Monday, December 11, 2006

அழியாத கோலங்கள் - 1

அப்ப நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதுசு. ஐந்தாம் வகுப்பு வரை கீழ் நிலை பள்ளி(எலிமெண்டரி ஸ்கூல்). பிறகு அந்த பள்ளிக்கு அடுத்து இருக்கும் உயர்நிலைப் பள்ளி ஒரு நாள் ஆறாம் வகுப்பில் ஆசிரியர் வராததால் நாங்க எல்லோரும் வழக்கம் போல கத்திக்கொண்டும் குறும்பு செய்துக்கொண்டும் இருந்தோம்.

பக்கத்து அறை எட்டாம் வகுப்பு. அங்கு ஆஙகில பாடம் நடந்துக்கொண்டிருந்தது. நடத்தியவர் தலைமை ஆசிரியர். நாங்கள் கத்தியது அவருக்கு மிகவும் கோபத்தை உண்டாக்கிவிட்டது. உடனே எங்கள் வகுப்புக்கு வந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். சாதாரணமாகவே அந்த தலைமை ஆசிரியர் மீது எல்லோருக்கும் பயமும் மரியாதையும் இருக்கும். அவரை பார்த்து நாங்களும் பயந்து அமைதியாகிவிட்டோம். அவர் ஒரு நிமிடம் யோசித்துவிட்டு எங்கள் அனைவரையும் எட்டாம் வகுப்பிற்கு போய் உட்கார சொன்னார்.

வகுப்புகள் கொஞ்சம் பெரிதாக இருப்பதால், பெஞ்சுகளில் வகுப்பு பையன்கள் இருக்க. நாங்கள் முன்னால் தரையில் அமர்ந்தோம். எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தார். எங்களுக்கு அவர் என்ன சொல்கிறார் என்று ஒரு எழவும் புரியவில்லை. வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் திடீரென மேஜைமீதிருந்த தனது சாவிக்கொத்தை எடுத்து எட்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டி "வாட் ஈஸ் திஸ்?" என்றார். யாரும் பதில் கூற வில்லை. இரண்டு மூணு பேரிடம் கேட்டார். எல்லோரும் திருதிருவென முழித்தார்கள். உடனே தரையில் உட்கார்ந்திருந்த எங்களைப் பார்த்து "வாட் ஈஸ் திஸ்? என்று கேட்க, நான் உடனே எப்பவும் போல முந்திரிக்கொட்டயாக எழுந்து "சார் திஸ் ஈஸ் சாவி!" என்றேனே பார்க்கலாம்.

வகுப்பறையில் ஓவென்ற சிரிப்பு....

அதற்கு பிறகு பள்ளி இறுதி வகுப்பு வரையும் அவர் என்னைப் பார்க்கும்போது புன்னகைப்பதும் எனக்கும் அந்த ஞாபகம் வருவதும் தவிர்க்க முடியாத விசயமாகிவிட்டது.

2 comments:

Anonymous said...

u r a big mandu

said...

அன்பிற்கினிய மஞ்சூர் ராசா,

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் தொடர்ந்து உங்களின் வலைப்பூ படிப்பது வழக்கம். இன்று உங்கள் வலைப்பூ முழுவதுமாய் படித்து முடித்தேன். உங்கள் எழுத்து என்னை கவர்ந்துள்ளது. சம்பவங்களை அப்படியே வார்த்தைகளால் படம் பிடித்து தரும் கைவண்ணம் போற்றுகிறேன். உங்களிடம் தமிழன்னை சந்தோஷப்படுகிறார்கள். தொடர்ந்து நல்ல பல படைப்புகள் தமிழ் இலக்கியத்து சமர்ப்பணம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இறைவன் உங்களையும் உங்கள் தமிழ்ப்பணியையும் ஆசீர்வதிக்க பிரார்த்திக்கிறேன்.

பாசமுடன்
என் சுரேஷ் சென்னை