தீபாவளி என்றவுடன் எனக்கு என் சின்ன வயதில் கொண்டாடிய பல தீபாவளிகள் இனிய நினைவுகளாக வருவதை ஏனோ தடுக்கமுடியவில்லை. இப்படித்தான் ஒரு தீபாவளி நாளில் நடந்த ஒரு சம்பவம்
தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.
என்றாவது ஒரு நாள் தான் இட்லி என்பதால் எல்லா வீடுகளிலும் மாவு அரைக்கும் ஆட்டாங்கல் இருப்பதில்லை. அதனால் இருக்கும் சிலரது வீடுகளில் போய் வரிசையில் காத்திருக்கவேண்டும். எங்க அம்மா காலையிலேயே ஊறவைத்த அரிசி உளுந்து முதலியவற்றை என்னிடம் கொடுத்து அங்கு நிற்க செய்துடுவாங்க. நானும் பொறுமையாக காத்திருப்பேன். அதில் ஒரு சுகம்.
ஏன்னா அடுத்த நாள் இட்லி கிடைக்குமே. பிறகு அம்மா வந்து மாவரைத்து எடுத்து செல்வதற்குள் இரவு ஆகிவிடும்.
இதற்கிடையில் தையல்காரரிடம் போய் துணி தைத்தாகிவிட்டதா என பார்க்கவேண்டும். நம்ம தையல்காரர்களுக்கு விசேஷ்நாட்களில் தான் அதிக துணி வருவதால் ரொம்ப கடைசியாத்தான் எங்கள் துணி கிடைக்கும். சில நாட்களில் பொத்தான் போடும் வேலையும் நானே செய்து துணியை வாங்கி வருவேன்.
கையில் துணி கிடைப்பதற்கு சில சமயம் பத்து மணி கூட ஆகிவிடும் அதுவரை குளிரில் காத்திருந்து வாங்கிட்டு வந்தால் வீட்டில் அப்பாவிடம் திட்டு வேறு வாங்கவேண்டும்.
அப்போழுதெல்லாம் எட்டு மணிக்கே ஊர் அடங்கிவிடும். இப்பத்தான் தொலைக்காட்சி தொடர் வந்தப்பிறகு பதினோரு மணி வரை யாரும் உறங்குவதில்லை.
இரவு முழுவதும் தூக்கமே வராமல் புரண்டுக்கொண்டிருப்போம். அம்மா அதிகாலை மூணு மணிக்கே எழுந்து இட்லி போட ஆரம்பிச்சிடுவாங்க. கூடவே நானும் எழுந்து அம்மா பக்கத்தில் தூங்கி வழிந்துக்கொண்டே அடுப்பருகில் உட்கார்ந்திருப்பேன்.
மணி ஐந்தானவுடன் தூரத்தில் இருக்கும் வினாயகர் கோயிலின் ஒலிப்பெருக்கியில் சுப்ரபாதம் கேட்க ஆரம்பித்துவிடும். உடனே புதுத்துணி போடும் ஆசையில் அரக்கப்பரக்க குளித்துவிட்டு தயாராகிவிடுவதே வாடிக்கை.
இப்படித்தான் ஒரு நாள் குளித்துவிட்டு துணி எடுப்பதற்காக அடுத்த அறைக்குள் போனேன். அங்கு மின்விளக்குக்கு பொத்தான் கிடையாது. மின் விளக்கை போட அதனுடன் இணைந்த ஃப்ளக்கை இணைக்கவேண்டும். பொதுவாக விளக்கு வெளிச்சத்தில் தான் இணைப்போம். மேலும் எனக்கு உயரம் போதாதால் அப்பா தான் இணைப்பார். அப்பா அந்த அறையில் தான் படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறார். எழுப்பினால் திட்டுவார் என்பதால் மிகவும் அமைதியாக கட்டிலில் மீது ஏறி நின்று ஃப்ளகை சொருகப்போனேன். ஆனால் எனது அவசரத்திலும் பரப்பரப்பிலும் ப்ளக்கின் பின்னை மாற்றி சொருகி விட்டேன். சரியாக சொருகாததால் லைட் எரியவில்லை. என்னடா இது என குழம்பி போய் ஆட்டி ஆட்டி பார்த்ததும் ஃப்ளக்கின் ஒரு பின் உடைந்து உள்ளே மாட்டிவிட்டது.
என்ன செய்வது என்று புரியவில்லை. அப்பாவை கூப்பிட்டால் திட்டுவார். சரி என ஒரு முடிவோடு மின்சாரம் பாய்வது பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அதை பிடுங்குவதற்காக கையில் தொட்டேன். அவ்வளவு தான் !
அம்மா!! என்ற சத்தத்துடன் அப்பா மீது விழுந்தேன். திடீரென இப்படி நேர்ந்ததால் அப்பாவும் அலறி அடித்து கொண்டு எழ.. இருட்டில் ஒன்றும் தெரியாமல்..... ஒரே குழப்பம்... அம்மா அரக்க பரக்க உள் அறையிலிருந்து விளக்கை எடுத்து வந்து பார்க்க.. கட்டிலின் முனை என் தலையில் பட்டு வீக்கத்துடன் நான் அழுதுக்கொண்டிருக்க, அப்பாவுக்கு வந்த கோபத்தில் இன்னும் இரண்டு அடி எனக்கு கொடுக்க.... இப்படியாக ஒரு அருமையான மறக்க முடியாத தீபாவளி.
அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
Wednesday, November 07, 2007
தீபாவளி - மலரும் நினைவுகள்
Posted by மஞ்சூர் ராசா at 9:40 AM
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்லா அடி வாங்குனீங்களா?
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.
உங்களின் இந்தக் கட்டுரையைப் படித்தவுடன், நானும் எனது இளமைக்கால தீபாவளியைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றுகிறது. நல்ல கட்டுரை.
நீங்க எந்த மஞ்சூர்? பரமக்குடி மஞ்சூரா?
அன்பு உமையணன்
இது நீலகிரியில் இருக்கும் மஞ்சூர்.
மஞ்சூர ராசா, பொதுவாக இம்மாதிரி மலரும் நினைவுகளை மறக்க முடியாது. நினைத்துப் பார்த்து மகிழ வேண்டும்.
நேரமிருப்பின் எனது பதிவையும் படியுங்களேன். கருத்துச் சொல்லுங்களேன்.
http://pathivu.madurainagar.com/blog-post_07.html
இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்
//Baby Pavan said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மாம்ஸ்//
கொழந்தே மாமானு சொல்லக்கூடாது, தாத்தானு சொல்லக்கூடாது.
Post a Comment