Tuesday, June 17, 2008

குவைத்தில் பயங்கர புழுதிப்புயல்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான புழுதியும் வெயிலும் சூழ்ந்திருக்கும் குவைத்தில் இன்று காலை புழுதியின் தாக்கம் மிகவும் அதிகமாகி விட்டது.

இன்று காலை ஏழு மணிக்கு எடுத்த புகைப்படங்கள் இவை. இன்று இரவுக்குள் குவைத்தை மிக பயங்கரமான புழுதிபுயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன ஆகும் என்று தெரியவில்லை. (பலருக்கும் தூசியினால் பலவகை பட்ட வியாதிகள் வந்திருக்கின்றன)





Sunday, June 15, 2008

தசாவதாரமா? ஹசாவதாரமா?


படத்தின் ஆரம்பம் கொஞ்சம் அசத்தலாக இருந்ததால் நிமிர்ந்து உட்கார்ந்தேன். உடனே ஒரு மாபெரும் கிராஃபிக்ஸ் அரங்கத்தை காட்டியதும் ஓரளவு படத்தின் நோக்கம் புரிந்தது.

சில நிமிடங்களுக்கு பிறகு வந்த பத்தாம் நூற்றாண்டு கதையில் அந்த மாபெரும் சிலையை ஒற்றையாளாய் தூக்கி நகர்த்தியதை பார்க்கையில் கொஞ்சம் லேசாக பூசுத்த ஆரம்பித்துவிட்டார்களோ என தோன்றி முடிக்கும் முன் இயேசுவை தொங்க வைத்தது போல கம்பிகளால் கமலை முதுகில் குத்தி தொங்க வைக்கிறார்கள். ஆனால் ஆச்சரியம் முதுகில் கம்பியால் குத்தப்பட்ட இடங்களிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்த வில்லை என்பது.

பல வேடங்களை ஒப்பனை மூலம் திறம்பட செய்தவர்கள் ஒரே முகத்துடன் அமெரிக்கனையும், உயரமான முஸ்லீம் உருவத்தையும் காட்டியதில் ஏன் வித்தியாசம் காட்ட மறந்துவிட்டார்கள் என தோன்றியது. உயரம் மட்டும் போதும் என நினைத்துவிட்டார்களோ!

ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது. ஆரம்பத்தில் கடலை காட்டும் போது கிராஃபிக்ஸ் வேலை நன்றாக தெரிகிறது. அது போலவே சுனாமியிலும். பல இடங்களில் அவை செட்டிங் என்பது கண்கூடாக தெரிகிறது. இசை பரவாயில்லை ரகம். அசினின் நடிப்பில் கஜினி படத்தில் சாயல் எட்டிப்பார்க்கிறது என்றாலும் அந்த உயிர்ப்பு இதில் இல்லை, மிகவும் செயற்கையான நடிப்பு.

உளவுதுறை அதிகாரி, மற்றும் பூவராகன் வேடங்கள் மனதில் பதிகின்றன.
கதை வசனம் கமல் என போடுகிறார்கள். ஆனால் பல இடங்களில் கிரேஸி மோகனின் வாடை அடிக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் ரவிகுமாராம் அவர் உலக்க நாயகனே என்ற பாட்டில் கமலை புகழ்ந்து தள்ளுவதை பார்த்தாலே யார் இயக்குனர் என சுலபமாக தெரிந்துவிடுகிறது. புஷ், கருணாநிதி, மன்மோகன் சிங் என படத்தில் தோன்றவைத்திருப்பதற்கு, (கூடவெ ஒரு கட்டத்தில் உண்மையான ஜெயலலிதா) ஏதேனும் காரணங்களை மக்கள் கண்டுபிடித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

கமலின் முயற்சியை பாராட்டலாம். ஆனால் அதற்கு இத்தனை செலவு செய்து காதில் பூ சுத்த வேண்டுமா!(ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு போட்டப்பணம் எப்படியும் வசூலாகி விடும் என்பது வேறு விசயம் - போடப்பட்ட அதிகபட்ச பிரிண்ட்களின் மூலமும் அதிகபட்ச எதிர்ப்பார்ப்புகளினாலும் முதல் பதினைந்து நாட்கள் அனைத்து திரையரங்குகள் நிரம்பியிருக்கும் என்பது நிச்சயம்)

கடைசி கட்ட காட்சிகள் ரொம்பவும் இழுவை. எப்பவும் போல ஒரு மசாலா படத்தை பார்த்துவிட்டு தலைவலியோடு வீட்டுக்கு வந்ததை தவிர பெருசாக சொல்ல ஒன்றும் இல்லை.

இன்னொரு அன்பே சிவம், சலங்கை ஒலி, தெனாலி, மகாநதி போன்ற ஒரு படத்தை விரைவில் எதிர்ப்பார்ப்போம்.