Saturday, December 23, 2006

அழியாதக் கோலங்கள் - 2

எங்க ஊரெ சுத்தி மலைகளும், தேயிலை தோட்டங்களும், கொஞ்சம் தூரம் சென்றால் காடுகளும் இருக்கும். எனக்கு சின்ன வயசிலிருந்தே காடுகளின் சுற்றுவதில் ஒரு அலாதியான மகிழ்ச்சி. எனக்கு நினைவு தெரிந்து நான் காடுகளில் நண்பர்களுடன் சுற்ற தொடங்கிய போது எட்டு ஒன்பது வயதிருக்கும். அதற்கு முன்பும் அம்மாவோடு காடுகளில் சுள்ளி பொறுக்க போயிருக்கிறேன்.

மாலை நான்கு மணிக்கு பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து பையை தூக்கிப்போட்டுவிட்டு, கிடைக்கும் வரக்காப்பியையும் ஒரு மடக்கு குடித்துவிட்டு காட்டை நோக்கி படையெடுப்பது அடிக்கடி நடக்கும்.

எங்க ஊருக்கு அருகிலுள்ள காட்டில் குரங்குகள் அதிகம் இருப்பதால் கொரங்குப்பிள்ளை சோலை என்றே அதற்கு பெயர். அது என்னவோ தெரியவில்லை பெரிய மிருகங்கள் அவ்வளவாக அதிகம் பார்க்க வாய்ப்பு இருப்பதில்லை. ஒரே ஒரு முறை புலியை பார்த்திருக்கிறோம்.
மற்றப்படி காட்டாடு, காட்டெருமை, குள்ளநரி, முயல், காட்டுக்கோழி, முள்ளம்பன்றி, கீரி, பாம்புகள், மான் என இப்படித்தான்.

பொதுவா சனி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே நாங்கள் காட்டு வாசிகள் ஆகிவிடுவோம். ரொம்ப தூரம் போவோம். அதாவது காலையில் வீட்டில் கேழ்வரகு களியை சாப்பிட்டுவிட்டு போனால் மாலை வரை காடுகளில் சுற்றுவதும், பழங்கள் பறிப்பதும், காட்டாறில் குதித்து நீச்சல் அடிப்பதும், காட்டுக்கோழிகள், முயல்களை துரத்துவதும், ஆற்றில் நண்டு பிடிப்பதும் என எதாவது ஒன்று நடந்துக்கொண்டே இருக்கும்.

எங்கள் குழுவில் மொத்தம் நாலு பேர்.... மணிகண்டன், தேவன், சதாசிவன், நான். இதில் மணிகண்டனும் நானும் மரமேறுவதில் கொஞ்சம் கில்லாடிகள். மற்ற இருவரும் கொஞ்சம் பயப்படுவார்கள். எனக்கு எந்தெந்த இடத்தில் எந்தெந்த பழமரம் இருக்கு என்பது அத்துப்படி. அதனால் நண்பர்கள் என்னையே தொடர்வார்கள்.

நாவல் பழ காலத்தில் சில நாட்களுக்கு முன்பே போய் மரங்களை நோட்டமிட்டுவிட்டு வந்துவிடுவோம். காய்களை பார்த்து எப்பொழுது பழமாகும் என ஒரு கணக்கு வைத்து சரியாக அந்த நாளில் அங்கு போவோம்.பொதுவாக மலைக்காடுகளில் கிடைக்கும் நாவல் பழங்கள் சிறியதாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும். சமவெளியில் அந்த சுவையை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை. சில நாவல் மர இலை குருத்துகளும் சுவையாக இருக்கும்.

ஒரு நாள் இப்படித்தான் நான், மணிகண்டன், தேவன் மூன்று பேரும் ஒரு நாவல் மரத்தில் ஏறி பழம் பறித்து சாப்பிட்டுக்கொண்டும். பைகளில் நிரப்பிக்கொண்டும் இருந்தோம். திடீரென்று மணிகண்டனின் கத்தல்..... பயந்துபோய் அவனெ பாத்தா மரத்திலிருந்து கீழே புதரில் விழுந்து கிடந்தான். எனக்கு பயமும் பதட்டமும், தேவனை பார்த்தேன். அவனும் என்னை போலவே பதட்டத்தில். மணிகண்டான்னு குரல் கொடுத்தேன். அவன் புதரிலிருந்து சிரமப்பட்டு எழுந்து பக்கத்து மரத்தை பாக்க சொன்னான்.

திரும்பினால் அந்த மரத்தில் ஒரு மலைப்பாம்பு மெதுவாக நகர்ந்துக்கொண்டிருந்தது.

தேவன் அதற்குள் மரத்திலிருந்து இறங்கி்யிருந்தான். எனக்கு குதிப்பதற்கு பயம். கீழே விழுந்த மணிகண்டனும், தேவனும் பதட்டத்தில் என்னை அவசரப்படுத்துகிறார்கள். நானோ கை, கால் நடுங்க உதறல் எடுத்துக்கொண்டெ, குதிக்கலாமா, வேண்டாமான்னு.... பின்னெ .....நல்ல உயரம். முப்பது அடி இருக்கும்.

அப்புறம் என்ன... காலும், கையும் நடுங்க வேகவேகமாக இறங்கி, பாதியிலெயே புதருக்குள் குதித்து, கை, கால் எல்லாம் சிராய்ப்பு, ரத்தத்துடன் ஓட்டம்..... பத்து நிமிடம் ஓடியப்பின் மூச்சு வாங்க முன்னாலெ ஓடினவங்களெ பாத்தா, அவனுக கொஞ்ச தூரத்தில் இன்னொரு மரத்தில் ஏறிகிட்டு இருந்தானுக..... இந்த மணிகண்டன் விழுந்தும் கூட ஒண்ணுமே நடக்காதவன் போல மரம் ஏறுவதை பார்த்து அசந்துட்டேன்.

நான் மட்டும் விடுவேனா என்ன... ஓடிப்போய் தொத்திகிட்டேன்.

இளங்கன்று பயம் அறியாதுன்னு இதுக்குத்தான் சொன்னாங்களோ?

தொடரும்.

3 comments:

said...

நல்லா கொண்டாடி இருக்கீங்க :-))

said...

really nice. Good narration!

Anonymous said...

தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,

தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்


சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........

ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )

சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......

டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)