Saturday, January 05, 2008

ஒரு மீசையின் கதை


மீசைக்கு என்ன பெருசா கதை இருக்கப்போகுதுன்னு எப்பவும் போல தமிழ் பயணி சிவா முணுமுணுப்பது லேசா காதில் விழுகிறது. அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை மீசைக்கும் கதை இருக்குங்கறது.

முதலில் இந்த கதையை ஏன் எழுதணும்ங்கறதெ சொல்லிடறேன். நம்ம சைலஜா இல்லே சைலஜா அதாங்க மைபா புகழ் இன்னும் என்னென்னமோ புகழ். அவங்க சும்மா இல்லாமெ புத்தாண்டு சபதம் என ஒரு பதிவு போட்டு ஒற்றை வரியிலேயே காலத்தை ஓட்டிக்கிட்டிருக்கும் என்னையும் அதில் இழுத்துவிட்டுட்டாங்க. சரி மாட்டிகிட்டோம் என்னடா செய்வது என யோசனையில் இருக்கும் போது தான் இந்த மீசை கதையை எழுதும் எண்ணம் தோன்றியது.

சின்ன வயதிலிருந்தே கருமையான மீசைகளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு ஆசை. நாமும் பெரியவனாகும் போது இப்படி மீசை வைக்க வேண்டும் என்று. அந்தக் காலத்து சினிமாக்களில் எம்ஜியார், சிவாஜி, ஜெமினி முதலிய கதாநாயகர்களின் மீசையை நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரு கோடு இழுக்கப்பட்டது போல இருக்கும். புராணப்படங்களில் அவர்களது மீசை லேசாக முனையில் வளைந்திருக்கும். ஒரு சில படங்களில் மட்டும் கொஞ்சம் கத்தையாக இருக்கும் உதாரணமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு இருப்பதை போல.

இவர்களுக்கு இப்படி என்றால் வில்லன்களுக்கு எப்பவும் கொடுவாள் மீசைதான். வில்லனென்றாலே கொடுவாள் மீசை இருக்கவேண்டும் என்ற சட்டம் போல. நிஜ உதாரணம் வீரப்பன். இது போலவே காவல்துறையை சேர்ந்தவர்களுக்கும். இப்பொழுதும் காவல்துறையினர் என்றாலே கம்பீரமான கொடுவாள் மீசை இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். தேவாரம் போன்றவர்கள். மாபோசி போன்றவர்களின் மீசை ஒரு தனி வகை.

மீசையினால் புகழ்பெற்றவர்கள் பலர். மீசை என்றவுடன் நமக்கு உடனே நினைவுக்கு வருபவர்கள் வித்தியாசமான மீசை வைத்திருந்த ஹிட்லர், சார்லி சாப்ளின்.

கமலஹாசன் முதல் முதலில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தப்பொழுது அவரது மீசை புதிய வடிவில் அடர்த்தியாக முனை மட்டும் கொஞ்சமாக தொங்குவது போல இருக்கும். கமலின் மீசையை பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மீசை அரும்ப ஆரம்பித்தவுடன் கமல் போல மீசை வைக்கவேண்டும் என்ற முடிவை எடுத்துவிட்டேன். மீசை விரைவில் வளரவேண்டும் என தினமும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருப்பேன். தலைமுடியும் அதே போல இருக்கவேண்டும் என்றும். ரஜினியின் மீசை மீது எனக்கு இதுவரை எந்த ஆர்வமும் ஏற்படவில்லை. அதில் ஈர்ப்பும் இல்லை என்பது என் கருத்து. ஏன்னா அவரது தலைமுடியே மீசையை மறக்கடிக்க செய்துவிடுகிறது.

ஒரு வழியாக சில வருடங்களில் மீசை அடர்த்தியாக வளர்ந்ததும் கமலை போலவே மீசையையும் மாற்றியாகிவிட்டது. இந்த நேரத்தில் கமல் மீசையை எடுத்துவிட்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றாலும் நான் எனது மீசையின் அமைப்பை மாற்றாமல் அப்படியே தொடர்ந்தேன். இப்படியாக தொடர்ந்த என் மீசையை வாரத்திற்கு ஒரு நாள் சரியாக்குவேன். நடுவில் ஒரு தலை ராகம் படம் வந்தபோது சங்கரை பார்த்து சில காலம் தாடி வளர்க்க ஆரம்பித்தேன். இப்ப மீசையும் தாடியும் சேர்ந்த கலவையாக மாறிவிட்டது. திருமணம் வரை தாடியுடன் தொடர்ந்தேன்.அந்த தாடிக்காரன் என்னும் அளவிற்கு அடையாளம் ஏற்பட்டுவிட்டது. பெண்பார்க்க போகும் போதும் அதே தாடியுடன் தான் போனேன். நான் பார்த்த நான்கு பெண்களுக்கும் என்னை பிடித்து விட்டது என்பது வேறு விசயம் என்றாலும் ஒருத்தியை தான் திருமணம் செய்ய முடிந்தது.(தப்பித்தேன்)

இப்பொழுது ஒரு பெரிய பிரச்சினை வந்துவிட்டது. கல்யாணம் அன்று தாடியை மழிக்கவேண்டும் என்று என் தந்தையார் கட்டளை இட்டு விட்டார். வேறு வழி தாடியை எடுத்துவிட்டேன். ஆனால் மீசையை எடுக்கவில்லை.
அது தானே நமக்குஅழகு (?)

திருமணத்திற்கு பிறகு தாடி வளர்க்கவில்லை. மீசை மட்டும். அதை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சீர் செய்வேன். இப்படியாக காலம் போய்க்கொண்டிருக்கும் போது தான் அந்த நாள் வந்தது
.
அன்று காலை முகம் மழிக்க கண்ணாடியில் பார்க்கும்பொழுது மீசையில் ஒரு மண் நிறத்தில் முடி ஒன்று. அதை உடனே பிடுங்கி எடுத்து விட்டேன். ஒரு வாரம் கழித்து பார்த்தால் இன்னொரு இடத்தில் இன்னும் வெளிர்நிறத்தில் ஒரு முடி.அதையும் பிடுங்கிவிட்டேன்.

பிறகு வந்த நாட்களில் அப்பப்ப ஒவ்வொரு முடி கண்ணுக்கு தெரிவதும் அதை பிடுங்குவதுமாக இருந்தேன். ஆனால் சில நாட்கள் கழித்து நாலைந்து முடிகளாக லேசான வெண்மை நிறத்துடன் முடிகள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. ஆமாம் மீசை நரைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை புரிந்துக்கொள்ள எனக்கு இவ்வளவு நாட்கள். இனி பிடுங்க முடியாது என்பதால் கத்திரியை வைத்து குறிப்பிட்ட வெண்முடிகளை வெட்ட ஆரம்பித்தேன். இந்த மாதிரி வெட்டும்பொழுது அருகிலிருக்கும் கருப்பு முடிகளும் சில சமயம் வெட்டப்படுவதால் மீசையில் ஆங்காங்க சிறு சிறு இடைவெளிகள்.

என்ன செய்யலாம் என முடித்திருத்துபவரிடம் ஆலோசனை கேட்டேன். மீசையின் அடர்த்தியை குறைத்து சிறியதாக்கி விடலாம் என்ற யோசனையை அவர் சொன்னார். வேறு வழி. அவர் யோசனைப்படியே மீசை சிறிதாக்கப்பட்டது. ஆனாலும் ஒரு பத்து நாட்களுக்குள் அது வளர்ந்து விடும்பொழுது வெள்ளை முடிகள் மட்டும் எடுப்பாக கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து என்னை ஏளனத்துடன் ஒரு பார்வை பார்க்க ஆரம்பித்தன.

அப்பொழுது தான் என் நண்பர் ஒரு யோசனை சொன்னார். பேசாமல் மை அடித்துவிடுங்கள். எப்பொழுதும் கருமையாக இருக்கும் என. ஆனால் எனக்கென்னவோ இந்த மை அடிப்பதில் உடன்பாடில்லை. கல்யாணம் செய்து குழந்தைகளும் பிறந்துவிட்டனர். இனி எதற்கு மைனராட்டம் கருமை மீசை என தோன்றியதால் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டேன். ஆனாலும் கண்ணாடியில் ஒரு சில வெள்ளை முடியுடன் மீசையை பார்க்கும் போதெல்லாம் ஒரு லேசான சோகம் எட்டிப்பார்க்கும்.

என்ன செய்வது என்ற பலநாள் யோசனையில் போன மாதம் திடீரென ஒரு திட்டம் தோன்றியது மீசையை எடுத்துவிடலாம் என.

ஆனால் மனம் கேட்கவில்லை. இவ்வளவு நாட்கள் வைத்த மீசையை எடுப்பதா என்றும் மீசையை எடுத்து விட்டால் என் முகம் எப்படி இருக்கும் என்றும் பல யோசனைகள். கண்ணாடி முன் நின்று கையால் மீசையை மறைத்து பார்த்து பலவாறு முயற்சித்தும் மீசையில்லாமல் என்னை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.
ஆனால் வெண் முடிகள் அதிகமாக அதிகமாக இந்த யோசனையும் வலுப்பெற்றுக்கொண்டே வந்தது.

இந்த நேரத்தில் 2007 முடிந்து 2008 ஆரம்பிக்கும் புத்தாண்டு நாள் விழா வீட்டில் கொண்டாடப்பட்டது. பல்வேறு விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு விளையாட்டு கணவர்களுக்கு மனைவிமார் புடவை கட்டி விடுவது. என் மனைவி எனக்கு வேகமாக புடவை கட்டி ஜெயிக்க முடியவில்லை என்றாலும் புடவைக்கட்டப்பட்ட என்னை எல்லோரும் அண்ணா நீங்கள் புடவை கட்டினாலும் அழகாகவே இருக்கிறீர்கள் என உசுப்பேத்திவிட்டுவிட்டனர். அன்று அதிகாலை வரை விழா நடந்தாலும் என்மனமோ அவர்கள் சொன்னதையே நினைத்துக்கொண்டிருந்தது.

அடுத்தநாள் எழுந்து குளியலறை போய் கண்ணாடியை பார்த்ததும் உடனே இரவில் நடந்த நிகழ்ச்சி திரைப்படமாக மனதில். ஏன் நான் புத்தாண்டு சபதமாக மீசையை எடுக்கக்கூடாது என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றியது. ஆனாலும் மனம் ஒப்பவில்லை. முகத்தில் சோப்பு போட்டு தாடியை மழிக்க ஆரம்பித்த போதும் மீசையை மழிப்பதா என்ற குழப்பம். ஆனால் கடைசியில் புத்தாண்டு சபதம் என முடிவெடுத்துவிட்டோம் இனி பின்வாங்கக்கூடாது என்ற முடிவை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டு மீசையிலும் கத்தியை வைத்து ஒரு பாதி மீசையை நீக்கிவிட்டேன்.

கண்ணீர் வராத குறைதான். ஒரு பக்கம் மீசையில்லாமல் ஒரு பக்கம் மீசையுடன் என் முகம் என்னையே பார்த்து சிரித்தது. அடடா தப்பு செய்து விட்டோமே என்று என்னையே நொந்துக்கொண்டு அடுத்த பகுதி மீசையையும் மழித்து, முகம் கழுவி முகத்தை பார்த்தால். அய்யோ, இது என் முகமா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
திரும்ப திரும்ப முகத்தை ஒரு பத்து நிமிடமாவது பார்த்துக்கொண்டிருந்தேன். ம்ம்.. எல்லாம் முடிந்து விட்டது இனி என்ன செய்ய என்று நொந்துக்கொண்டே வெளியில் வந்ததும் என்னை பார்த்த என் மனைவிக்கு கோபமும், சிரிப்பும். ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. எதற்காக மீசையை எடுத்தீர்கள் என ஒரு திட்டு. உங்களை பார்க்கவே சகிக்கவில்லை என்று ஒரு முறைப்பு, குழந்தைகளை கூப்பிட்டு என்னை வேடிக்கை பொருளாக்கி எல்லோரும் கேலி பேச ஆரம்பித்துவிட்டனர். என் சின்னப்பெண் அப்பா உங்களை பார்த்தால் ..... என்று இடைவெளி விட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். இப்படியாக என் புத்தாண்டு சபதம் ஒரு மிகப்பெரிய தியாகத்துடன் ஆரம்பித்து இன்றோடு ஐந்தாவது நாள். ஒரு சிலர் நல்லா இருக்கு என்கின்றனர். ஒரு சிலர் மீசை இருந்தால் தான் அழகு என்கின்றனர் ஒரே குழப்பத்தில் மீண்டும் மீசை வைக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் தவித்துக்கொண்டிருக்கிறேன். மீசை வைத்தால் புத்தாண்டு சபதம் என்ன ஆவது என்ற யோசனை வேறு. யாராவது வந்து உதவுங்களேன்.

நான் கூப்பிடும் அன்பர்கள்:
அய்யனார்
கீதா சாம்பசிவம்
சித்தார்த்
வேதா

17 comments:

said...

//
ஒரு பாதி மீசையை நீக்கிவிட்டேன்.

கண்ணீர் வராத குறைதான்
//
:(

நல்லா எழுதியிருக்கீங்க!

said...

//
என் புத்தாண்டு சபதம் ஒரு மிகப்பெரிய தியாகத்துடன் ஆரம்பித்து
//
தியாகி பென்சனுக்கு அப்ளை பண்ணலாமே!!

said...

//
ஏன் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை. எதற்காக மீசையை எடுத்தீர்கள் என ஒரு திட்டு.
//
அதுக்கப்புறம் நடந்ததை (விழுப்புண்களை) மறைக்கிறீங்களே!!!!!

said...

அண்ணா எம்புட்டு சோகம்.

அவ்வ்வ்வ்வ்வ்...

Anonymous said...

நான் இப்பவும் சொல்றேன்.. மீசையில்லாம நீங்க நல்லா தான் இருக்கீங்க... பேசும் படம் கமல் மாதிரி..

said...

நன்றி சிவா

அதற்கப்புறம் நடந்ததையும் விரைவில் சொல்கிறேன்.

said...

அன்னிக்குப் பாத்த, மீசை வெச்ச ராசாவை இனி எப்ப பாப்பேன்! :-))

said...

Rajini naditha 'Thillu Mullu' padam paartheengalla ?

said...

புத்தாண்டு சபதமா?

மீசை வச்ச ராசா
இப்போ மீசை மேல ஆசை வச்ச ராசா ஆகிட்டாருன்னு புரியுது.மீசையை தியாகம் பண்ணி பிரயோசனமில்லை. (மீசை மேல)ஆசையை 'தியாகம்' பண்ணணும். முடியலைன்னா அந்த தியாகத்தை தியாகம் பண்ணிடுங்க;)

said...

// நான் பார்த்த நான்கு பெண்களுக்கும் என்னை பிடித்து விட்டது என்பது வேறு விசயம் என்றாலும் ஒருத்தியை தான் திருமணம் செய்ய முடிந்தது.(தப்பித்தேன்)//

மீசை நரைச்சாலும் ஆசை நரைக்கலைங்கறது இது தானா? :)))))))))))))

அது சரி, ஏற்கெனவே ஸ்வாதி கூப்பிட்டு, சபதம் எடுக்கப் போவதில்லைனு, சபதம் எடுத்துட்டேனே, பத்தாது? :P
இன்னும் இந்த ரசிகன் வேறே மொக்கை போட அழைத்திருக்கிறார். :P

said...

தியாகி பென்ஷனுக்கு சிபாரிசு வேணுமா? :)))))))

said...

மீசை எடுப்பதை கூட இவ்வளோ அழகாக சொல்லி இருக்கீங்க, அருமை.

பழய நினைவுகளை எல்லாம் கிளரிவிட்டு விட்டீங்க.

said...

ஆசை நரைத்தாலும் மீசை நரைக்கவில்லை என்று ஒரு பழமொழி உண்டு. அது போல மீசை நரைத்தாலும் மீசை வைக்கும் ஆசை நரைக்கவில்லை என்று நண்பர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

பின்னூட்டம் அளித்த சிவா,ஜேக், சித்தார்த், காசி, அதியமான், சிந்தாநதி, வேதா, கீதா, குசும்பன் அனைவருக்கும் இனி பின்னூட்டம் இட போகும் நண்பர்களுக்கும் மிகவும் நன்றி.

said...

அன்பு சிவா

விழுப்புண்கள் பற்றிய பதிவு விரைவில்

said...

//
மஞ்சூர் ராசா said...
அன்பு சிவா

விழுப்புண்கள் பற்றிய பதிவு விரைவில்

//
போடுங்க படிச்சிட்டு எச்சரிக்கையா இருந்துக்கறோம் / நடந்துக்கறோம்.
:-)))

said...

சூப்பர் யோசனை சொல்லவா?பேசாம ஒட்டு மீசை வைத்துக் கொள்ளவும்...அழகுக்கு அழகு....புத்தாண்டு சபதம் நினைவுக்கு வரும்போது ஒட்டு மீசையை எடுத்து விட்டு கண்ணாடியில் பார்த்தால் போயிற்று...
அருணா

said...

நரைத்தாலும் நரைக்காவிட்டாலும் மீசை தான் ஆண்களுக்கு அழகு அண்ணா! வீரப்பனை கூட மறக்காமல் இருக்க அவனுடைய மீசை தான் காரணம். பாரதியார்,ஹிட்லர், மபொசி, நக்கீரன் கோபால், தேவாரம் என்று மீசையைக் கொண்டு அடையாளம் காட்டப்படுபவர்கள் பலர் அண்ணா!
:)
அன்புடன்
சுவாதி