆபீஸ் வேலெ பத்தியே யோசிச்சிகிட்டிருப்பேன். "
"காலையில் குதிரையெ போல எழுந்திருப்பேன்."
"காக்கா குளியல் குளிப்பேன்"
"மான் போல ஆபீசுக்கு ஓடுவேன்"
"முழுநாளும் கழுதையெ போல வேலை செய்வேன்"
"இடைவிடாமெ பதினோரு மாசம் எருது போல வேலை வேலைன்னு சுத்திகிட்டே இருப்பேன்"
"எனக்கு மேலெ இருக்கறவங்களுக்கு முன்னாலெ வாலெ ஆட்டிகிட்டே இருப்பேன்"
"என்னிக்காவது நேரம் கிடெச்சா என் குழந்தைங்க கூட குரங்கு போல சேட்டை செஞ்சி விளையாடுவேன்"
"என் பொண்டாட்டிக்கு முன்னாலெ முயல் மாதிரி ஒடுங்குவேன்"

டாக்டர்: "நீங்க கல்ஃப்லெ வேலெ செய்யறீங்களா?"

ஆண்: "ஆமாம் டாக்டர்!. "எப்படி கண்டுபிடிச்சீங்க?"

டாக்டர்: "இவ்வளவு பெருசா சொல்றதுக்கு பதிலா மொதல்லெயே கல்ஃப்லெ வேலெ செய்யறேன்னு சொல்லியிருக்கலாமில்லெ." "வாங்க, நீங்க சரியான இடத்துக்கு தான் வந்திருக்கீங்க!" "வேறெ யாரும் என்னெ விட நல்லா உங்களுக்கு சிகிச்சை தர முடியாது"

நன்றி: அனுசுயா
ஆங்கிலத்திலிருந்து

Wednesday, January 17, 2007

இப்படியும் ஒரு பொங்கல்



எல்லோரும் பொங்கல் விழா எல்லாம் முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கரும்பு எல்லாம் சாப்பிட்டு சந்தோசமா இருக்கீங்க போலெ.

அட, பொங்கலெ பத்தி அவனவன் பதிவு எழுதறானே, நம்ம வீட்டு பொங்கலெ பத்தியும் எழுதலேன்னா எப்படின்னு தோணிச்சி.

பொங்கல் வாழ்த்துக்கள் ஒரு வாரமாவே வந்துட்டு இருந்ததாலெ இந்த தடவெ பொங்கல் நாள் மறக்கமுடியாமெ அப்படியே மனசிலெ பதிஞ்சிடிச்சி.

காலையில் எழுந்ததும் காப்பி போட்டு குடித்துக் கொண்டே தூங்கிகிட்டிருந்த மனைவிகிட்டெ பொங்கல் வாழ்த்துக்கள் சொன்னேன். "ம்ம்... சரி"... வாழ்த்துக்கள்.

"ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கப்போறோம்".

"ஏன் மாமா தூங்கிகிட்டிருக்கேனென்னு தெரியலெயா?" உங்களுக்கு இப்பத்தான் பொங்கலெ பத்தி கேக்கணுமா"

"எனக்கு இன்னிக்கி ஆபிஸ்லெ முக்கியமான வேலை இருக்கு, பொங்கல் எல்லாம் சாயங்காலம்தான்"

"என்ன நீ இப்படி சொல்லறே, எல்லோரும் காலையில் தானை குளிச்சி, புதுத்துணி போட்டு கொண்டாடுவாங்க"

"நீங்க இப்ப ஆபிசுக்கு போறிங்களா, இல்லையா?" தூக்க கலக்கத்தில் குரல் வலுக்கவும் எப்படியோ போகட்டும்னு அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

எப்பவும் போல அலுவலகம் வந்து கணினியை திறந்ததும். "அண்ணா, பொங்கல் வாழ்த்துக்கள்" "பொங்கல் சாப்பிட்டாச்சா" "நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்" என ஒரே பொங்கலோ பொங்கல் தான்.

சரி நம்ம பொளப்பெ சொல்லி இவங்க மூடையும் கெடுக்க வேண்டாமேன்னு நினெச்சி, எல்லோருக்கும் வாழ்த்துகள் சொன்னேன்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு தொலைபேசி, "என்ன பொங்கல் ரெடியாகிடுச்சா"

"ஏன் மாமா நா இப்பத்தானே ஆபிஸ்லெருந்து வர்றேன், இந்த பசங்களுக்கும் இன்னும் சாப்பாடு கொடுக்கலே, உங்களுக்கு பொங்கல்தான் முக்கியமா போச்சா"

"இல்லே அது வந்து ..... "

"சரி போனெ வைங்க, எனக்கு வேலை இருக்குது"

"சாப்பாடுக்கு வந்துடட்டுமா"

"நான் மெக்டொனால்டிலெருந்து எங்களுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்", உங்களுக்கு வேணும்னா தோசை போட்டு தர்றேன், வாங்க"

"தோசையா, இன்னிக்கி பொங்கல்ங்கறதெ மறந்துட்டெயா"

"அய்யோ, உங்க கூட தாங்க முடியலெயே",

"சரி சாயங்காலம் பொங்கல் பண்ணுவோம், இப்ப ஹோட்டல்லெயே சாப்பிட்டு வந்துடுங்க."

அலுவலக மேலாளரிடம் பொங்கல்னு சொல்லி ஒரு மணி நேரம் முன்அனுமதி கேட்டுட்டு நேரா வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் ஓட்டலில் போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (அங்கெ கொஞ்சமா சாஸ்திரத்துக்கு சக்கரை பொங்கல் கொடுத்துட்டாங்க) வீட்டுக்கு போனேன்.

சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மனைவி, நிமிர்ந்து பார்த்து
"என்ன மாமா, இன்னிக்கி சீக்கிரமா வந்துட்டீங்க"

"பொங்கல்!, அதான்."

என்னை ஒரு மாதிரியாக பார்த்த மனைவி, "சரி, சரி, வேலைக்காரி வந்துடட்டும், பாத்திரம் எல்லாம் கழுவாமெ அப்படியே இருக்கு, அவ வந்து கழுவி கொடுத்த பின்னாலெ பொங்கல் வைக்கறேன். சாயங்காலம் தானே எல்லோரும் வர்றாங்க"

"ம்ம்ம் சரி, சரி, குழந்தைங்க சாப்பிட்டாங்களா?"

"ஓ அப்பவே சாப்டாச்சே, இப்ப உள்ளே படிச்சிகிட்டிருக்காங்க"

"ஆமா, வடை செய்யறெயா"

"வடையா? பொங்கலுக்கு வடை யாராவது செய்வாங்களா?"

"இல்லே, செஞ்சா நல்லா இருக்குமேன்னு"

"சரி, சரி, செய்யறேன், கொஞ்சம் நேரம் பேசமெ இருங்க, இந்த நிகழ்ச்சி முடியட்டும்"

எனக்கும் களைப்பாக இருந்ததால் [ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட மயக்கம்(?!)] கொஞ்ச நேரம் படுக்கலாம்னு உள்ளே போனேன்.

பாத்திரங்களை கழுவும் சத்தம் கேட்டு எழும் போது மணி ஐந்தரை. அய்யோ அஞ்சரை ஆச்சேன்னு வேகமா எழுந்து ஹாலுக்கு போனேன். மனைவி எப்பவும் போல பொங்கல் நிகழ்ச்சிகளில்

"என்ன, இன்னும் பொங்கல் பண்ணலெயா?"
"ஏன் மாமா தூங்கி எந்திரிச்சி வந்து கத்தறீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எல்லாம் ரெடியாகிட்டிருக்கு"

சமையலறைக்கு போய் பார்த்தேன். அடுப்பை வேலைக்காரம்மா சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது கதவு தட்டற சத்தம். போய் திறந்தால் குழந்தைகள் ட்யூசனிலிருந்து வந்துவிட்டார்கள்.

அவர்களை பார்த்ததும் வீட்டுக்காரி, சரி சரி, எல்லோரும்னு போய் முகம் கழுவிட்டு வாங்கன்னு சொல்லி, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாங்க (அப்பாடா தொலைகாட்சிக்கு விடுதலை).

அட பொங்கலே இன்னும் தயாராகலெயே, அதுக்குள்ளே எப்படி பூஜைன்னு யோசிச்சிகிட்டிருக்கறப்ப வாழை இலையை இரண்டாக கிழிச்சி எடுத்துட்டு ஹாலுக்கு போனாங்க. அங்கெ இருந்த மின் சமைகலனை (Electric Cooker) திறந்தாங்க. உடனே என் சின்ன பெண் பொங்கலோ பொங்கல் என்று கூவ நானும் பொங்கலோ பொங்கல் என பின்பாட்டு பாட பொங்கலுக்கான பூஜை முடிந்தது. (நம்புங்க, புது பானைக்கு பதிலா மின்சமைகலன்)

பிறகென்ன கொஞ்சம் கொஞ்சம் பொங்கல் எல்லோருக்கும் மின்கலனிலிருந்து எடுத்து கொடுத்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.
சாயங்காலம் வடை, சாப்பாடு என செஞ்சாங்க.அப்புறம் என்ன நண்பர்களும் தம்பிகளும் வர மின்சமைக்கலனில் செய்யப்பட்ட எங்க வீட்டு பொங்கல் இரவு விருந்துடன் அமர்க்களமாக முடிந்தது.

பொங்கலோ பொங்கல்.

Saturday, December 23, 2006

அழியாதக் கோலங்கள் - 2

எங்க ஊரெ சுத்தி மலைகளும், தேயிலை தோட்டங்களும், கொஞ்சம் தூரம் சென்றால் காடுகளும் இருக்கும். எனக்கு சின்ன வயசிலிருந்தே காடுகளின் சுற்றுவதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி. எனக்கு நினைவு தெரிந்து நான் காடுகளில் நண்பர்களுடன் சுற்ற தொடங்கிய போது எட்டு ஒன்பது வயதிருக்கும். அதற்கு முன்பும் அம்மாவோடு காடுகளில் சுள்ளி பொறுக்க போயிருக்கிறேன்.

மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து பையை தூக்கிப்போட்டுவிட்டு, கிடைக்கும் வரக்காப்பியையும் ஒரு மடக்கு குடித்துவிட்டு காட்டை நோக்கி படையெடுப்பது அடிக்கடி நடக்கும்.

எங்க ஊருக்கு அருகிலுள்ள காட்டில் குரங்குகள் அதிகம் இருப்பதால் கொரங்குப்பிள்ளை சோலை என்றே அதற்கு பெயர். அது என்னவோ தெரியவில்லை பெரிய மிருகங்கள் அவ்வளவாக அதிகம் பார்க்க வாய்ப்பு இருப்பதில்லை. ஒரே ஒரு முறை புலியை பார்த்திருக்கிறோம்.
மற்றப்படி காட்டாடு, காட்டெருமை, குள்ளநரி, முயல், காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, கீரி, பாம்புகள், மான் என இப்படித்தான்.

பொதுவா சனி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே நாங்கள் காட்டு வாசிகள் ஆகிவிடுவோம். ரொம்ப தூரம் போவோம். அதாவது காலையில் வீட்டில் கேழ்வரகு களியை சாப்பிட்டுவிட்டு போனால் மாலை வரை காடுகளில் சுற்றுவதும், பழங்கள் பறிப்பதும், காட்டாறில் குதித்து நீச்சல் அடிப்பதும், காட்டுக்கோழிகள், முயல்களை துரத்துவதும், ஆற்றில் நண்டு பிடிப்பதும் என எதாவது ஒன்று நடந்துக்கொண்டே இருக்கும்.

எங்கள் குழுவில் மொத்தம் நாலு பேர்.... மணிகண்டன், தேவன், சதாசிவன், நான். இதில் மணிகண்டனும் நானும் மரமேறுவதில் கொஞ்சம் கில்லாடிகள். மற்ற இருவரும் கொஞ்சம் பயப்படுவார்கள். எனக்கு எந்தெந்த இடத்தில் எந்தெந்த பழமரம் இருக்கு என்பது அத்துப்படி. அதனால் நண்பர்கள் என்னையே தொடர்வார்கள்.

நாவல் பழ காலத்தில் சில நாட்களுக்கு முன்பே போய் மரங்களை நோட்டமிட்டுவிட்டு வந்துவிடுவோம். காய்களை பார்த்து எப்பொழுது பழமாகும் என ஒரு கணக்கு வைத்து சரியாக அந்த நாளில் அங்கு போவோம்.பொதுவாக மலைக்காடுகளில் கிடைக்கும் நாவல் பழங்கள் சிறியதாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். சமவெளியில் அந்த சுவையை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை. சில நாவல் மர இலை குருத்துகளும் சுவையாக இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான் நான், மணிகண்டன், தேவன் மூன்று பேரும் ஒரு நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்து சாப்பிட்டுக்கொண்டும். பைகளில் நிரப்பிக்கொண்டும் இருந்தோம். திடீரென்று மணிகண்டனின் கத்தல்..... பயந்துபோய் அவனெ பாத்தா மரத்திலிருந்து கீழே புதரில் விழுந்து கிடந்தான். எனக்கு பயமும் பதட்டமும், தேவனை பார்த்தேன். அவனும் என்னை போலவே பதட்டத்தில். மணிகண்டான்னு குரல் கொடுத்தேன். அவன் புதரிலிருந்து சிரமப்பட்டு எழுந்து பக்கத்து மரத்தை பாக்க சொன்னான்.

திரும்பினால் அந்த மரத்தில் ஒரு மலைப்பாம்பு மெதுவாக நகர்ந்துக்கொண்டிருந்தது.

தேவன் அதற்குள் மரத்திலிருந்து இறங்கி்யிருந்தான். எனக்கு குதிப்பதற்கு பயம். கீழே விழுந்த மணிகண்டனும், தேவனும் பதட்டத்தில் என்னை அவசரப்படுத்துகிறார்கள். நானோ கை, கால் நடுங்க உதறல் எடுத்துக்கொண்டெ, குதிக்கலாமா, வேண்டாமான்னு.... பின்னெ .....நல்ல உயரம். முப்பது அடி இருக்கும்.

அப்புறம் என்ன... காலும், கையும் நடுங்க வேகவேகமாக இறங்கி, பாதியிலெயே புதருக்குள் குதித்து, கை, கால் எல்லாம் சிராய்ப்பு, ரத்தத்துடன் ஓட்டம்..... பத்து நிமிடம் ஓடியப்பின் மூச்சு வாங்க முன்னாலெ ஓடினவங்களெ பாத்தா, அவனுக கொஞ்ச தூரத்தில் இன்னொரு மரத்தில் ஏறிகிட்டு இருந்தானுக..... இந்த மணிகண்டன் விழுந்தும் கூட ஒண்ணுமே நடக்காதவன் போல மரம் ஏறுவதை பார்த்து அசந்துட்டேன்.

நான் மட்டும் விடுவேனா என்ன... ஓடிப்போய் தொத்திகிட்டேன்.

இளங்கன்று பயம் அறியாதுன்னு இதுக்குத்தான் சொன்னாங்களோ?

தொடரும்.

Monday, December 11, 2006

அழியாத கோலங்கள் - 1

அப்ப நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதுசு. ஐந்தாம் வகுப்பு வரை கீழ் நிலை பள்ளி(எலிமெண்டரி ஸ்கூல்). பிறகு அந்த பள்ளிக்கு அடுத்து இருக்கும் உயர்நிலைப் பள்ளி ஒரு நாள் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் வராததால் நாங்க எல்லோரும் வழக்கம் போல கத்திக்கொண்டும் குறும்பு செய்துக்கொண்டும் இருந்தோம்.

பக்கத்து அறை எட்டாம் வகுப்பு. அங்கு ஆஙகில பாடம் நடந்துக்கொண்டிருந்தது. நடத்தியவர் தலைமை ஆசிரியர். நாங்கள் கத்தியது அவருக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கிவிட்டது. உடனே எங்கள் வகுப்புக்கு வந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். சாதாரணமாகவே அந்த தலைமை ஆசிரியர் மீது எல்லோருக்கும் பயமும் மரியாதையும் இருக்கும். அவரை பார்த்து நாங்களும் பயந்து அமைதியாகிவிட்டோம். அவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு எங்கள் அனைவரையும் எட்டாம் வகுப்பிற்கு போய் உட்கார சொன்னார்.

வகுப்புகள் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், பெஞ்சுகளில் வகுப்பு பையன்கள் இருக்க. நாங்கள் முன்னால் தரையில் அமர்ந்தோம். எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தார். எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று ஒரு எழவும் புரியவில்லை. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் திடீரென மேஜைமீதிருந்த தனது சாவிக்கொத்தை எடுத்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டி "வாட் ஈஸ் திஸ்?" என்றார். யாரும் பதில் கூற வில்லை. இரண்டு மூணு பேரிடம் கேட்டார். எல்லோரும் திருதிருவென முழித்தார்கள். உடனே தரையில் உட்கார்ந்திருந்த எங்களைப் பார்த்து "வாட் ஈஸ் திஸ்? என்று கேட்க, நான் உடனே எப்பவும் போல முந்திரிக்கொட்டயாக எழுந்து "சார் திஸ் ஈஸ் சாவி!" என்றேனே பார்க்கலாம்.

வகுப்பறையில் ஓவென்ற சிரிப்பு....

அதற்கு பிறகு பள்ளி இறுதி வகுப்பு வரையும் அவர் என்னைப் பார்க்கும்போது புன்னகைப்பதும் எனக்கும் அந்த ஞாபகம் வருவதும் தவிர்க்க முடியாத விசயமாகிவிட்டது.

Wednesday, November 08, 2006

ஒரு மருத்துவமனை விஜயம்

நேற்று இரவு சுமார் பத்து மணி இருக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு நடை போகலாம் என்று நானும் நண்பரும் கிளம்பினோம். வீட்டுக்கு அருகில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் இருக்கிறது. அங்கு யாரும் அதிகம் வருவதில்லை. அதனால் அடிக்கடி அங்கு போய் பேசிக்கொண்டே நடப்போம். ஒரு முப்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் உடம்பில் லேசான அரிப்பு! வீடு நெருங்க நெருங்க அரிப்பு அதிகமாகி உடல் முழுவதும் பரவி விட்டது. வீட்டில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மனைவியும் அவரது தங்கையுடன் அருகிலிருக்கும் பூங்காவுக்கு நடை பழக போயிருந்தார்கள். நண்பர் அப்படியே வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி போய்விட்டார். குழந்தைகள் வீட்டினுள் நல்ல தூக்கத்தில். வீட்டு சாவி கொண்டுப் போகாமல் போய்விட்டேன். மணி அடித்தும் தட்டியும் குளிர்சாதனம் இயங்கி கொண்டிருந்ததால் குழந்தைகளுக்கு கேட்கவில்லை. மிகவும் முடியாமல் வீட்டிற்கு வெளியே படிக்கட்டில் உட்கார்ந்தேன். ஆனாலும் எதுவும் குறைந்தபாடில்லை. தலைச் சுற்றல், அரிப்போ தாங்க முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. மெதுவாக எழுந்து எதிர் வீட்டு நண்பரின் வீட்டுக்கதவை தட்டினேன். அவர் கதவை திறந்ததும் முடியாமல் விழுந்துவிட்டேன். எனக்கு சுய நினைவு போய்விட்டது. (இதற்கு மேல் அவர்கள் பின்னர் சொன்னது) அவர்களுக்கு பதட்டமும் பயமும் ஒரு சேர பற்றிக்கொண்டது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் அவரும் அவர் மனைவியும் என்னை மிகவும் சிரமப்பட்டு சோபாவில் படுக்க வைத்திருக்கிறார்கள்.
அந்த அம்மா ஒரு செவிலித்தாய் (நர்ஸ்). உடனே நாடி துடிப்பு (பல்ஸ்), இரத்த அழுத்தம் பார்த்திருக்கிறார்கள். அவை எதுவுமே சரியாக இல்லை. துடிப்பு சுத்தமாக தெரியவில்லை. மிகவும் பயந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிலோ யாரும் இல்லை.

நண்பர் மிகவும் பயந்து போய் அருகிலிருந்த உணவகத்தில் சிலரை கூப்பிட்டிருக்கிறார். ஒரு சிலர் வந்து பார்த்து விட்டு தங்கள் வேலையை பார்க்க போய்விட்டார்கள். வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத்த அவருக்கு யாரும் உதவ அந்த சமயத்தில் கிடடக்கவில்லை. பிறகு மேல் வீட்டு நண்பரை கூப்பிட்டிருக்கிறார். அவர் உடனே வந்து எனது தம்பிகளை தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். எல்லோரும் பதட்டத்துடன் வந்திருக்கிறார்கள். மனைவியும் வந்துவிட்டாள். இப்பொழுது அந்த செவிலி எனது முகத்தில் தண்ணீர் தெளித்திருக்கிறார்கள். லேசாக நினைவு திரும்பியது. மனைவி ஒரே அழுகை. எனக்கு சிறிதளவு நினைவு வர தொடங்கியிருந்தது. அந்த செவிலி மறுபடியும் சோதனை செய்தார்கள். இப்பொழுது எல்லாமெ ஓரளவுக்கு சரியான நிலைக்கு திரும்பியிருந்தது.

எல்லோரும் மருத்துவமனைக்கு உடனே போகலாம் என்றார்கள். நான் வேண்டாம் சரியாகிவிடும் என்றேன். ஆனால் எதிர் வீட்டு நண்பரும், அண்ணி, தம்பிகளும் கட்டாயப்படுத்தி கூட்டிக்கோண்டு போனார்கள்.

இங்குள்ள மருத்துவமனைகளில் இரவு நேரத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நண்பருக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கும் போல. தள்ளு நாற்காலியை கூப்பிடுங்கள், அப்பொழுது தான் வேகமாக மருத்துவரை பார்க்க முடியும் என்றார். அதன்படியே தள்ளு நாற்காலியும் வந்தது. அதில் என்னை உட்கார வைத்து பின்னர் பதிவு செய்து மருத்துவரின் அறைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு ஏராளமான நோயாளிகள் அமர்ந்திருந்தார்கள். நான் தள்ளு நாற்காலியில் இருந்ததால் ஒரு பத்து நிமிட காத்திருத்தலுக்கு பிறகு மருத்தவரை காண வாய்ப்பு கிடைத்தது. மருத்துவர் நண்பரிடமும், மனைவியிடமும் விசாரித்து விட்டு மருத்துவ காகிததில் ஏதோ எழுதிக்கொடுத்து வேறு ஒரு அறைக்கு அனுப்பினார். அங்கு மீண்டும் இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, மாரடைப்புக்கான சோதனைகள் செய்தார்கள். அந்த சோதனை அறிக்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அவர் அதை பார்த்து விட்டு வேறு ஒரு அறைக்கு கண்காணிப்பிற்காக (observation) அனுப்பினார். அங்கிருந்த அத்தனை படுக்கைகளும் நிரம்பியிருந்தன. ஒரு இருபது நிமிடங்கள் கழித்து ஒரு படுக்கை காலியானது அதில் என்னை படுக்க வைத்து சத்து நீர் (குளுகோஸ்) ஏற்ற தொடங்கினார்கள். பரிசோதனைக்காக இரத்தமும் எடுத்தார்கள். குளிர் சாதன அறையாக இருந்ததால் மிகவும் குளிர்ந்தது. ஒரு போர்வையை கேட்டு வாங்கி போர்த்தினாள் மனைவி. எனக்கு நேர் மேலே குளிர்சாதனத்தின் சிறு சன்னல் இருந்ததால் நான் முகத்தையும் மூடினேன். உடனே என் மனைவி பயந்துவிட்டாள். எனக்கு பயங்கரமான களைப்பில் தூக்கம் கண்ணை சொக்கவைத்தது. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை என் மனைவி என்னை கூப்பிட ஆரம்பித்தாள். ரொம்பவும் பயந்துவிட்டாள். கொஞ்ச நேரம் சும்மாயிரு, தூங்குகிறேன் என்று அதட்டியதும் பயத்துடன் அமைதியாகிவிட்டாள். வேறு சில நண்பர்களும் வந்திருந்ததால், அடுத்த நாள் வேலையின் காரணமாக எதிர்வீட்டு நண்பரை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் போக விருப்பமேயில்லாமல் போய் இருக்கிறார்.

சுமார் மூன்று மணிநேரம் கழித்து எல்லா சோதனைகளும் முடிந்து பார்த்த மருத்துவர் எல்லாம் சரியாக இருக்கிறது. ஒன்றும் பயப்பட தேவையில்லை. ஏதோ ஒரு ஒவ்வாமை (அலர்ஜி) என்று சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். பிறகு நண்பரின் வண்டியில் எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம். மணி இரவு மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர் வீட்டு நண்பர் அவ்வளவாக பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவசரத்தில் மிகவும் உதவியதை மறக்க முடியவில்லை. மேல்வீட்டு நண்பரும் தக்க சமயத்தில் வந்து உதவினார். பின்னர் வந்த நண்பர்களும் தூங்காமல், சாப்பிடாமல் திரும்ப வீடு வரும் வரை பொறுமையாக இருந்தது மனதை ஏதோ செய்தது.

காலையில் தான் குழந்தைகளுக்கு சொன்னேன். ஒரே அழுகை.

மிகவும் களைப்பாக இருந்ததால் அலுவலகத்திற்கு விடுமுறைக்கு சொல்லிவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.


மனிதநேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதற்கு எனக்கு நடந்த இந்த நிகழ்ச்சி ஒரு சின்ன உதாரணம்.

Monday, September 11, 2006

காதல் - சில கேள்விகள்

  1. ஏன் பல பேரின் காதல் கல்யாணத்திற்கு பிறகு சில காலம் கழித்து கசந்து விடுகிறது?
  2. ஏன் காதல் கல்யாணத்தில் தான் முடிய வேண்டும்?
  3. ஏன் காதல் தோல்விகள் ஏற்படுகின்றன?
  4. ஏன் காதல் ஒரு குறிப்பிட்ட வயதில் அதிகமாக (90%) வருகிறது?
  5. ஏன் காதல் இல்லையேல் சாதல் என பலர் தங்கள் வாழ்வை அழித்துக்கொள்கிறார்கள்?
  6. ஏன் சிலர் முதல் காதல் தோல்வியடைந்தால் அடுத்த காதலை நோக்கி ஓடுகிறார்கள்?
  7. ஏன் காதல் கண்ணை மறைக்கிறது?
  8. ஏன் பொதுவில் பெற்றோர்கள் காதலை வெறுக்கிறார்கள்?
  9. ஏன் காதல்கள் பொதுவாக கல்லூரிகளில் உருவாகிறது?
  10. காதலுக்கும் நட்புக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் என்ன?
  11. நட்பு காதலாக மாறலாம் ஆனால் காதல் நட்பாக மாறுமா?
  12. காதலைப் பற்றி எழுதும் போது மட்டும்தங்களின் புலம்பல்கள் எல்லாம் கவிதைகள் என்று சிலர் ஏன் மற்றவர்களை சாகடிக்கிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு பதில் சரியாக தெரிந்தும் சொல்லாமலோ, அல்லது தவறான பதில்கள் சொன்னாலோ, அல்லது மழுப்பினாலோ உங்கள் தலை......

Sunday, September 10, 2006

இந்தியனின் மூளை

நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.

அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார். வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.

250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.

இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார். அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.

அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 15.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

ஆம். இது தான் இந்தியனின் மூளை.

இதனால் தான் இந்தியா ஒளிர்கிறது.