Monday, January 14, 2008

பொங்கலோ பொங்கல் - 2007

எல்லோரும் பொங்கல் விழா எல்லாம் முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கரும்பு எல்லாம் சாப்பிட்டு சந்தோசமா இருக்கீங்க போலெ.(2007 பொங்கலில்)

அட, பொங்கலெ பத்தி அவனவன் பதிவு எழுதறானே, நம்ம வீட்டு பொங்கலெ பத்தியும் எழுதலேன்னா எப்படின்னு தோணிச்சி.

பொங்கல் வாழ்த்துக்கள் ஒரு வாரமாவே வந்துட்டு இருந்ததாலெ இந்த தடவெ பொங்கல் நாள் மறக்கமுடியாமெ அப்படியே மனசிலெ பதிஞ்சிடிச்சி.

காலையில் எழுந்ததும் காப்பி போட்டு குடித்துக் கொண்டே தூங்கிகிட்டிருந்த மனைவிகிட்டெ பொங்கல் வாழ்த்துக்கள் சொன்னேன். "ம்ம்... சரி"... வாழ்த்துக்கள்.

"ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கப்போறோம்".

"ஏன் மாமா தூங்கிகிட்டிருக்கேனென்னு தெரியலெயா?" உங்களுக்கு இப்பத்தான் பொங்கலெ பத்தி கேக்கணுமா"

"எனக்கு இன்னிக்கி ஆபிஸ்லெ முக்கியமான வேலை இருக்கு, பொங்கல் எல்லாம் சாயங்காலம்தான்"

"என்ன நீ இப்படி சொல்லறே, எல்லோரும் காலையில் தானை குளிச்சி, புதுத்துணி போட்டு கொண்டாடுவாங்க"

"நீங்க இப்ப ஆபிசுக்கு போறிங்களா, இல்லையா?" தூக்க கலக்கத்தில் குரல் வலுக்கவும் எப்படியோ போகட்டும்னு அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

எப்பவும் போல அலுவலகம் வந்து கணினியை திறந்ததும். "அண்ணா, பொங்கல் வாழ்த்துக்கள்" "பொங்கல் சாப்பிட்டாச்சா" "நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்" என ஒரே பொங்கலோ பொங்கல் தான்.

சரி நம்ம பொளப்பெ சொல்லி இவங்க மூடையும் கெடுக்க வேண்டாமேன்னு நினெச்சி, எல்லோருக்கும் வாழ்த்துகள் சொன்னேன்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு தொலைபேசி, "என்ன பொங்கல் ரெடியாகிடுச்சா"

"ஏன் மாமா நா இப்பத்தானே ஆபிஸ்லெருந்து வர்றேன், இந்த பசங்களுக்கும் இன்னும் சாப்பாடு கொடுக்கலே, உங்களுக்கு பொங்கல்தான் முக்கியமா போச்சா"

"இல்லே அது வந்து ..... "

"சரி போனெ வைங்க, எனக்கு வேலை இருக்குது"

"சாப்பாடுக்கு வந்துடட்டுமா"

"நான் மெக்டொனால்டிலெருந்து எங்களுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்", உங்களுக்கு வேணும்னா தோசை போட்டு தர்றேன், வாங்க"

"தோசையா, இன்னிக்கி பொங்கல்ங்கறதெ மறந்துட்டெயா"

"அய்யோ, உங்க கூட தாங்க முடியலெயே",

"சரி சாயங்காலம் பொங்கல் பண்ணுவோம், இப்ப ஹோட்டல்லெயே சாப்பிட்டு வந்துடுங்க."

அலுவலக மேலாளரிடம் பொங்கல்னு சொல்லி ஒரு மணி நேரம் முன்அனுமதி கேட்டுட்டு நேரா வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் ஓட்டலில் போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (அங்கெ கொஞ்சமா சாஸ்திரத்துக்கு சக்கரை பொங்கல் கொடுத்துட்டாங்க) வீட்டுக்கு போனேன்.

சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மனைவி, நிமிர்ந்து பார்த்து
"என்ன மாமா, இன்னிக்கி சீக்கிரமா வந்துட்டீங்க"

"பொங்கல்!, அதான்."

என்னை ஒரு மாதிரியாக பார்த்த மனைவி, "சரி, சரி, வேலைக்காரி வந்துடட்டும், பாத்திரம் எல்லாம் கழுவாமெ அப்படியே இருக்கு, அவ வந்து கழுவி கொடுத்த பின்னாலெ பொங்கல் வைக்கறேன். சாயங்காலம் தானே எல்லோரும் வர்றாங்க"

"ம்ம்ம் சரி, சரி, குழந்தைங்க சாப்பிட்டாங்களா?"

"ஓ அப்பவே சாப்டாச்சே, இப்ப உள்ளே படிச்சிகிட்டிருக்காங்க"

"ஆமா, வடை செய்யறெயா"

"வடையா? பொங்கலுக்கு வடை யாராவது செய்வாங்களா?"

"இல்லே, செஞ்சா நல்லா இருக்குமேன்னு"

"சரி, சரி, செய்யறேன், கொஞ்சம் நேரம் பேசமெ இருங்க, இந்த நிகழ்ச்சி முடியட்டும்"

எனக்கும் களைப்பாக இருந்ததால் [ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட மயக்கம்(?!)] கொஞ்ச நேரம் படுக்கலாம்னு உள்ளே போனேன்.

பாத்திரங்களை கழுவும் சத்தம் கேட்டு எழும் போது மணி ஐந்தரை. அய்யோ அஞ்சரை ஆச்சேன்னு வேகமா எழுந்து ஹாலுக்கு போனேன். மனைவி எப்பவும் போல பொங்கல் நிகழ்ச்சிகளில்

"என்ன, இன்னும் பொங்கல் பண்ணலெயா?"
"ஏன் மாமா தூங்கி எந்திரிச்சி வந்து கத்தறீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எல்லாம் ரெடியாகிட்டிருக்கு"

சமையலறைக்கு போய் பார்த்தேன். அடுப்பை வேலைக்காரம்மா சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது கதவு தட்டற சத்தம். போய் திறந்தால் குழந்தைகள் ட்யூசனிலிருந்து வந்துவிட்டார்கள்.

அவர்களை பார்த்ததும் வீட்டுக்காரி, சரி சரி, எல்லோரும்னு போய் முகம் கழுவிட்டு வாங்கன்னு சொல்லி, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாங்க (அப்பாடா தொலைகாட்சிக்கு விடுதலை).

அட பொங்கலே இன்னும் தயாராகலெயே, அதுக்குள்ளே எப்படி பூஜைன்னு யோசிச்சிகிட்டிருக்கறப்ப வாழை இலையை இரண்டாக கிழிச்சி எடுத்துட்டு ஹாலுக்கு போனாங்க. அங்கெ இருந்த மின் சமைகலனை (Electric Cooker) திறந்தாங்க. உடனே என் சின்ன பெண் பொங்கலோ பொங்கல் என்று கூவ நானும் பொங்கலோ பொங்கல் என பின்பாட்டு பாட பொங்கலுக்கான பூஜை முடிந்தது. (நம்புங்க, புது பானைக்கு பதிலா மின்சமைகலன்)

பிறகென்ன கொஞ்சம் கொஞ்சம் பொங்கல் எல்லோருக்கும் மின்கலனிலிருந்து எடுத்து கொடுத்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.
சாயங்காலம் வடை, சாப்பாடு என செஞ்சாங்க.அப்புறம் என்ன நண்பர்களும் தம்பிகளும் வர மின்சமைக்கலனில் செய்யப்பட்ட எங்க வீட்டு பொங்கல் இரவு விருந்துடன் அமர்க்களமாக முடிந்தது.

பொங்கலோ பொங்கல்.

2008 பொங்கல் பதிவு விரைவில்

Thursday, January 10, 2008

தொடரும் அவஸ்தைகள்

நேற்று பயங்கர குளிரில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (குளிர் மட்டுமல்ல, மணல் தூசியும் பனிமூட்டமும்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து அழைத்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பி வீட்டருகில் வந்தோம்.

"மாமோவ் காரை நிறுத்துங்க"

"ஏன், என்ன ஆச்சி:

"நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் கோலங்கள் பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ"

மறுத்துப் பேச முடியுமா நான்.

"ம்ம், சரி, சீக்கிரம் வந்துரு." (இதற்கு மேல் பதில் சொன்னால் என்ன நடக்கும்னு தான் எல்லோருக்கும் தெரியுமே!)

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும், வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது

"ஹலோ, அண்ணா, நா பிரசாத்ணா, "

“சொல்லு”

"ஒரு முக்கியமான விசய்ம்ண்ணா, நீங்க வீட்லெதானெ இருக்கீங்க"
(இதை விட ஒரு மடத்தனமான கேள்வி இருக்க முடியுமா?)

"ஆமா என்ன விசயம்?"

"இல்லெண்ணா நான் நேரில் வந்து பேசறேன்!”

"சரி வா"

பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி.

"அண்ணா நாந்தான் பிரசாத்!"

"??!!??"

"அண்ணா உங்க வீட்டிலெ கோலங்கள் வருதா அண்ணா?"
"இல்லெ"
"அப்படியா, அக்கா எங்கே?"
"தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?"
"அது ஒண்ணுமில்லெண்ணா, கோலங்கள் பாக்கணும்னுதான்!"
பேசி வைக்கப்பட்டது.
(என்ன கொடுமை சிவா இது!)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம். எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.

"அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெ வர்தா?"

டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.

என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன்.
மீண்டும் அலைபேசி அடிக்கும் சத்தம்
"ஹலோ அங்கிள் நா ரீத்து பேசறேன், உங்க வீட்டில் சன் டீவி வருதா?"

"ஆமம்மா ஏன்"

"இல்லே அம்மா வெளியில் போயிருக்கா, என்னெ கோலங்களெ ரிகார்ட் செஞ்சி வைக்க சொன்னா, எங்க வீட்லெ வரலெ, நீங்க கொஞ்சம் ரிகார்ட் செய்து கொடுக்கறீங்களா" (இந்த பெண் பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு படித்துக்கொண்டிருக்கிறது வீட்டில் என்பது வேறு விசயம்)

"எங்க வீட்லெ ரிகார்ட் செய்ய முடியாதம்மா, ரிகார்டர் சரியா வேலை செய்யலெ"

"சரி அங்கிள்"

என் நிலைமையை பாருங்கள். கொஞ்ச நேரம் தூங்க விடாமல்... போதுமடா சாமி....

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று மெதுவாக...

"என்ன ஆச்சு?"
"க்ளைமாக்ஸ் சரியில்லீங்க" அதுக்குள்ளெ தொடரும் போட்டுட்டாங்க (?!)

அப்பாடா! ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்

இரவு சாப்பாடு நேரத்தில், கொஞ்சம் சாம்பார் ஊத்து....
அப்போது ...மீண்டும் ஃபோன் மேல் வீட்டிலிருந்து. ஃபோனை எடுத்த என் மனைவி கோலங்களின் கதையை சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
நான் சாம்பார் வரும் என ஆறிப்போய்க்கொண்டிருக்கும் இட்லியை பார்த்துக்கொண்டு ”ஙே” என விழித்துக்கொண்டிருக்கிறேன்....

அட நீங்களுமா?

Saturday, January 05, 2008

ஒரு மீசையின் கதை


மீசைக்கு என்ன பெருசா கதை இருக்கப்போகுதுன்னு எப்பவும் போல தமிழ் பயணி சிவா முணுமுணுப்பது லேசா காதில் விழுகிறது. அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை மீசைக்கும் கதை இருக்குங்கறது.

முதலில் இந்த கதையை ஏன் எழுதணும்ங்கறதெ சொல்லிடறேன். நம்ம சைலஜா இல்லே சைலஜா அதாங்க மைபா புகழ் இன்னும் என்னென்னமோ புகழ். அவங்க சும்மா இல்லாமெ புத்தாண்டு சபதம் என ஒரு பதிவு போட்டு ஒற்றை வரியிலேயே காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கும் என்னையும் அதில் இழுத்துவிட்டுட்டாங்க. சரி மாட்டிகிட்டோம் என்னடா செய்வது என யோசனையில் இருக்கும் போது தான் இந்த மீசை கதையை எழுதும் எண்ணம் தோன்றியது.

சின்ன வயதிலிருந்தே கருமையான மீசைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு ஆசை. நாமும் பெரியவனாகும் போது இப்படி மீசை வைக்க வேண்டும் என்று. அந்தக் காலத்து சினிமாக்களில் எம்ஜியார், சிவாஜி, ஜெமினி முதலிய கதாநாயகர்களின் மீசையை நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரு கோடு இழுக்கப்பட்டது போல இருக்கும். புராணப்படங்களில் அவர்களது மீசை லேசாக முனையில் வளைந்திருக்கும். ஒரு சில படங்களில் மட்டும் கொஞ்சம் கத்தையாக இருக்கும் உதாரணமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு இருப்பதை போல.

இவர்களுக்கு இப்படி என்றால் வில்லன்களுக்கு எப்பவும் கொடுவாள் மீசைதான். வில்லனென்றாலே கொடுவாள் மீசை இருக்கவேண்டும் என்ற சட்டம் போல. நிஜ உதாரணம் வீரப்பன். இது போலவே காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும். இப்பொழுதும் காவல்துறையினர் என்றாலே கம்பீரமான கொடுவாள் மீசை இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். தேவாரம் போன்றவர்கள். மாபோசி போன்றவர்களின் மீசை ஒரு தனி வகை.

மீசையினால் புகழ்பெற்றவர்கள் பலர். மீசை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர்கள் வித்தியாசமான மீசை வைத்திருந்த ஹிட்லர், சார்லி சாப்ளின்.

கமலஹாசன் முதல் முதலில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தப்பொழுது அவரது மீசை புதிய வடிவில் அடர்த்தியாக முனை மட்டும் கொஞ்சமாக தொங்குவது போல இருக்கும். கமலின் மீசையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மீசை அரும்ப ஆரம்பித்தவுடன் கமல் போல மீசை வைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டேன். மீசை விரைவில் வளரவேண்டும் என தினமும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருப்பேன். தலைமுடியும் அதே போல இருக்கவேண்டும் என்றும். ரஜினியின் மீசை மீது எனக்கு இதுவரை எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. அதில் ஈர்ப்பும் இல்லை என்பது என் கருத்து. ஏன்னா அவரது தலைமுடியே மீசையை மறக்கடிக்க செய்துவிடுகிறது.

ஒரு வழியாக சில வருடங்களில் மீசை அடர்த்தியாக வளர்ந்ததும் கமலை போலவே மீசையையும் மாற்றியாகிவிட்டது. இந்த நேரத்தில் கமல் மீசையை எடுத்துவிட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றாலும் நான் எனது மீசையின் அமைப்பை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தேன். இப்படியாக தொடர்ந்த என் மீசையை வாரத்திற்கு ஒரு நாள் சரியாக்குவேன். நடுவில் ஒரு தலை ராகம் படம் வந்தபோது சங்கரை பார்த்து சில காலம் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். இப்ப மீசையும் தாடியும் சேர்ந்த கலவையாக மாறிவிட்டது. திருமணம் வரை தாடியுடன் தொடர்ந்தேன்.அந்த தாடிக்காரன் என்னும் அளவிற்கு அடையாளம் ஏற்பட்டுவிட்டது. பெண்பார்க்க போகும் போதும் அதே தாடியுடன் தான் போனேன். நான் பார்த்த நான்கு பெண்களுக்கும் என்னை பிடித்து விட்டது என்பது வேறு விசயம் என்றாலும் ஒருத்தியை தான் திருமணம் செய்ய முடிந்தது.(தப்பித்தேன்)

இப்பொழுது ஒரு பெரிய பிரச்சினை வந்துவிட்டது. கல்யாணம் அன்று தாடியை மழிக்கவேண்டும் என்று என் தந்தையார் கட்டளை இட்டு விட்டார். வேறு வழி தாடியை எடுத்துவிட்டேன். ஆனால் மீசையை எடுக்கவில்லை.
அது தானே நமக்குஅழகு (?)

திருமணத்திற்கு பிறகு தாடி வளர்க்கவில்லை. மீசை மட்டும். அதை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சீர் செய்வேன். இப்படியாக காலம் போய்க்கொண்டிருக்கும் போது தான் அந்த நாள் வந்தது
.
அன்று காலை முகம் மழிக்க கண்ணாடியில் பார்க்கும்பொழுது மீசையில் ஒரு மண் நிறத்தில் முடி ஒன்று. அதை உடனே பிடுங்கி எடுத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பார்த்தால் இன்னொரு இடத்தில் இன்னும் வெளிர்நிறத்தில் ஒரு முடி.அதையும் பிடுங்கிவிட்டேன்.

பிறகு வந்த நாட்களில் அப்பப்ப ஒவ்வொரு முடி கண்ணுக்கு தெரிவதும் அதை பிடுங்குவதுமாக இருந்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து நாலைந்து முடிகளாக லேசான வெண்மை நிறத்துடன் முடிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஆமாம் மீசை நரைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை புரிந்துக்கொள்ள எனக்கு இவ்வளவு நாட்கள். இனி பிடுங்க முடியாது என்பதால் கத்திரியை வைத்து குறிப்பிட்ட வெண்முடிகளை வெட்ட ஆரம்பித்தேன். இந்த மாதிரி வெட்டும்பொழுது அருகிலிருக்கும் கருப்பு முடிகளும் சில சமயம் வெட்டப்படுவதால் மீசையில் ஆங்காங்க சிறு சிறு இடைவெளிகள்.

என்ன செய்யலாம் என முடித்திருத்துபவரிடம் ஆலோசனை கேட்டேன். மீசையின் அடர்த்தியை குறைத்து சிறியதாக்கி விடலாம் என்ற யோசனையை அவர் சொன்னார். வேறு வழி. அவர் யோசனைப்படியே மீசை சிறிதாக்கப்பட்டது. ஆனாலும் ஒரு பத்து நாட்களுக்குள் அது வளர்ந்து விடும்பொழுது வெள்ளை முடிகள் மட்டும் எடுப்பாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து என்னை ஏளனத்துடன் ஒரு பார்வை பார்க்க ஆரம்பித்தன.

அப்பொழுது தான் என் நண்பர் ஒரு யோசனை சொன்னார். பேசாமல் மை அடித்துவிடுங்கள். எப்பொழுதும் கருமையாக இருக்கும் என. ஆனால் எனக்கென்னவோ இந்த மை அடிப்பதில் உடன்பாடில்லை. கல்யாணம் செய்து குழந்தைகளும் பிறந்துவிட்டனர். இனி எதற்கு மைனராட்டம் கருமை மீசை என தோன்றியதால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். ஆனாலும் கண்ணாடியில் ஒரு சில வெள்ளை முடியுடன் மீசையை பார்க்கும் போதெல்லாம் ஒரு லேசான சோகம் எட்டிப்பார்க்கும்.

என்ன செய்வது என்ற பலநாள் யோசனையில் போன மாதம் திடீரென ஒரு திட்டம் தோன்றியது மீசையை எடுத்துவிடலாம் என.

ஆனால் மனம் கேட்கவில்லை. இவ்வளவு நாட்கள் வைத்த மீசையை எடுப்பதா என்றும் மீசையை எடுத்து விட்டால் என் முகம் எப்படி இருக்கும் என்றும் பல யோசனைகள். கண்ணாடி முன் நின்று கையால் மீசையை மறைத்து பார்த்து பலவாறு முயற்சித்தும் மீசையில்லாமல் என்னை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
ஆனால் வெண் முடிகள் அதிகமாக அதிகமாக இந்த யோசனையும் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது.

இந்த நேரத்தில் 2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும் புத்தாண்டு நாள் விழா வீட்டில் கொண்டாடப்பட்டது. பல்வேறு விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு விளையாட்டு கணவர்களுக்கு மனைவிமார் புடவை கட்டி விடுவது. என் மனைவி எனக்கு வேகமாக புடவை கட்டி ஜெயிக்க முடியவில்லை என்றாலும் புடவைக்கட்டப்பட்ட என்னை எல்லோரும் அண்ணா நீங்கள் புடவை கட்டினாலும் அழகாகவே இருக்கிறீர்கள் என உசுப்பேத்திவிட்டுவிட்டனர். அன்று அதிகாலை வரை விழா நடந்தாலும் என்மனமோ அவர்கள் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தது.

அடுத்தநாள் எழுந்து குளியலறை போய் கண்ணாடியை பார்த்ததும் உடனே இரவில் நடந்த நிகழ்ச்சி திரைப்படமாக மனதில். ஏன் நான் புத்தாண்டு சபதமாக மீசையை எடுக்கக்கூடாது என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றியது. ஆனாலும் மனம் ஒப்பவில்லை. முகத்தில் சோப்பு போட்டு தாடியை மழிக்க ஆரம்பித்த போதும் மீசையை மழிப்பதா என்ற குழப்பம். ஆனால் கடைசியில் புத்தாண்டு சபதம் என முடிவெடுத்துவிட்டோம் இனி பின்வாங்கக்கூடாது என்ற முடிவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு மீசையிலும் கத்தியை வைத்து ஒரு பாதி மீசையை நீக்கிவிட்டேன்.

கண்ணீர் வராத குறைதான். ஒரு பக்கம் மீசையில்லாமல் ஒரு பக்கம் மீசையுடன் என் முகம் என்னையே பார்த்து சிரித்தது. அடடா தப்பு செய்து விட்டோமே என்று என்னையே நொந்துக்கொண்டு அடுத்த பகுதி மீசையையும் மழித்து, முகம் கழுவி முகத்தை பார்த்தால். அய்யோ, இது என் முகமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
திரும்ப திரும்ப முகத்தை ஒரு பத்து நிமிடமாவது பார்த்துக்கொண்டிருந்தேன். ம்ம்.. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன செய்ய என்று நொந்துக்கொண்டே வெளியில் வந்ததும் என்னை பார்த்த என் மனைவிக்கு கோபமும், சிரிப்பும். ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. எதற்காக மீசையை எடுத்தீர்கள் என ஒரு திட்டு. உங்களை பார்க்கவே சகிக்கவில்லை என்று ஒரு முறைப்பு, குழந்தைகளை கூப்பிட்டு என்னை வேடிக்கை பொருளாக்கி எல்லோரும் கேலி பேச ஆரம்பித்துவிட்டனர். என் சின்னப்பெண் அப்பா உங்களை பார்த்தால் ..... என்று இடைவெளி விட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். இப்படியாக என் புத்தாண்டு சபதம் ஒரு மிகப்பெரிய தியாகத்துடன் ஆரம்பித்து இன்றோடு ஐந்தாவது நாள். ஒரு சிலர் நல்லா இருக்கு என்கின்றனர். ஒரு சிலர் மீசை இருந்தால் தான் அழகு என்கின்றனர் ஒரே குழப்பத்தில் மீண்டும் மீசை வைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தவித்துக்கொண்டிருக்கிறேன். மீசை வைத்தால் புத்தாண்டு சபதம் என்ன ஆவது என்ற யோசனை வேறு. யாராவது வந்து உதவுங்களேன்.

நான் கூப்பிடும் அன்பர்கள்:
அய்யனார்
கீதா சாம்பசிவம்
சித்தார்த்
வேதா