Sunday, June 05, 2005

குவைத்தில் லியோனியின் பட்டிமன்றம்

சமீபத்தில் லியோனி தன் பரிவாரங்களுடன் குவைத்தில் பட்டிமன்றம் நடத்த வந்திருந்தார். அவர் ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்ததால் இங்குள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக இருந்தார். குவைத் செளத் இண்டியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

லியோனி என்றாலே ஆழமான கருத்துகளை முன் வைக்காது, சினிமா சம்பந்தப்பட்டே தன் பட்டிமன்றத்தை நடத்தி செல்வார் என்றக் கருத்தை பொய்யாக்கும் வண்ணம் அவரது பட்டிமன்றம் இருந்தது

விசாப் பிரச்சினைகளால் லியோனி வருவாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. அப்படியான ஒரு வதந்தி உருவாகியிருந்தது.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பல நண்பர்களை சந்தித்தப் பொழுது பலரும் இதே கேள்வியைக் கேட்க, அவருக்கும் எப்படியோ ஆகிவிட்டது.

சிலர் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளைக் கூட திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

இருந்தாலும் நிகழ்ச்சி அன்று, வாய் மொழி விளம்பரம் மூலம் எதிர்ப்பார்த்ததற்கும் மேலேயே ரசிகர்கள் வந்திருந்தனர்.

இந்த முறை, முதல் முறையாக லியோனி குழுவினர் தம் இயல்புக்கு மாறாக சினிமாவை ஒதுக்கிவிட்டு, நடப்பு நிகழ்ச்சிகளையும், தமிழிலக்கியங்களையும் மேற்கோள் காட்டி மிக அருமையாக உரையாற்றினர்.

ரசிகர்களின் தொடர்ந்த கரகோஷமும், ஆரவாரமும், சிரிப்பும் பட்டிமன்ற அங்கத்தினர்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தர, இரண்டரை மணி நேரத்தில் முடிய வேண்டிய நிகழ்ச்சி, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

ரசிகர்களின் இந்த அருமையான ரசனை லியோனி குழுவினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்லவேண்டும். அதை அவர் முகத்தில் காண முடிந்தது.

பின்னர் லியோனி குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அனைவரின் பேச்சிலும் மிகச் சிறப்பானதொரு பட்டிமன்றத்தில் பங்குப் பெற்றது குறித்தான பெருமிதம் இருந்தது.

லியோனியும் தான் நடத்தியப் பட்டிமன்றங்களில், தனக்கு ஆத்ம திருப்தியைத் தந்த சில பட்டிமன்றங்களில் இந்த குவைத் பட்டிமன்றம் மிகவும் முக்கியமானது என்றார்.

திரு லியோனி தமிழ் இலக்கியத்தையும், நடப்பு நிகழ்வுகளையும் முன் வைத்து இதுபோல பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழ் இலக்கியத்தை பாமரனுக்கும் எடுத்து செல்வதுமட்டுமல்லாது,
தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும் என்றும் எதிர்நோக்குகிறேன்.

0 comments: