Wednesday, November 08, 2006

ஒரு மருத்துவமனை விஜயம்

நேற்று இரவு சுமார் பத்து மணி இருக்கும். சாப்பிட்டுவிட்டு ஒரு நடை போகலாம் என்று நானும் நண்பரும் கிளம்பினோம். வீட்டுக்கு அருகில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் இருக்கிறது. அங்கு யாரும் அதிகம் வருவதில்லை. அதனால் அடிக்கடி அங்கு போய் பேசிக்கொண்டே நடப்போம். ஒரு முப்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வீட்டுக்கு வரும் வழியில் உடம்பில் லேசான அரிப்பு! வீடு நெருங்க நெருங்க அரிப்பு அதிகமாகி உடல் முழுவதும் பரவி விட்டது. வீட்டில் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு மனைவியும் அவரது தங்கையுடன் அருகிலிருக்கும் பூங்காவுக்கு நடை பழக போயிருந்தார்கள். நண்பர் அப்படியே வீட்டுக்கு போகிறேன் என்று சொல்லி போய்விட்டார். குழந்தைகள் வீட்டினுள் நல்ல தூக்கத்தில். வீட்டு சாவி கொண்டுப் போகாமல் போய்விட்டேன். மணி அடித்தும் தட்டியும் குளிர்சாதனம் இயங்கி கொண்டிருந்ததால் குழந்தைகளுக்கு கேட்கவில்லை. மிகவும் முடியாமல் வீட்டிற்கு வெளியே படிக்கட்டில் உட்கார்ந்தேன். ஆனாலும் எதுவும் குறைந்தபாடில்லை. தலைச் சுற்றல், அரிப்போ தாங்க முடியவில்லை. உட்காரவும் முடியவில்லை. மெதுவாக எழுந்து எதிர் வீட்டு நண்பரின் வீட்டுக்கதவை தட்டினேன். அவர் கதவை திறந்ததும் முடியாமல் விழுந்துவிட்டேன். எனக்கு சுய நினைவு போய்விட்டது. (இதற்கு மேல் அவர்கள் பின்னர் சொன்னது) அவர்களுக்கு பதட்டமும் பயமும் ஒரு சேர பற்றிக்கொண்டது. வீட்டில் வேறு யாரும் இல்லாததால் அவரும் அவர் மனைவியும் என்னை மிகவும் சிரமப்பட்டு சோபாவில் படுக்க வைத்திருக்கிறார்கள்.
அந்த அம்மா ஒரு செவிலித்தாய் (நர்ஸ்). உடனே நாடி துடிப்பு (பல்ஸ்), இரத்த அழுத்தம் பார்த்திருக்கிறார்கள். அவை எதுவுமே சரியாக இல்லை. துடிப்பு சுத்தமாக தெரியவில்லை. மிகவும் பயந்துவிட்டார்கள். எங்கள் வீட்டிலோ யாரும் இல்லை.

நண்பர் மிகவும் பயந்து போய் அருகிலிருந்த உணவகத்தில் சிலரை கூப்பிட்டிருக்கிறார். ஒரு சிலர் வந்து பார்த்து விட்டு தங்கள் வேலையை பார்க்க போய்விட்டார்கள். வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று நினைத்த அவருக்கு யாரும் உதவ அந்த சமயத்தில் கிடடக்கவில்லை. பிறகு மேல் வீட்டு நண்பரை கூப்பிட்டிருக்கிறார். அவர் உடனே வந்து எனது தம்பிகளை தொலைபேசி மூலம் அழைத்திருக்கிறார். எல்லோரும் பதட்டத்துடன் வந்திருக்கிறார்கள். மனைவியும் வந்துவிட்டாள். இப்பொழுது அந்த செவிலி எனது முகத்தில் தண்ணீர் தெளித்திருக்கிறார்கள். லேசாக நினைவு திரும்பியது. மனைவி ஒரே அழுகை. எனக்கு சிறிதளவு நினைவு வர தொடங்கியிருந்தது. அந்த செவிலி மறுபடியும் சோதனை செய்தார்கள். இப்பொழுது எல்லாமெ ஓரளவுக்கு சரியான நிலைக்கு திரும்பியிருந்தது.

எல்லோரும் மருத்துவமனைக்கு உடனே போகலாம் என்றார்கள். நான் வேண்டாம் சரியாகிவிடும் என்றேன். ஆனால் எதிர் வீட்டு நண்பரும், அண்ணி, தம்பிகளும் கட்டாயப்படுத்தி கூட்டிக்கோண்டு போனார்கள்.

இங்குள்ள மருத்துவமனைகளில் இரவு நேரத்தில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நண்பருக்கு ஏற்கனவே அனுபவம் இருக்கும் போல. தள்ளு நாற்காலியை கூப்பிடுங்கள், அப்பொழுது தான் வேகமாக மருத்துவரை பார்க்க முடியும் என்றார். அதன்படியே தள்ளு நாற்காலியும் வந்தது. அதில் என்னை உட்கார வைத்து பின்னர் பதிவு செய்து மருத்துவரின் அறைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு ஏராளமான நோயாளிகள் அமர்ந்திருந்தார்கள். நான் தள்ளு நாற்காலியில் இருந்ததால் ஒரு பத்து நிமிட காத்திருத்தலுக்கு பிறகு மருத்தவரை காண வாய்ப்பு கிடைத்தது. மருத்துவர் நண்பரிடமும், மனைவியிடமும் விசாரித்து விட்டு மருத்துவ காகிததில் ஏதோ எழுதிக்கொடுத்து வேறு ஒரு அறைக்கு அனுப்பினார். அங்கு மீண்டும் இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, மாரடைப்புக்கான சோதனைகள் செய்தார்கள். அந்த சோதனை அறிக்கையை மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அவர் அதை பார்த்து விட்டு வேறு ஒரு அறைக்கு கண்காணிப்பிற்காக (observation) அனுப்பினார். அங்கிருந்த அத்தனை படுக்கைகளும் நிரம்பியிருந்தன. ஒரு இருபது நிமிடங்கள் கழித்து ஒரு படுக்கை காலியானது அதில் என்னை படுக்க வைத்து சத்து நீர் (குளுகோஸ்) ஏற்ற தொடங்கினார்கள். பரிசோதனைக்காக இரத்தமும் எடுத்தார்கள். குளிர் சாதன அறையாக இருந்ததால் மிகவும் குளிர்ந்தது. ஒரு போர்வையை கேட்டு வாங்கி போர்த்தினாள் மனைவி. எனக்கு நேர் மேலே குளிர்சாதனத்தின் சிறு சன்னல் இருந்ததால் நான் முகத்தையும் மூடினேன். உடனே என் மனைவி பயந்துவிட்டாள். எனக்கு பயங்கரமான களைப்பில் தூக்கம் கண்ணை சொக்கவைத்தது. பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை என் மனைவி என்னை கூப்பிட ஆரம்பித்தாள். ரொம்பவும் பயந்துவிட்டாள். கொஞ்ச நேரம் சும்மாயிரு, தூங்குகிறேன் என்று அதட்டியதும் பயத்துடன் அமைதியாகிவிட்டாள். வேறு சில நண்பர்களும் வந்திருந்ததால், அடுத்த நாள் வேலையின் காரணமாக எதிர்வீட்டு நண்பரை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவர் போக விருப்பமேயில்லாமல் போய் இருக்கிறார்.

சுமார் மூன்று மணிநேரம் கழித்து எல்லா சோதனைகளும் முடிந்து பார்த்த மருத்துவர் எல்லாம் சரியாக இருக்கிறது. ஒன்றும் பயப்பட தேவையில்லை. ஏதோ ஒரு ஒவ்வாமை (அலர்ஜி) என்று சொல்லி மாத்திரைகள் கொடுத்தார். பிறகு நண்பரின் வண்டியில் எல்லோரும் வீட்டுக்கு திரும்பினோம். மணி இரவு மூன்று மணிக்கு மேல் ஆகிவிட்டது. எதிர் வீட்டு நண்பர் அவ்வளவாக பழக்கம் இல்லாமல் இருந்தாலும் அவசரத்தில் மிகவும் உதவியதை மறக்க முடியவில்லை. மேல்வீட்டு நண்பரும் தக்க சமயத்தில் வந்து உதவினார். பின்னர் வந்த நண்பர்களும் தூங்காமல், சாப்பிடாமல் திரும்ப வீடு வரும் வரை பொறுமையாக இருந்தது மனதை ஏதோ செய்தது.

காலையில் தான் குழந்தைகளுக்கு சொன்னேன். ஒரே அழுகை.

மிகவும் களைப்பாக இருந்ததால் அலுவலகத்திற்கு விடுமுறைக்கு சொல்லிவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.


மனிதநேயம் இன்னும் அழிந்துவிடவில்லை என்பதற்கு எனக்கு நடந்த இந்த நிகழ்ச்சி ஒரு சின்ன உதாரணம்.

5 comments:

said...

ஒவ்வாமை எதனால் ஏற்பட்டது என்று கண்டுபிடித்தார்களா ? ஏதெனும் விஷக்கடியாக இருக்குமோ ? முழுவதும் உடல்நலம் திரும்ப இறையருளை வேண்டுகிறேன்.

said...

இப்போதான் படித்தேன்..அதிர்ச்சியா இருக்கு மஞ்சூர்..முற்றிலும் நலமா இப்போ? இறைவன் அருளில் எல்லாம் சரியாகும்.
ஷைலஜா

said...

மஞ்சூர் ராசா
பாத்த்துங்க.உடல் நலத்துடன் விளயாடாதீங்க.
"மனித நேயம் இன்னும் அழிந்துவிடவில்லை"-ஆமாம்.

Anonymous said...

அன்பு மஞ்சூர் அண்ணே! விரைவில் பூரண சுகமடைய கர்த்த்ரிடம் பிரார்த்தனை செய்கிறேன். நானும் பிறந்து சிறிது நாள்களில் இருந்து..பள்ளி கல்வி முடியும் வரை...குந்தா Lower and Upper Camp பகுதியில் தான்..இப்போது கோவை.

said...

அன்பு நண்பர்கள் மணியன், ஷைலஜா, குமார், அகத்தீ அனைவருக்கும் மிக மிக நன்றி.

தற்போது உடல் நலம் நன்றாக உள்ளது.

விஷக்கடியாக இருக்கலாம் என மருத்துவர் சொன்னார்.

உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நான் நலமாக இருக்கிறேன்.

மிகவும் நன்றி.