Wednesday, January 17, 2007

இப்படியும் ஒரு பொங்கல்எல்லோரும் பொங்கல் விழா எல்லாம் முடிஞ்சி சர்க்கரைப் பொங்கல் கரும்பு எல்லாம் சாப்பிட்டு சந்தோசமா இருக்கீங்க போலெ.

அட, பொங்கலெ பத்தி அவனவன் பதிவு எழுதறானே, நம்ம வீட்டு பொங்கலெ பத்தியும் எழுதலேன்னா எப்படின்னு தோணிச்சி.

பொங்கல் வாழ்த்துக்கள் ஒரு வாரமாவே வந்துட்டு இருந்ததாலெ இந்த தடவெ பொங்கல் நாள் மறக்கமுடியாமெ அப்படியே மனசிலெ பதிஞ்சிடிச்சி.

காலையில் எழுந்ததும் காப்பி போட்டு குடித்துக் கொண்டே தூங்கிகிட்டிருந்த மனைவிகிட்டெ பொங்கல் வாழ்த்துக்கள் சொன்னேன். "ம்ம்... சரி"... வாழ்த்துக்கள்.

"ஆமா இன்னிக்கி எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கப்போறோம்".

"ஏன் மாமா தூங்கிகிட்டிருக்கேனென்னு தெரியலெயா?" உங்களுக்கு இப்பத்தான் பொங்கலெ பத்தி கேக்கணுமா"

"எனக்கு இன்னிக்கி ஆபிஸ்லெ முக்கியமான வேலை இருக்கு, பொங்கல் எல்லாம் சாயங்காலம்தான்"

"என்ன நீ இப்படி சொல்லறே, எல்லோரும் காலையில் தானை குளிச்சி, புதுத்துணி போட்டு கொண்டாடுவாங்க"

"நீங்க இப்ப ஆபிசுக்கு போறிங்களா, இல்லையா?" தூக்க கலக்கத்தில் குரல் வலுக்கவும் எப்படியோ போகட்டும்னு அலுவலகம் கிளம்பிவிட்டேன்.

எப்பவும் போல அலுவலகம் வந்து கணினியை திறந்ததும். "அண்ணா, பொங்கல் வாழ்த்துக்கள்" "பொங்கல் சாப்பிட்டாச்சா" "நண்பரே பொங்கல் வாழ்த்துக்கள்" என ஒரே பொங்கலோ பொங்கல் தான்.

சரி நம்ம பொளப்பெ சொல்லி இவங்க மூடையும் கெடுக்க வேண்டாமேன்னு நினெச்சி, எல்லோருக்கும் வாழ்த்துகள் சொன்னேன்.

மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு தொலைபேசி, "என்ன பொங்கல் ரெடியாகிடுச்சா"

"ஏன் மாமா நா இப்பத்தானே ஆபிஸ்லெருந்து வர்றேன், இந்த பசங்களுக்கும் இன்னும் சாப்பாடு கொடுக்கலே, உங்களுக்கு பொங்கல்தான் முக்கியமா போச்சா"

"இல்லே அது வந்து ..... "

"சரி போனெ வைங்க, எனக்கு வேலை இருக்குது"

"சாப்பாடுக்கு வந்துடட்டுமா"

"நான் மெக்டொனால்டிலெருந்து எங்களுக்கு வாங்கிட்டு வந்துட்டேன்", உங்களுக்கு வேணும்னா தோசை போட்டு தர்றேன், வாங்க"

"தோசையா, இன்னிக்கி பொங்கல்ங்கறதெ மறந்துட்டெயா"

"அய்யோ, உங்க கூட தாங்க முடியலெயே",

"சரி சாயங்காலம் பொங்கல் பண்ணுவோம், இப்ப ஹோட்டல்லெயே சாப்பிட்டு வந்துடுங்க."

அலுவலக மேலாளரிடம் பொங்கல்னு சொல்லி ஒரு மணி நேரம் முன்அனுமதி கேட்டுட்டு நேரா வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் ஓட்டலில் போய் சாப்பாடு சாப்பிட்டு விட்டு (அங்கெ கொஞ்சமா சாஸ்திரத்துக்கு சக்கரை பொங்கல் கொடுத்துட்டாங்க) வீட்டுக்கு போனேன்.

சன் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மனைவி, நிமிர்ந்து பார்த்து
"என்ன மாமா, இன்னிக்கி சீக்கிரமா வந்துட்டீங்க"

"பொங்கல்!, அதான்."

என்னை ஒரு மாதிரியாக பார்த்த மனைவி, "சரி, சரி, வேலைக்காரி வந்துடட்டும், பாத்திரம் எல்லாம் கழுவாமெ அப்படியே இருக்கு, அவ வந்து கழுவி கொடுத்த பின்னாலெ பொங்கல் வைக்கறேன். சாயங்காலம் தானே எல்லோரும் வர்றாங்க"

"ம்ம்ம் சரி, சரி, குழந்தைங்க சாப்பிட்டாங்களா?"

"ஓ அப்பவே சாப்டாச்சே, இப்ப உள்ளே படிச்சிகிட்டிருக்காங்க"

"ஆமா, வடை செய்யறெயா"

"வடையா? பொங்கலுக்கு வடை யாராவது செய்வாங்களா?"

"இல்லே, செஞ்சா நல்லா இருக்குமேன்னு"

"சரி, சரி, செய்யறேன், கொஞ்சம் நேரம் பேசமெ இருங்க, இந்த நிகழ்ச்சி முடியட்டும்"

எனக்கும் களைப்பாக இருந்ததால் [ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்ட மயக்கம்(?!)] கொஞ்ச நேரம் படுக்கலாம்னு உள்ளே போனேன்.

பாத்திரங்களை கழுவும் சத்தம் கேட்டு எழும் போது மணி ஐந்தரை. அய்யோ அஞ்சரை ஆச்சேன்னு வேகமா எழுந்து ஹாலுக்கு போனேன். மனைவி எப்பவும் போல பொங்கல் நிகழ்ச்சிகளில்

"என்ன, இன்னும் பொங்கல் பண்ணலெயா?"
"ஏன் மாமா தூங்கி எந்திரிச்சி வந்து கத்தறீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எல்லாம் ரெடியாகிட்டிருக்கு"

சமையலறைக்கு போய் பார்த்தேன். அடுப்பை வேலைக்காரம்மா சுத்தம் செஞ்சிட்டு இருந்தாங்க. என்னடா இதுன்னு யோசிச்சிகிட்டிருக்கும் போது கதவு தட்டற சத்தம். போய் திறந்தால் குழந்தைகள் ட்யூசனிலிருந்து வந்துவிட்டார்கள்.

அவர்களை பார்த்ததும் வீட்டுக்காரி, சரி சரி, எல்லோரும்னு போய் முகம் கழுவிட்டு வாங்கன்னு சொல்லி, பூஜைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிச்சாங்க (அப்பாடா தொலைகாட்சிக்கு விடுதலை).

அட பொங்கலே இன்னும் தயாராகலெயே, அதுக்குள்ளே எப்படி பூஜைன்னு யோசிச்சிகிட்டிருக்கறப்ப வாழை இலையை இரண்டாக கிழிச்சி எடுத்துட்டு ஹாலுக்கு போனாங்க. அங்கெ இருந்த மின் சமைகலனை (Electric Cooker) திறந்தாங்க. உடனே என் சின்ன பெண் பொங்கலோ பொங்கல் என்று கூவ நானும் பொங்கலோ பொங்கல் என பின்பாட்டு பாட பொங்கலுக்கான பூஜை முடிந்தது. (நம்புங்க, புது பானைக்கு பதிலா மின்சமைகலன்)

பிறகென்ன கொஞ்சம் கொஞ்சம் பொங்கல் எல்லோருக்கும் மின்கலனிலிருந்து எடுத்து கொடுத்தார்கள்.

சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.
சாயங்காலம் வடை, சாப்பாடு என செஞ்சாங்க.அப்புறம் என்ன நண்பர்களும் தம்பிகளும் வர மின்சமைக்கலனில் செய்யப்பட்ட எங்க வீட்டு பொங்கல் இரவு விருந்துடன் அமர்க்களமாக முடிந்தது.

பொங்கலோ பொங்கல்.

20 comments:

said...

காலைல நாயர்கடை இட்லி, இட்லிய தொட்டோம்னா வழுக்கிட்டு ஓடுது.
மதியம் அஞ்சப்பர் பார்சல் சாப்பாடு. அதை ஒவ்வொண்ணா பிரிச்சி சாப்பிடறதுக்குள்ள மனுசன் வெந்துடுவான்.
இரவு தோசா மேளாவுல மூணு நாலு வகை, தொகையில்லாம போனது வேற விசயம்.

இப்படிதான் அந்த ஒரு நாளும் போச்சு.

அப்புறம் பொங்கல்?

என்னது பொங்கலா?

அட போங்கண்ணே குசும்புதான் உங்களுக்கு!

said...

வருகைக்கு நன்றி தம்பி.

நாயர் பொங்கல் கொடுக்கலெயா?

said...

அண்ணாச்சி எப்படியோ கடைசில பொங்கல் சாப்பிட்டேளே, இங்க பெங்களூர்ல இருந்துகிட்டே நிறைய பேரால பொங்கல் சாப்பிட முடிய்யலை,

எங்க வீட்டிலும் நோ பொங்கல், அம்மாக்கு உடம்பு சரியில்லை, அப்பாதான் சாதம், பால், சர்க்கரைனு மிக்ஸ் பண்ணி நிஜமாவே சர்க்கரைபோட்டு பொங்கல் பண்ணார்,

அது நாங்க வச்ச பேர்தான் பொங்கல்,

Anonymous said...

//சும்மா சொல்லக்கூடாது, நல்லாத்தான் இருந்திச்சி.//

மஞ்சூர், இங்கதான் நீங்க நிக்குறீங்க :-)

ஜூப்பர் பொங்கல் போங்க. இங்க நான் மதியம் சிவ்ஸ்டாருல போய் சர்க்கரை பொங்கல் வடை பாயசத்தோட அட்டகாசமான சைவ சாப்பாடு சாப்பிட்டேன். ஆனா பில்லு கொடுத்தது என்னமோ செண்பகராஜ்ங்குற நண்பன் தான் :-)

சாத்தான்குளத்தான்

said...

அது சரி.... கடைசி வரை ஹோட்டலில் சாப்பிட்ட பொங்கலைப் பற்றி வீட்டில் அண்ணியிடம் சொல்லவே இல்லையா?
;)

இது போல் கொண்டாட்டங்கள் மாறி வரும் காலச் சூழலுக்குத் தகுந்தாற் போல் மாறி விடுவது தவிர்க்கவே முடியாது. முன்பெல்லாம் பண்டிகை என்றாலே ஒரு வாரத்துக்கு முன்பே பலகார வேலைகள் தொடங்கி விடும். பண்டிகை நாளில் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பலகாரங்கள் பரிமாறிக் கொள்ளப் படும். இப்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலேயே திருப்தி அடைந்து கொள்ள வேண்டியது தான். அதுவும் ஒரு தூர தேசத்தில் உட்கார்ந்து கொண்டு நம் விழாக்களை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது.

said...

நன்றி ஜேக்

ஆமாம் ஒரு வழியா சாப்பிட்டாச்சி

said...

ஆசிப்

மஞ்சூர், இங்கதான் நீங்க நிக்குறீங்க :-)

இல்லேன்னா ராத்திரிக்கு சோறு கிடைக்காதில்லே.

said...

அன்பு ராஜா வனஜ்

அதெ பத்தி சொல்லியிருந்தா அடிவிழும்லே.

ஆனாலும் நம்ம வீட்டில் எல்லாவிழாவையும் கொண்டாடிடுவோம்.

said...

சூப்பர் அண்ணா :)
அண்ணிகிட்ட போட்டுக்கொடுக்கறேன் இருங்க அடுத்தமுறை இந்தியா வரும்போது ;), அண்ணியையும் நம்ம முத்தமிழ் குழுமத்தில் சேர்த்துவிடுங்க அண்ணா :)
ஸ்ரீஷிவ்...:)

said...

என்னையா ஆத்துக்காறி பார்க்கமாட்டா என்ற தைரியத்திலை தான் இப்படி எழுதி இருக்கிறியளோ?...
பொருங்கோ... நானே போட்டுக்குடுக்கிறன்.

பொங்கலோ பொங்கல்!

said...

ஆஹா அந்த மின்சமைகலனின் இயக்கி (அதாங்க பட்டன், நாங்களும் தமிழ்ப்'படுத்து'வோமில்ல!)சமையிலிருந்து சூடாக வை என மாறிய பொழுது பொங்கலோப் பொங்கல் என கூவி குலவையிட்டீர்கள் அல்லவா! :)

அப்புறம் இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுக்கக் கூடாதா?

said...

சிவாவும், கேப்பிட்டலும் என்னெ மாட்டிவிடணும்னு கங்கனம் கட்டிகிட்டிருக்காங்க போல.

said...

இலவச கொத்தனாரே இயக்கி என தமிழில் சொன்னதற்கு நன்றி. நம்மூரில் பொத்தான் என்றும் சொல்வார்கள்.

நீங்கள் சொல்வது போல மாற்றிவிடுகிறேன்.

said...

பொங்கலோ பொங்கல்.. எப்படியோ பொங்கிட்டீங்க :))

வெறும் மின்சமைக்கலன் பொங்கலோட விடாம, வடை வேற போட்டுக் கொடுத்திருக்காங்க, நீங்க அவங்களைக் குறை சொல்லவே முடியாது :)))

said...

நல்ல பொங்கல்!

அதையாவது வீட்டில செய்தார்கள் என்று சந்தோஷப் படுங்கள்!

:))

said...

பொங்கல் ஆகுமா இல்லையானு திகில் கதை எழுதிட்டீங்க.
நாட்கள் கழிந்தபின்
அனுப்பும் வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.

said...

தாமதமாக வந்து வாழ்த்து சொன்ன சிபி, பொன்ஸ் மற்றும் வல்லி சிம்ஹனுக்கு நன்றி.

said...

ரொம்பச் சீக்கிரமா வந்திருக்கேன். ஹிஹி, ஏன் இதை முத்தமிழில் போடவில்லை? அவங்களும் இருக்காங்களோ முத்தமிழில்? :))))))))))) நல்லாத்தான் "நக்கல்" சீச்சீ பொங்கல் கொண்டாடி இருக்கீங்க! :P

said...

தாமதாமாக வந்து பின்னூட்டங்கள் போட்ட அனைத்து நண்பர்களுக்கும் எப்பவும் போல கொஞ்சம் தாமதமான நன்றி. ஹீ. ஹீ....

Anonymous said...

பொங்கலை விடுங்க, உங்க மனைவி "மாமா" என்றழைக்கும் அன்பை பாருங்க :)