Tuesday, June 21, 2005

வாடி வாசல்

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா எழுதிய குறுநாவல்.

இந்த குறுநாவலை நம்மில் பலர் படித்திருக்கலாம். ஆனாலும் ஒவ்வொருமுறை படிக்கும் பொழுதும் ஒரு புது உணர்வு ஏற்படுகிறது என்பது நிஜம்.

இந்த நாவலின் மையக்கருத்து ஜல்லிக்கட்டுப் பற்றியது. மாடு அணைவதை இவ்வளவு, விவரமாகவும், விறுவிறுப்பாகவும், அழகாகவும் யாராவது இதுவரை கையாண்டிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு ஒருநாள் கிரிக்கெட் மாட்ச் (வேண்டாம்) ஒரு கால்பந்தாட்ட பைனலை பார்ப்பது போன்ற உணர்வுடன் நம்மைக் கொண்டு செல்கிறது.

வட்டார வழக்கில், அடுத்து என்ன நடக்கும் என நம்மை எதிர்ப்பார்க்க வைத்து இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்லும் லாவகத்திற்காக ஒரு சபாஷ்

மாடு அணைவது ஐந்தறிவு மிருகத்திற்கும், மனிதனுக்கும் நடக்கும் நேரடி யுத்தம் இதில் யார் ஜெயிப்பார்கள் என்பதை விட அந்த நேரத்தில் ஏற்படும் மனபோராட்டங்கள் மிக முக்கியமானவை.

இடையிடேயே அந்த காலத்தில் எவ்வளவு திறமைசாலியாக இருந்தாலும் பெரிய மனிதர்களுக்குமுன் எவ்வளவு பணிந்து நடக்க வேண்டும் என்பதையும் மிக நுணுக்கமாக எடுத்து சொல்கிறது.

ஜல்லிக்கட்டைப் பற்றி நமக்கு ஏற்படும் பல சந்தேகங்களை எளிய தமிழில் விளக்குகிறது.

40 வருடங்களுக்கு முன் வந்த இந்த நாவல் இன்னும் அழியாபுகழோடு இருப்பதற்கு காரணம் அதன் எளிய தமிழ் நடை மற்றும் களம்.

அரட்டை அரங்கம்

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவி குவைத் அரட்டை அரங்கத்தில் என் புத்திரி பேசுகிறாள் என்ற தகவல் கிடைக்க, சரி வேலைக்கு கொஞ்சம் லேட்டா போனாலும் பரவாயில்லெ எப்படியாவது பார்த்துவிடுவது என்று முடிவு செய்தேன்.

ஞாயிறு காலை
நண்பரின் போன், என்னப்பா உம்பொண்ணு அரட்டை அரங்கத்திலே பேசறா, பாக்கபோறயா, இல்லெ, இன்னிக்கும் வேலெ வேலென்னு போயிருவியா என்று குரல் கொடுத்தார்.

சனிக்கிழமையிலிருந்தே வீட்டிலெ சன் டிவி தகராறு செஞ்சிட்டிருந்தது. சரி ஞாயிற்றுக்கிழமை காலையிலே சரி ஆயிடும்ன்னு நினெச்சோம், ஆகலெ, சரி நண்பர்கள் வீட்டிற்குப் போய் பாக்கலாம்னு நினெச்சா,
ஆபிஸிலிருந்து தொல்லைபேசி, உடனே வரசொல்லி, 8.30க்கு ஒளிப்பரப்பு, இப்ப மணி 7.50, ஆபிஸுக்கு அடிச்சி பிடிச்சிப் போய் சேந்தா மணி 8.15,
அங்கிருந்து பேங்க் போகவேண்டி இருந்தது, மறுபடியும் ஓட்டம், பேங்க் வேலெ முடிச்சிப் பார்த்தா மணி 8.26, இன்னும் 4 நிமிசந்தான் இருந்தது.
சரி பக்கத்திலிருக்கிற திருச்சி ஓட்டல்லெ போய் பாக்கலான்னு அங்கெ போனா அவங்க 12 மணிக்குத்தான் கார்டு சிஸ்டத்திலெ வரும்னுட்டாங்க.
மண்டெக்காஞ்சி போய் இன்னொரு ஓட்ட்ல்லெ போய் பார்த்தா அங்கெயும் இல்லே. வெயில் வேறெ கொளுத்துது
நொந்து நூலாகி போயி, சரி ஒரு இட்லி வடையாவது சாப்பிடலான்னு ஆர்டர் கொடுத்துட்டு நிக்கும் போது நம்ம நண்பர் ஒருத்தர் வந்தாரு,
என்னப்பா இந்த நேரத்திலெ இங்கே?
இன்னிக்கு அரட்டை அரங்கம் பார்க்காலம்ன்னு வந்தேம்பா,
எம்பொண்ணு பேசுது அது என்னாடான்ன எங்கேயும் வர்றதில்லெ
அப்படியா? எனக்கு தெரியவே இல்லெயே, முபாரக்கியா ஹோட்டலுக்கு போனா இருக்குமேன்னாரு.
ஆர்டரே அப்படியே கேன்சல் செய்துட்டு முபாரக்கியா ஓடுனா அங்கெ ஜீ ம்யூசிக் ஓடுது.
அப்புறம் ஓட்டல்காரங்கிட்டெ பேசி
அவன் சன் டிவி போட்டப்பொ 8.47.
பொண்ணுப் பாதி பேசி முடிஞ்சிருச்சி,
மீதி பாதியெ பார்த்துட்டு,
இட்லி வடெயெ சாப்ட்டுட்டு வந்தேன்.
ஏதோ பொண்ணு மூஞ்சியெயாவது பாத்தோமெங்கற சந்தோசம்தான்.

Monday, June 20, 2005

மூன்றரை வருட அவஸ்தை

நேற்று பயங்கர வெயிலில் ஒரு முக்கியமான வேலையாக அலைந்துவிட்டு(காரில்தான்) (வெயில் மட்டுமல்ல, சூடான மணல் தூசியும் சுமார் 55 டிகிரிஇருக்கலாம்). மனைவியையும் அவங்க அலுவலகத்திலிருந்து பிக்கப் செய்துக்கொண்டு, இனி எங்கே வீட்டுக்கு போய் சமையல் செய்து சாப்பிடமுடியும் (2 மணி) என்று ஓட்டலில் சாப்ப்ட்டுவிட்டு கிளம்பும் போது,

மனைவி: நீங்க போங்க, நா இங்கே இருக்கற தோழியைப் பார்த்துவிட்டு(தோழியிடமிருந்து இரண்டு முறை தொல்லைப்பேசி வந்துவிட்டது) அப்படியே உங்க தம்பி வீட்டுக்கு போய் மெட்டி ஒலி பார்த்துட்டு வந்து விடுகிறேன். நம்ம வீட்லெ வர்றதில்லெ
மறுத்துப் பேச முடியுமா நான். சரி, சீக்கிரம் வந்துரு.

தோழியின் வீட்டில் மனைவியை இறக்கிவிட்டு, வீட்டிற்கு வந்து அப்பாடா கொஞ்ச நேரம் படுக்கலாமேன்னு கண்ணெ மூடி ஒரு அஞ்சி நிமிசம் இருக்கும்,
வீட்டு தொல்லைபேசி கிணுகிணுத்தது
ஹலோ, அண்ணா, நா சந்திரசெகரண்ணா,
ஒரு முக்கியமான விசய்மண்ணா,
நீங்க வீட்லெதானெ இருக்கீங்க
ஆமா என்ன விசயம்?
இல்லெண்ணா நா நேரில் வந்து பேசறேன்!
சரி வா.
பேசியை வைத்துவிட்டு மறுபடியும் படுத்தேன்.
லேசாக கண்ணயர்ந்து பத்துநிமிடம் கழித்து மறுபடியும் தொல்லைபேசி
அண்ணா நாந்தான் சந்திரசேகர்,
அண்ணா உங்க வீட்டிலெ மெட்டி ஒலி வருதா அண்ணா?
இல்லெ
அப்படியா, அக்கா எங்கே?
தம்பி வீட்டுக்கு போயிருக்கா, ஆமா நீ ஏதோ விசயம் பேச வர்றேன்னுசொன்னியே?
அது ஒண்ணுமில்லெண்ணா, மெட்டிஒலி பாக்கணும்னுதான்!
பேசி வைக்கப்பட்டது.
(என்னுடைய நிலைமெ எப்படி இருக்கும்)

மறுபடியும் 10 நிமிடம் கழித்து,
கதவு தட்டும் சத்தம்.
எரிச்சலுடன் தூக்கக்கலக்கத்தில் கதவைத் திறந்தால்,
வீட்டுகாரியும், தோழியும்.
அவங்க வீட்லெ வரலீங்க, நம்ம வீட்லெவர்தா?
டிவியை ஆன் செய்தாள்.
என் துரதிர்ஸ்டம் இரண்டுநாள் வராத சன் டிவி வந்தேவிட்டது.
என்ன செய்ய, ஹாலை விட்டு பேசாமல் உள்ளே போய் படுத்தேன். தூக்கம்வந்தால்தானே!?
கொடுமை...

கொஞ்ச நேரம் புரண்டு புரண்டுப் படுத்துவிட்டு, முடியாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு, மனைவியிடம் டீ போட சொன்னா கோவிச்சுக்குவாளெ என்று
நைசா, என்ன ஆச்சு என்றுக் கேட்டால்,
க்ளைமாக்ஸ் சரியில்லெ என்றாள்.
பிறகு ஒரு வழியா அவளே எழுந்து டீ போட்டுக் கொடுத்துவிட்டாள்
பின்குறிப்பு: மெட்டி ஒலி முடிந்த கையோடு புது தொடர் ஆரம்பிக்கிறார்களாம் (செத்தோமடா சாமி)
இதுக்கு வைரமுத்து, கலைஞர், மனோரமா இவர்களின் தலைமையில் விழாவேறெ!.

ஐய்யயோ என்ன ஒரே கூட்டமா வருது....
கையில் என்னன்னமோ இருக்குதே,?
அட நம்மளெத்தான் மொத்த வர்றாங்க டோய்!..
விடு ஜூட்.....

Sunday, June 05, 2005

குவைத்தில் லியோனியின் பட்டிமன்றம்

சமீபத்தில் லியோனி தன் பரிவாரங்களுடன் குவைத்தில் பட்டிமன்றம் நடத்த வந்திருந்தார். அவர் ஏற்கனவே இரண்டு முறை வந்திருந்ததால் இங்குள்ளவர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக இருந்தார். குவைத் செளத் இண்டியன் கல்ச்சுரல் சொஸைட்டியின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைப்பெற்றது.

லியோனி என்றாலே ஆழமான கருத்துகளை முன் வைக்காது, சினிமா சம்பந்தப்பட்டே தன் பட்டிமன்றத்தை நடத்தி செல்வார் என்றக் கருத்தை பொய்யாக்கும் வண்ணம் அவரது பட்டிமன்றம் இருந்தது

விசாப் பிரச்சினைகளால் லியோனி வருவாரா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. அப்படியான ஒரு வதந்தி உருவாகியிருந்தது.

நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பல நண்பர்களை சந்தித்தப் பொழுது பலரும் இதே கேள்வியைக் கேட்க, அவருக்கும் எப்படியோ ஆகிவிட்டது.

சிலர் தாங்கள் வாங்கிய டிக்கெட்டுகளைக் கூட திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

இருந்தாலும் நிகழ்ச்சி அன்று, வாய் மொழி விளம்பரம் மூலம் எதிர்ப்பார்த்ததற்கும் மேலேயே ரசிகர்கள் வந்திருந்தனர்.

இந்த முறை, முதல் முறையாக லியோனி குழுவினர் தம் இயல்புக்கு மாறாக சினிமாவை ஒதுக்கிவிட்டு, நடப்பு நிகழ்ச்சிகளையும், தமிழிலக்கியங்களையும் மேற்கோள் காட்டி மிக அருமையாக உரையாற்றினர்.

ரசிகர்களின் தொடர்ந்த கரகோஷமும், ஆரவாரமும், சிரிப்பும் பட்டிமன்ற அங்கத்தினர்களுக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தர, இரண்டரை மணி நேரத்தில் முடிய வேண்டிய நிகழ்ச்சி, கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

ரசிகர்களின் இந்த அருமையான ரசனை லியோனி குழுவினருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்றே சொல்லவேண்டும். அதை அவர் முகத்தில் காண முடிந்தது.

பின்னர் லியோனி குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அனைவரின் பேச்சிலும் மிகச் சிறப்பானதொரு பட்டிமன்றத்தில் பங்குப் பெற்றது குறித்தான பெருமிதம் இருந்தது.

லியோனியும் தான் நடத்தியப் பட்டிமன்றங்களில், தனக்கு ஆத்ம திருப்தியைத் தந்த சில பட்டிமன்றங்களில் இந்த குவைத் பட்டிமன்றம் மிகவும் முக்கியமானது என்றார்.

திரு லியோனி தமிழ் இலக்கியத்தையும், நடப்பு நிகழ்வுகளையும் முன் வைத்து இதுபோல பட்டிமன்றங்கள் நடத்த வேண்டும் என்றும், அதன் மூலம் தமிழ் இலக்கியத்தை பாமரனுக்கும் எடுத்து செல்வதுமட்டுமல்லாது,
தமிழ் வளர்ச்சிக்கும் ஆக்கப்பூர்வமாக சேவை செய்ய வேண்டும் என்றும் எதிர்நோக்குகிறேன்.

Wednesday, June 01, 2005

கனவினில் மரணம்

கனவினில் நான் மரணிக்கிறேன்
என் மரணத்தை நானே பார்க்கிறேன்

கனவில் மரணம் வித்தியாசமானது அதிலும்
நம் மரணத்தை நாமேப் பார்ப்பது

கனவு மரணம் பயமில்லாதது அதைப்
பார்த்து நாம் அழுவதில்லை

கனவினில் மரணம் பார்த்து விழித்தப் பொழுது
நிஜமரணத்தின் அச்சம் மனதில் சிறுதுளியாய்..

அறிமுகம்

பல வலைப்பூக்களை தொடர்ந்து படித்தப் பொழுது ஏன் நாமும் ஒரு வலைப்பூவைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தினால் உதித்ததுதான்
இந்த என் பக்கம்.

இதுவரை குழுமங்களில் மட்டுமே எழுதி வந்த நான் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகின்றேன். தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.

உங்கள் விமர்சனங்கள் எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்கும்.

நன்றி