கரிசனம்
அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கி பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துக்கொண்டிருந்தேன்
தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்.
திறமை வாய்ந்த இக்கவிதாயினி மிகவும் குறைவாகவே எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய எழுதவேண்டும். சமீபத்தில் இவரது கவிதைகள் ஆனந்தவிகடனில் வந்தன என்பது கூடுதல் செய்தி. இவரது ஒற்றை ரோஜா என்னும் கவிதையை படியுங்கள் உங்களுக்கே புரியும்.
வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன வாழ்வின் நிறங்கள் ! நிறமில்லாத மலர்களா? நிறங்கள் என தன் வலை மலரை குறிப்பிடும் செல்வநாயகி சக்தி என்ற மற்றொரு வலைமலரையும் நடத்திவருகிறார்.
அரவமில்லாத மௌனங்களில்
புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்
மனதில் அலைந்துகொண்டிருக்கிறது
ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை
என வித்தியாசமாக ஆசைப்படும் செல்வநாயகி ஒரு சிறந்த பேச்சாளர் என்பதையும் இங்கே குறிப்பிட்டேயாகவேண்டும். இவரது நான் ரசித்த பயணம் படிக்க வேண்டிய ஒரு நல்லப் படைப்பு.
காகித மலர்கள் என்று தன் வலைமலரை தன்யா குறிப்பிட்டாலும் அவை உண்மையிலேயே காகித மலர்களல்ல. ஓலமடங்கிய வெளிகளில் என தொடங்கும் கவிதையில்
குளிர் இரவுகளில்
மெல்லிய கம்பளிப் போர்வையைப் போன்ற
மிருதுவான உன் உடலை,
என்னைப் போர்த்தும் விரல்களை
கதகதப்பான வார்த்தைகளை
தேடித் தேடி
சலிப்புறுகிறது மனசு
என்னும் வரிகளே எடுத்துக்காட்டு. தொலைவில் கேட்கும் உன் குரலை என் வீட்டுச் சாளரங்கள் தடுக்கின்றன என்னும் கவிதையும் படிக்கவேண்டிய ஒரு கவிதை.
விடியலே!
உன்னை என்னால் பார்க்க முடிகிறது.
ஏனெனில்
நான் விழித்துக் கொண்டேன்
என கவிதை மூலம் விழித்துக்கொள்ளவைக்கும் ஸ்வாதியின் மைத்துளிகள் மலரிலிருந்து உதிரும் உதிரிப்பூக்களை போல. தொடர்ந்து எழுதிவரும் இவர் நல்லதொரு கவிதாயினியாக விரைவில் வலம் வருவார் என எதிர்ப்பார்க்கலாம். இவருடைய தமிழ் பிரவாகம் என்னும் பதிவில் தமிழ் பிரவாகம் குழுமத்தில் பலரும் எழுதிவரும் படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கண்ணம்மாவை பாரதி குழந்தையாகவும் காதலியாகவும் மட்டும் தான் பார்த்தான்..ஆனால் நான் என்னுடைய கண்ணம்மாவை மேலும் ஒரு படியேற்றி வாழ்வியலின் சகலமும் உணர்ந்த பெண் போராளியாகத் யுத்த பூமியில் அடியெடுத்து வைக்க விட்டிருக்கிறேன்! என கண்ணம்மா என்ற தன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டிருக்கும் ஸ்வாதி இங்கும் பல எழுச்சியூட்டும் கவிதைகள எழுதியிருக்கிறார்.
உலகிலுள்ள அனைவரும் எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும். என இருந்தால் எப்படி இருக்கும். அந்த எண்ணத்தையே தன் வலைமலரின் தலைப்பாக்கியிருக்கும் ஷைலஜாவின் வலைமலரில் உங்களுக்கு கவிதை, கட்டுரை, சிறுகதை என கதம்பமாலையாக எல்லாம் கிடைக்கும். அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஒரே நோக்கில் எழுதிவரும் இவரது ஒவ்வொரு படைப்பும் படிக்கும் ஒவ்வொருவருடைய முகத்திலும் புன்னகையை தோற்றுவிக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுவே இவரின் வெற்றியின் ரகசியமும் கூட. தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை உள்ள இவர் ஒரு சிறந்த பாடகி என்பதும் வர்ணனையாளர் என்பதும் கூடுதல் தகவல்கள். உன்னை நினைக்கையிலே என்னும் இவரது கவிதை சமீபத்தில் அன்புடன் குழுமத்தில் நடந்த ஒலிவடிவ கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளது. ஷைலஜாவின் சிறு கவிதை ஒன்று:
மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நில மகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.
மலர்கள் அதிகமாக மலர்வது இளவேனில் காலத்தில் தான். இளவேனில் என தன் வலைமலரை குறிப்பிடும் தமிழ் நதி ஒரு வளர்ந்து வரும் கவிதாயினி. இவரது கவிதை தொகுப்பு சமீபத்தில் மதுரை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டிருக்கிறது எனக் கேள்விப்பட்டேன். ஆனந்த விகடனிலும் இவரது கவிதைகள் வந்துள்ளன. சமீபக்கால ஈழத்து கவிதாயினிகளில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். மெல்லிய சோகம் இழையோடும் இவரது கவிதைகளை படித்தப்பின் ஒரு கணமாவது நம்மை அதிர செய்யும் என்பது நிதர்சனம்.
காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
இவரது நதியின் ஆழத்தில் என்னும் கவிதையை பாருங்கள் புரியும்.
மலர்களை ரசிக்க ஒரு மனம் வேண்டும் அதுவும் மனம் நமது உண்மை முகத்தை வெளிப்படுத்தும் வல்லமை படைத்தது. அதையே தன் வலைமலரின் தலைப்பாக வைத்திருக்கும் வேதாவின் மனம் - உண்மை முகம் வளர்ந்து வரும் ஒரு கவிதாயினியை நமக்கு வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்கிறது. தனது மனதில் தோன்றுபவற்றை கவிதைகளாக கொட்டிவிடும் இவரது சமீப கால கவிதைகளில் நல்ல முதிர்ச்சியும் வளர்ச்சியும் தெரிகிறது. சீக்கிரம் கேட்டுவிடு எனக்கான கேள்வியை என்னும் அவரது கவிதையில்:
அலைபேசி அரட்டைகளில்
அபிரிதமான சொற்களை
கடன் வாங்கியும் பேசதயங்காத
நம் அதரங்கள்
ஏனோ
சந்திப்புகளின் போதுமட்டும்
ஊமையாகி விடுகின்றன
என கவிமொழி பேசுகிறார். இவரது வேதா என்னும் மற்றொரு வலைமலரில் பல சுவையான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
3 comments:
உங்கள் அன்பிற்கு நன்றி.
ஏங்க நீங்க பரமக்குடிக்குப் பக்கத்தில் இருக்கும் மஞ்சூர்காரரா???
மிக அழகிய கவிதை. நிறைய எழுதுங்கள்.
Post a Comment